காதல் அத்தியாயம்
காதல்...
முரட்டு மூடர்களை மூலக் கவிஞர்களாக்கி
திருட்டு வேடர்களையும் வேந்தர்களாக்கும் மாயக்காரி...
திறனற்ற மானிடர்களைக்கூட திறம்படமாற்றி
பலனற்ற பதர்களையும் நல்ல வித்துகளாக்கும் வித்தைக்காரி...
சதிகொண்ட காதலால் விதிதொலைந்து போயிடின்
மதியிழந்து விட்டத்தில்கூட விதிதொலைத்து போகநேரிடலாம்...
சில காதல் சினங்கொண்டால்
சிந்தையினைக் குலைத்து கொலையாளியாகவும் மாற்றலாம்...
சிறுகவிதைகள் பலவரைந்து குறுநில மன்னனின் மண்ணில் விழுந்து
ஓங்கிஉயர்ந்த ஒற்றைப் பனையாய் தனித்துக்கூட நிற்கலாம்...
எருக்க இலையாய் எவர்காதல் துளிர்விடினும்
விருப்பங்களுக்குட்பட்ட விளைநிலத்தில் விளைவதுதான் என்ன...?
பசுந்தாள்கொண்ட பயிர்களா...? இல்லை
பற்றித் தொற்றி படரும் களைகளா...?
தினந்தோறும் மென்துளிர்விடும் புதுக்காதல்களின் புரிதல்கள்
ஏனைய நாட்களில் எங்குதான் புதைந்துபோகின்றன...?
மெய்சிலிர்த்து கொஞ்சிப்பேசி பொய்யுரைத்து நஞ்சைவிதைக்கும்
செய்நன்றி மறந்த சில நவயுக நாயகிகளுக்குத் தெரியுமா...?
பல்லுடைந்து பரதேசிகளாகவும் சொல்லிழத்த சொக்கர்களாகவும் திரியும்
கல்லறைக் கோட்டைகளுக்குச் சொந்தமான பல காளைகளுக்காவது தெரியுமா...?
அல்லவே...!
ஒற்றை வரப்பினோரமாய் ஒன்றிய அருகம் புற்கள்
கற்றைகளாய் அறுக்கப்பட்டு களத்தினில் காய்வதுபோல...
தெருவோரத் திண்ணைகளில் தேவாரம் பேசியவாறே
தேறேரா தேவதைகள் பலரைக்கண்டு சில துறவிகள் பதுங்குவதில்லையா...?
மாறாக..
கடைத்தெரு செல்லும்வழியில் விடைக்கு விழுதுகொடுக்க
தடைக்கு வரும் தமக்கையைத் தம்மோடுவர மறுப்பதில்லையா...?
விதைத்தவன் எங்கோ வெள்ளாமைசெய்ய, அதனில்
விளைந்த கனியினைக் கருடன் கொண்டுசெல்ல...
எச்சமிடும் கருடன் வயிற்றினில் மிச்சப்பட்ட வித்துக்களை
எங்கிட்டதென அறிந்து ஏவுகனையாகொண்டு அழிக்கமுடியும்...!
தூவானம் அயர்ந்தநேரம் தூரியாடும் வானவில்லும்
மென்மொட்டு இதழ்களில் நடனமாடும் பனித்துளியுமென...
வர்ணனைகளுக்கு மட்டுமே வாழ்க்கைப்பட்ட கவிதைகளெல்லாம் இப்போது
காப்பதற்கு இடமின்றி கல்லறையின் அரவனைப்பில் உறைந்துகிடக்கிறது...
#மீண்டும்_தொடரும்_அத்தியாயம்