இன்றைய நிலை

இன்றைய நிலை
வாழ்வின் மாற்றங்களை வரவேற்று..,
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்..!
புன்னகையின் பொழுதுகளை புறம்தள்ளி,
புதுமொழியின் புனைவுகளை வரவேற்கிறோம்..!
கனவுகள் கண்ணாடியின் பிம்பமாய்..!
காலங்கள் அர்த்தமற்ற கணங்களாய்..!
தொலைந்து போகும் விநாடிகளுடன்..,
தோன்றாமல் போகிறது தனிமனித எண்ணங்களும்..!
விரையும் பறவையின் சிறகாய்...
விஞ்ஞானத்தில் உலவுகிறோம்..!
விழும் கணங்களில் விஞ்ஞானம்..,
விரிப்பதில்லை தன் சிறகை..!
உண்மைகள் ஒளிந்துகொள்கிறது..,
உரையாடும் கணங்களில்..!
பண்புநலனை விதைத்தவர்களின் கல்லறையில்.,
பாரமானது "காய்ந்த மலர்க்கொத்து"..!
பணத்தை ஈந்தவர்களின் காலடியில்.,
வர்ணமலர்கள் "அர்ச்சணைப் பூக்களாய்"..!
வாழ்வின் படிநிலைகளோடும் .,
வாடிப்போன எண்ணங்களை சுமந்துகொண்டும் - சிலர்
ஊடகங்கள் பொழுதுபோக்காய் உலாவர..,
ஊடுருவும் நிசப்தங்களின் அலைகள்..!
களங்கரை விளக்கின் சுடர்இருக்க..,
மின்மினியின் ஒளியை வேண்டும் - சிலர்
கடல்நீர் விரிந்திருக்க..,
கானல்நீரை வியாபிக்கும் - சிலர்..!
வாழ்வதற்கான வாழ்க்கைகள்..,
வழிகாட்டுதல்கள் இருந்தும் வீணாகிறது..!
மகிழ்வதற்கான தருணங்கள் இருந்தும்..,
மறைந்துபோகிறது மனித உணர்வுகள்..!
எதிர்கால தேவையின் உந்துதல்கள்..,
எதிரொலிக்கின்றன இடையூறுகளாய்..!
இயற்கையின் இருப்பிடங்கள் தொலைந்தன..!
விடுபட்ட வேளாண்மையின் வேர்கள்..,
துளிர்விடும் கட்டிடங்களுக்கு நிகராய்..!