தீண்டும் தென்றல்

சில்லென்று தேகத்தைத் தீண்டும் தென்றல்
****சிலிர்த்திட்ட உள்ளத்தை வருடிச் செல்லும் !
புல்லின்மேல் பனித்துளியை உரசி விட்டு
****புத்துணர்வு பெற்றதுவும் மகிழ்ந்து செல்லும் !
முல்லைமொட்டை மோதியது மெல்ல முட்ட
****மொட்டதுவும் இதழ்விரித்துப் புன்ன கைக்கும் !
செல்லுமிடம் எங்கிலுமே சத்த மின்றி
****சேர்ந்திசைக்கும் மெல்லிசையை இதயம் கேட்கும் !

சோலைக்குள் தவழ்தென்றல் சுகந்தம் வீசி
****சுகமாக மீட்டிவிட இன்பம் சொட்டும் !
வேலையினால் வியர்த்தோரின் களைப்பை நீக்கி
****மேனியெங்கும் குளிரவைக்க நெகிழும் நெஞ்சம் !
மாலையிலே மிதந்துவந்து மனத்தைத் தொட்டு
****மாயமெல்லாம் புரிந்ததுவும் மோகம் கூட்டும் !
பாலையிலே உன்வரவைப் பார்த்தோர் உண்டோ
****பரிவுடனே சொல்லிடுவாய்த் தென்றல் காற்றே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-16, 9:06 pm)
பார்வை : 2736

மேலே