வாழ்க்கையே உனது மதம்

வாழ்க்கையே உனது மதம்.
=====================================ருத்ரா


வாழ்க்கை ஒரு பாடம் என்றால்
பள்ளிக்கூட நினைப்பு வந்து
உனக்கு கசக்கிறது.

வாழ்க்கை உன் லட்சியம் என்றால்
ஓடுகின்ற குதிரையின் முன்னே
"கேரட்" கட்டி தொங்க விட்டு
அதன் வாய்க்கு எட்டமுடியாத‌
ஒரு இடைவெளியையே
நீ துரத்திக்கொண்டு
ஓடும் நிலையே உனக்கு மிச்சம்.

வாழ்க்கை உன் கனவு என்றால்
வாழ்க்கை பற்றிய கவலையே
உன்னை அரித்து தின்றதில்
நல்ல தூக்கம் எங்கே கிட்டுகிறது?

வாழ்க்கை உன் வேதம்.
நிறுத்துங்கள் நிறுத்துங்கள்!
வேதமா?
ஏதோ விளக்கெண்ணெயில்
வெண்டைக்காயை வதக்கிய மாதிரி
குரல் கொடுத்துக்கொண்டிருப்பார்களே
அதைத்தானே சொல்லுகிறீர்கள்.
அய்யோ சாமி
வேண்டவே வேண்டாம் அந்த ரோதனை.

குறளே உன் வாழ்க்கை!
கடுகைத்துளைத்து அதில்
ஏழ்கடலைப்புகட்டியிருக்கிறாராமே
வள்ளுவர்!
அந்த சமாச்சாரமா?
நாங்க இன்னும் தமிழனே இல்லீங்களே
அப்புறம் தானே தமிழ்னா என்னன்னு
தெரிஞ்சிக்க முடியும்.
தமிழ் தடம் இங்க கொஞ்சமும்
இல்லீங்களே.

சரியாப்போச்சு.
வேற‌ வழியே இல்லை.
வாழ்க்கையே உன் மதம்!
என்ன சொன்னீங்க என்ன சொன்னீங்க?
வாண வேடிக்கை
உற்சவம்..உற்சாகம்
கொடை ராட்டினம்.
மல்லாங்கிணறு கிட்டம்மா தெருக்கூத்து.
ஏதாவதொரு சாமி இல்லேன்னா அம்மன்னு சொல்லி
சப்பரம்..அதுலே மின்சொட்டு பல்பிலே
பெரிய பெரிய சித்திரங்கள்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.
சந்தோஷம் மகிழ்ச்சி வெள்ளம்.
இன்ன மதம் தான்னு
இன்ன சாமி தான்னு
எதுவுமே வேண்டாம்.
எந்த சாமியும் இல்லாம
கடவுளும் இல்லாம‌
வெறுஞ்சப்பரத்தையே இழுத்துகிட்டுப்போவோம்.
எல்லோரும் சந்தோஷமா ஆடிப்பாடி..
அந்த மதம் தான் வாழ்க்கை.
துயரங்களை துடைப்பது
சந்தோசமாய் இருப்பதால் மட்டுமே இயலும்.
கவலை எனும் குப்பை கூளங்களை
அந்த தொட்டிக்குள்ள எறிஞ்சிடுவோம்.
அடுத்தவனை கெடுக்கும் சந்தொஷம்
சந்தோஷம் இல்லை.
எல்லாரும் இன்புற்றிருப்பது மட்டுமே அன்றி
வேற மதம் ஏதுமில்லை.
இந்த மதமே வாழ்க்கைன்னா
இது தானே நல் வாழ்க்கை!
இந்த வாழ்க்கையே மதம்னா
இம்மதமே சம்மதம்.
மற்ற எம்மதமுமே சம்மதம் இல்லை.

============================================================

எழுதியவர் : ருத்ரா (10-Oct-16, 11:27 am)
பார்வை : 64

மேலே