அடுத்த தலைமுறை
கோலி விளையாடிவிட்டு, அழுக்கு மணல் கையோடு
வீட்டினில் சாப்பிட்டிருக்கிறேன் தின்பண்டம்...
காத்தாடி விடுவதற்கு, பக்கத்துக்கு வீட்டு ஒற்றை சுவர் நின்று
விழுந்து அடிபட்டிருக்கிறேன் பலமாக......
எப்போதாவது படித்துவிட்டு, பரிட்சையில் மார்க் எடுத்து
ஒப்பேற்றியிருக்கிறேன் என் கல்வியறிவை.....
அவ்வப்போது வந்துபோகும் கடும் காய்ச்சல், உடன்
மலேரியா,டைபாய்டு, அம்மை நோய்கள்...
பெரிய வயது பையன்களுக்கு ஈடாக தெருவினில்,
கிரிக்கெட் விளையாடி உடைந்து போயிருக்கிறது என் மூக்கு...
சாப்பாடு தூக்கம் இன்றி, எப்போதும் விளையாட்டு,
வீட்டிலுள்ள கஷ்டங்கள் தெரியாத பொழுதது...
சிறுவர், சிறுமி பேதமின்றி அனைவருடன் குதூகலம்,
அக்கா, அண்ணனுடன் அடிக்கடி போட்ட சண்டைகள்....
அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் எப்போதும் நுழையலாம்,
தெரிந்தவர் தரும் உணவுகளை அச்சமின்றி தின்ற காலம்....
படாடோபம் அற்ற உடைகள் போதும்,
சில சமயங்களில் அதில் கிழிசல்கள் இருந்திருக்கும்.....
பண்டிகை காலங்களில் கொண்டாடுவோம் எங்கோ,
வீட்டுக்கு வந்திடுவோம் உண்பதற்கு மட்டும்...
விளையாடி, ஊர்ச்சுற்றி பொழுது கழிந்த காலங்கள்,
கவலையின்றி, கலக்கமின்றி வாழ்ந்த சிறு பருவங்கள்....
இவை எதற்கும் சம்பந்தமின்றி வாழ்கிறான் என் மகன்,
மேற்சொன்ன கதை கேட்டால் வீரனாய் பார்க்கிறான் என்னை...
அழுவதா சிரிப்பதா தெரியவில்லை...
வாழ்க்கையின் மாற்றங்கள் புரியவில்லை....
மீனுக்கு வளையமிட்டு கற்று கொடுக்கிறோம் நீச்சலை...
குயிலுக்கு வகுப்பெடுத்து பாடச் சொல்கிறோம் கூவலை...
மயிலுக்கு குறிப்பெடுத்து ஆடச் சொல்கிறோம் ஆடலை..
சிங்கத்தை சப்பணமிட்டு சொல்லிக்கொடுக்கிறோம் கர்ஜனையை..
காலத்தின் கொடும் மாற்றத்தில்.......
எங்கள் கை ரிமோட்டில் மட்டுமே இயங்கி கொண்டிருக்கின்றன....
உயிருக்கும் மேலான எமதருமை ரோபோக்கள்.