சீட்டு

சில்லாலைக் கிராமம் யாழ்ப்பாணத்தில் இருந்து வடமேற்கில், பத்து மைல் தூரத்தில், அமைந்த கிராமம். சில்லாலையில் மட்டுமல்ல சுற்றுப்புறக் கிராமங்களிலிலும் சீட்டுக்காரி சின்னம்மாளைத் தெரியாதவர்கள் இல்லை. சொன்ன சொல் தவறாது, நாணயங்களுடன் தொடர்புள்ள நாணயக்காரி அவள். சொன்ன திகதிக்கு சீட்டுப்பணத்தை கொடுக்கத்தவறாதவள். சின்னம்மாளுக்கு சீட்டு பிடிப்பது ஒரு புதிய தொழில் அல்ல. பரம்பரைத் தொழில் என்று குறிப்பிடுவதில் தவறில்லை. அவளுடைய தாய் பொன்னம்மாள் கூட ஒரு காலத்தில் சீட்டு பிடித்து பல குடும்பங்களுக்கு தங்கள் பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்து வைக்க உதவிபுரிந்தவள்.

அக்காலத்தில் வங்கிகளை நம்பி அக்கிராம மக்கள் வாழவில்லை. சீட்டுத் தான் அவர்களுக்குத் தேவைப்பட்ட நேரத்தில் கைகொடுத்து உதவியது. அவளின் ஏலச் சீட்டினால் பயன் அடைந்த புகையிலை தரகர்களும்; வெங்காயம் , மிளகாய் வியாபாரிகளும் பலர். பொன்னம்மாளும் மகள் சின்னம்மாளைப் போல் வாக்கு நாணயம் தவறாதவள். சூரியன் கிழக்கில் உதிக்கத் தவறினாலும் பொன்னம்மாள் சொன்ன திகதிக்கு சீட்டு பணத்தை உரிய ஆளுக்கு கொடுக்கத் தவறமாட்டாள். அப்படி காசு சேராவிட்டாலும் கையில் உள்ள தன் பணத்தைப் போட்டு கொடுத்துவிடுவாள். சீட்டு பிடிப்பவர்கள் யாராவது சீட்டுக் காசை குறித்த நேரத்துக்கு கொடுக்கத் தவறினால் பொன்னம்மாள் பொல்லாதவளாகிவிடுவாள். அவள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு அஞ்சி சீட்டுப் பிடிப்பவர்கள் காசை கொடுக்கத் தவறமாட்டார்கள்.

எழுபது வயதாகியும் பத்து சீட்டுகளைப் பரிபாலனம் செய்து வந்தாள். அவளின் ஞாபகம் அபாரமானது. பழைய கொப்பி ஒன்றில் தேய்ந்த பென்சில் ஒன்றினால் அவள் எழுதி வைத்த கணக்குகளில் ஒரு படித்த கணக்காளர் கூட பிழை கண்டுபிடிக்க முடியாதவாறு இருந்தது. இவ்வளவுக்கும் அவள் படித்தது உள்ளுர் தமிழ் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு வரையே. தீடீரென்று ஒரு நாள் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட பொன்னம்மாள் முழுப் பொறுப்பையும் தன் மகள் சின்னம்மாளிடம் கொடுத்தாள். சீட்டு பிடிக்கும் தொழிலை சின்னம்மாள் முற்றாகக் கற்றறிந்தாள். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போல் சின்னம்மாளின் பெயரும் ஊர்ச் சனங்களின் மதிப்பில் வெகு விரைவில் பிரபல்யமாகத் தொடங்கியது. தாய்க்கு ஆரம்பத்தில் உதவியாக இருந்த சின்னம்மாள் அவள் இறந்தபின் பரம்பரைத் தொழிலை செய்யத் தொடங்கினாள். “சில்லாலை சீட்டுக்காரச் சின்னம்மாள்” என்ற நீண்ட அடுக்கு மொழிப் பட்டப் பெயர் பொன்னாலை வரை தெரி;ந்திருந்தது. வணிகத்தில் ஒரு ஒழுங்குமுறையை அவள் கடைப்பிடித்தாள். சீட்டு பிடிப்பவர் எவராவது பணம் கொடுக்கத் தவறினால் அவர்கள் நாணயத்தின் மேல் ஒரு கரும் புள்ளியைக் குத்தி அவர் வேறு எவரோடாவது சீட்டுபிடிக்க முடியாதவாறு செய்துவிடுவாhள். அவள் சொல்லுக்கு அவ்வளவு மரியாதை. அதற்குப் பயந்து குறிபிட்ட திகதிக்குள் பணத்தைக் கொடுக்கச்; சீட்டுகாரர்கள் தவறமாட்டார்கள்.

ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு இரண்டிலும் அவள் கைதேர்ந்தவள். புகையிலைத் தோட்டம் செய்யும் பலர் அவளிடம் ஏலச் சீட்டுபிடிக்க வரிசையில் நின்றனர். ஆனால் அவளது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மட்டுமே அதில் சேரமுடியும்.


சீட்டுக்காசும் கையுமாக சிறாப்பர் சித்தம்பலத்தின் மனைவி கமலா வருவதைக் கண்ட சின்னம்மாள் “என்ன கமலா சிறாப்பருக்கு சம்பளம் கிடைத்த இருபத்தைந்தாம் திகதியன்றே நீர் காசைக் கொண்டுவந்து கட்டுறீர்.. இப்படி எல்லோரும் முதலாம் திகதிக்கு முன்னரே கொண்டு வந்து தந்தால் எனக்குப் பிரச்சனையில்லை. வாரும். எனக்குப் பக்கத்திலை வந்திரும். என்ன குடிக்கப் போறீர்?” என்று அனுசரணையுடன் கமலாவை வரவேற்றாள்.

கமலா அவளின் சினேகிதிகளில் ஒருத்தி. பல வருடங்களாக அவளிடம் சீட்டு பிடிப்பவள். சி;ன்னம்மாளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவள். கமலா யாரையாவது சீட்டில் சேர அறிமுகப்படுத்தினால் மறு வார்த்தை பேசாமல் சி;ன்னம்மாள் சேர்த்துவிடுவாள்.

“ இப்பத்தான் சாப்பிட்டுப் போட்டு வந்தனான் அக்கா. குடிக்க ஒண்டும் வேண்டாம் இந்தாருங்கோ அவருடைய சீட்டுக் காசு. வைதேகிக்கு நாளைக்கு சம்பளம். அவளுடைய சீட்டுக்காசை நாளைக்கே கொண்டு வந்து தாறன்” கமலா பணத்தை சி;ன்னம்மாளிடம் நீட்டினாள். எல்லாம் புதிய மணம் வீசிய புது நோட்டுகள். புத்தகவடிவில் இருந்தது. சிறாப்பருக்கு கிடைக்காத புது நோட்டுச் சலுகையா? சின்னம்மாள் காசை எண்ணி எடுத்தாள். சில நோட்டுகள் ஒட்டிக்கொண்டன.

“ வைதேகி எப்படி இருக்கிறாள்? அவளைக் கண்டு கன காலம்.” கமலாவின் ஒரே மகள் வைதேகியைப் பற்றி விசாரித்தாள் சின்னம்மாள்

“ நான் வரைக்கை அவள் இன்னும் வேலை முடிந்து ஸ்கூலாலை திரும்பவில்லை. முத்தையா அம்மானின் மாட்டு வண்டிலிலை தான் இன்னும் இரண்டு டீச்சர்மாரோடை வேலைக்குப் போய் வாறவள். அதாலை பயமில்லை. பாவம் கஷ்டப் பட்டு இராப்பகலாய் உழைச்சு தன்றை கலியாணத்துக்கு காசு சேர்க்கிறாள்.”

“ வைதேகி படிப்பிக்கிற ஸ்கூலிலை தான் என்டை அக்காவிண்டை மகளும் படிக்கிறவள். வைதேகியைப் பற்றி உயர்வாக சொல்லுவாள். பி;ள்ளையளுக்கும் அவளை நல்லாய் பிடிக்குமாம். திறமான இங்கிலீஷ் டீச்சராம்”இ சின்னம்மா வைதேகியைப் புகழ்ந்தாள்.

“ ஓம், அவளுக்கு மாணவர்களிடையே நல்ல மதிப்பு. அதாலை பிள்ளையளுக்கு வீட்டிலையும் இங்கிலீஸ் டியூசன் கொடுக்கிறவள். அவள் உழைக்கிற காசிலை முக்கால் வாசி அவளுடைய சீட்டுக்குப் போகுது. இதெல்லாம் எல்லாம் அவள் கலியாணத்துக்குத் தான் சேர்க்கிறம். வேறு பிள்ளையள் எங்களுக்கு இருக்குதே குடுக்க?. இருக்கிற வீட்டையும் சீவிய உருத்து வைத்து அவளுக்கு குடுக்க நானும்; அவரும் யோசித்திருக்கிறம். அதோடை எங்கடை இரண்டு சீட்டு காசுகளோடை , கையிலை இருக்கிறதையும் சேர்த்து ஐம்பது குடுக்க யோசித்திருக்கிறம். இரண்டு கலியாணங்கள் நல்ல இடத்திலை இருந்து அவளுக்குப் பேசிவந்திருக்கு . எல்லாம் கடவுள் விட்ட செயல்”

“ கமலா நீர் ஒன்றுக்கும் யோசிக்காதையும். உமக்கும் மனுசனுக்கும் நல்ல மனசு. உம்முடைய மனுசன்டை சீட்டு காசு பதினையாயிரமும்., உம்முடைய மகளிண்டை சீட்டு காசு பத்தாயிரமும் இன்னும் மூன்று மாசத்தில் எடுக்கலாம். நீங்கள் கலியாணத்துக்கு வேண்டிய ஒழுங்குகளை செய்யத்தொடங்குங்கள்” என்று கமலாவுக்கு தைரியத்தைக் கொடுத்தாள் சின்னம்மாள்.

“ சரி அக்கா. நேரமாச்சு. அப்ப நான் கிளம்பிறன். வைதேகி ஸ்கூலாலை வருகிற நேரமாச்சு. நான் வரக்கை அவர் வீடடிலை இல்லை. கலியாண விஷயமாய்; ஓவர்சியர் கந்தையரைப் பார்க்க போயிட்டாh” என்று சொல்லிக் கொண்டு கமலா புறப்பட்டாள்.

“இவ்வளவு தூரம் வந்த நீர் வெறும் கையோட போகக் கூடாது. வீட்டை செய்த எள்ளுருண்டையும் பனங்காய்ப் பணியாரமும் இருக்கு, தாறன். கொண்டு போய் சிறாப்பருக்கும், வைதேகிக்கும்; குடும். “

சின்னம்மாள் எழும்பிப் போய் அடுப்படியில் இருந்து ஒரு சிறு பார்சலை கொண்டு வந்து கமலாவிடம் கொடுத்தாள். அவளை வாசல் வரை வழியனுப்பிப் போட்டு அலுமாரிக்குள் தனது பணத்தைக் கொண்டு போய் வைத்து பூட்டினாள.;. சின்னம்மாள் பழமையில் ஊறியவள். பணத்தை வங்கியில் போடும் பழக்கமில்லை. கையில் காசு இருந்தால் தான் அவசரமாக காசு தேவைப்படுபவர்களுக்கு நகைகளை அடைமானமாக எடுத்து இருபது வீதம் வட்டிக்கு ஒரு மாதத்துக்குள் திருப்பித் தரும்படி கொடுத்து சம்பாதிக்கக் கூடியதாயிருந்தது. பலர் கொடுத்த சீட்டு பணத்தில் உழைத்தாள் அவள். ஆனால் சொன்ன திகதியன்று சீட்டுப் பணத்தைச் சீட்டுகார்களுக்கு கொடுக்க தவறியதில்லை.

*******

சிறாப்பர் சிற்றம்பலம் பலகாலம் அரசசேவையில் சிறாப்பராக இருப்பவர். தான் பென்சன் எடுக்க முன்னரே தனது ஒரே மகள் வைதேகியின் கலியாணத்தைச் செய்துமுடிக்கவேண்டும் என்பது தான் அவருடைய முழு விருப்பம். கலியாணத்துக்கு குறைந்தது ஐம்பதாயிரம் தேவை. ஒரு வருஷத்துக்கு முதல் சீட்டு போட்டு சேர்த்து வைத்த காசில் ஒரு பகுதியை தாயின் இழவு வீட்டுக்கு செலவு செய்து போட்டார். செல்லாச்சி கிழவி விட்டுச் சென்ற மூக்குத்தியும் தோடும் ஐயாயிரத்திற்கு கூட பெறுமதியில்லை என அவருக்கும் தெரியும். அதற்கு மேலாக செத்த வீடு, காடாத்து, அந்தியேட்டி என்று செலவு செய்து போட்டார். தாய்க்கு ஒரே பிள்ளை சிற்றம்பலம். கணவன் இறந்தவுடன் கஷ்டப்பட்டு கிடைத்த கொஞ்சப் பென்சன் காசுடன் பலகாரம் செய்து சம்பாதித்து அவரை வளர்த்து ஆளாக்கினவள் செல்லாச்சி. மாமியாரோடை ஒட்டென்றால் ஒட்டு கமலா. அதே போல செல்லாச்சியும் பிரச்சனை என்று வந்தால் மருமகள் பக்கம் தான் சாய்வாள்.

“ எனேய். நீ எனக்கு தாயில்லை அவளுக்குத் தான் தாய் என்று” அடிக்கடி வேடிக்கையாக சிறாப்பர் தாயைச் சீண்டுவார். சித்தம்பலம் கொஞ்சம் பின் வாங்கினாலும் அவள் செலவு செய்ய பின்வாங்கியிருக்கமாட்டாள். மாமியார் சாக முன் தன் கையில் மூவாயிரம் காசை செத்தவீட்டு செலவுக்கு எனப் பென்சன் காசில் சீட்டுபிடித்து கொடுத்து வைத்ததை கமலா சொன்னபோது தன் தாய்க்கும் மனைவிக்கும் உள்ள இறுக்கத்தை சிறாப்பரால் உணர முடிந்தது.

செத்த வீட்டுச் செலவு போக மிஞ்சினது இருபத்தையாயிரம். இன்னும் இருபத்தையாயிரம் இருந்தால் எப்படியும் வைதேகியின் கலியாணத்தை முற்றாக்கி இரண்டு வருடத்தில் முடித்திடலாம் அதுக்கு சின்னம்மாளின் சீட்டு தான் வழிகாட்டும் என்று சிறாப்பரும் கமலாவும் தீரமானித்து இரண்டு வருஷத்துக்கு முதலே சீட்டில் சேர்ந்தார்கள். வைதேகி ஆங்கில ஆசிரியையாக வேலை செய்து மாதம் மாதம் உழைத்த காசில் பத்தாயிரத்துக்கு ஒரு குலுக்கல் சீட்டு. மற்றது சிறாப்பரி;ன சம்பளத்தில் பதினையாயிரத்துக்கு ஒரு ஏலச் சீட்டு. இன்னும் நான்கு மாதத்தில் முழுத்தொகை இருபத்தையாயிரத்தையும் எடுக்கலாம். சிறாப்பராக வேலைசெய்தாலும் பணத்தை வங்கியில் போட்டு சேர்க்க அவர் விரும்பவில்லை. வரவு செலவு, சேமிப்புகள் எல்லாவற்றையும் கவனிப்பது கமலா. சிறாப்பரும் வைதேகிiயும் முழு சம்பளத்தையும் அப்படியே கொண்டு வந்து கமலாவிடம் கொடுப்பார்கள். அவர்களின் கைச்செலவுக்கு வேண்டிய நேரம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். கமலாவிடம் கணக்கு கேட்கும் பழக்கம் இருவருக்கும் கிடையாது.

சின்னம்மாளிடம் சீட்டுப் பணத்தை கொடுத்துப் போட்டு கமலா வீடு திரும்பிய சில நேரத்தில் வைதேகியும் சிறாப்பரும் வந்துசேர்ந்தார்கள்.

“ என்ன அப்பா. போன காரியம் காயோ பழமோ?” கணவனிடம் ஆவலாகக் கேட்டாள் கமலா.

“ ஓரளவுக்கு பழம் தான். மாப்பிள்ளை பருத்தித்துறை ஹார்ட்லி கொலேஜ்ஜிலை சயன்ஸ் டீச்சராம். மூன்று வருஷத்துககு; முந்தித்தானாம் கொழும்பு யூனிவர்சிட்டியிலை பட்டம் பெற்றவர். கிலாஸ் எடுத்தவராம். தகப்பனும் ஓவர்சியராம். அதாலை எங்கடை ஓவர்சியர் கந்தையருக்கு அவையளைத் தெரியும். தங்கமான பெடியனாம். தாய் சின்ன வயதிலேயே போயிட்டாவாம். தகப்பன்தானாம் பெடியனுக்கு எல்லாம்”, விபரம் சொன்னார் சித்தம்பலம்.

“ பருத்தித்துறை ஹார்டிலி கொலேஜ் என்கிறியள். பருத்தித்துறை ஆக்களே அவையள்?. ஊருக்கு வெளியே கல்யாணம் செய்யக் கொஞ்சம் யோசிப்பினமே” கமலா மாப்பிள்ளையின் ஊரைக் கேட்டாள்.

“ அப்படியில்லை. தகப்பன் கோப்பாய் . தாய் இருபாலை. பெடியன் தாய் செத்ததும் கரவெட்டியிலை இருந்த சிறிய தாய் வீட்டிலை இருந்து ஹார்ட்லி கொலேஜ்ஜிலை படித்தவன்”, சித்தம்பலம் சொன்னார்.

தானும் தகப்பனும் பேசுவதை சுவர் ஓரமாக இருந்து கேட்டுகொண்டிருந்த வைதேகியை கண்டாள் கமலா. “இந்தா பிள்ளை பணியாரம். சின்னம்மா மாமி உனக்கும் அப்பாவுக்கும் குடுக்கச் சொல்லி தந்தவ. வீட்டிலை செய்தவவாம்.” என்று கையில் இருந்த பார்சலை கொடுத்தாள் கமலா.

“ இந்தாருங்கோ அம்மா இந்த மாசத்து சம்பளம். நாளைக்கு சனிக்கிழமை அது தான் இண்டைக்கு தந்தவங்கள்” என்று தன் சம்பள உறையை தாயிடம் கொடுத்தாள் வைதேகி.

“நல்லதாய் போச்சு. நாளைக்கே போய் உண்டை சீட்டுக்காசைக் கொடுத்திடுறன். நீ ஏதோ ஒரு சீலையும் அதுக்குப் பொருத்தமாக டூ பை டூ ஜக்கட் துணியும்; வாங்க வெண்டும் எண்டு போன மாசம் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கு. வா நாளைக்கு நீயும் நானும் பெரியகடைக்குப் போய் ராஜகோபால் கடையிலை பார்த்து வாங்குவம்.வைதேகி தலையை ஆட்டி ஒப்புதல் கொடுத்துப்போட்டு பணியாரப் பார்சலுடன் தன் அறைக்குள் போனாள்.

“ கமலா நீர் ஒருக்கா முடிந்தால் முடமாவடிச் சாத்திரியாரிடம் போய் இந்த இரண்டு சாதகத்தையம் காட்டி பொருத்தம் எப்படி என்று கேளும். எனக்கு தெரிந்தமட்டில் நல்ல பொருத்தம் போலத் தெரியுது”. இந்தக் கலியாணம் தரகருக்குள்ளாலை வராமல் கந்தையர் கொண்டு வந்தது நல்லதாய் போச்சு. இல்லாட்டால் தரகருக்கு வேறை கொமிஷன் கொடுக்கவேண்டும்.” என்றார் சிறாப்பர் சித்தம்பலம்.
“ எப்படியும் தை பிறந்ததும் செய்து முடிக்கலாம். அப்ப இரண்டு சீட்டுக் காசும் வந்திடும். எனக்கு இரவு சமையல் வேலை இருக்கு நான் வாறன். உங்களுக்கு கோப்பி கொண்டு வந்து தாறன். அந்த பணியாரத்தைச் சாப்பிட்டுப்போட்டு குடியுங்கோ ” என்று கமலா மகள் கொடுத்த சம்பள உறையை அலுமாரிக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சமையல் அறைக்குள் போனாள்.

******

மூன்று மாதங்கள் போனது தெரியவில்லை. மாரி மழை என்றும் இல்லாதவாறு கொட்டித் தீர்த்தது. ஊர் குளங்கள் எல்லாம் நிரம்பி வழிந்தன. தை பிறக்க இரண்டு கிழமைகள் தான் இருந்தது. தைபிறந்தவுடன் நல்ல நாள் பார்த்து எழுத்தையும் கலியாணத்தையும் ஒன்றாக வைக்கலாம் என இரண்டு பகுதியும் தீர்மானித்தார்கள். செலவும் மிச்சம். இதற்கு முன்னின்று பேச்சு வார்த்தை நடத்தி; முடிவுக்கு கொண்டு வந்தவர் ஓவர்சியர் கந்தையர். நல்ல மனுசன் பொது சனத்துக்கு கேட்காமலே உதவக் கூடியவர். பணம் இருக்கிறது என்ற பெருமையில்லாதவர்.

அன்று சனிக்கழமை காலை வேப்பங் குச்சியால் பல் துலக்கிய படி காணியை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தார் சிறாப்பர். அவர் சிந்தனை முழுவதும் வைதேகி கலியாணம் ஒரு பிரச்சனையில்லாமல் நடக்க வேண்டும் என்பதே. படலையைத் திறந்த சின்னம்மாளின் பக்கத்துவீட்டுக்காரி பதைக்கப் பதைக்க ஓடிவருவதைக் கண்டார்; சிறாப்பர்
“ என்ன தங்கம்மா. என்ன விஷயம் இப்படி இளைக்க இளைக்க ஓடிவாறாய்” சிறாப்பர் பல்துலக்கிய குச்சியை வாயில் வைத்தபடியே கேட்டார்.

“ ஐயோ சிறாப்பர் ஐயா. நடக்கக் கூடாதொன்றல்லோ நடந்து போச்சு. சொன்னால் நம்பமாட்டியள்” ஒப்பாரி வைத்துபடி சொல்லி அழுதாள் தங்கம்.

“என்ன விஷயம் எண்டு சொல்லிப் போட்டு அழன்”.

“ சின்னம்மாளின்டை வீட்டை அல்லோ நேற்று இரவு அவவிண்டை வாயுக்குள்ளை துணியை அடைத்து, ஆளை மயக்கிப் போட்டு, காசு முழுவதையம் கொள்ளையடித்துக் கொண்டு போயிட்டாங்கள் ஆரோ பாவியள். சீட்டுக்காரருக்கு கொடுக்க சேர்த்து வைச்ச சீட்டுக்காசுகள் , அடைவு நகைகள் எல்லாம் ஒண்டு விடாமல் துடைச்சு எடுத்து கொண்டு போட்டாங்கள். பேயறைந்த மாதிரி சின்னம்மாள் இருக்கிறாள். வீட்டிலை சீட்டுக்காரர் கூட்டம். பொலீசும் வந்திட்டாங்கள். அவையளுக்கு பதில் சொல்லமுடியாமல் அவள் இருக்கிறதை பார்க்க எனக்குப் பரிதாபமாயிருக்கு. அது தான் உங்களுக்கு விஷயத்தை சொல்ல ஓடிவந்தனான்.”
சிறாப்பருக்கு கேட்டவுடன் தலைசுற்றிற்று. ஏதோ தலையில் இடி விழுந்த மாதிரி ஒரு உணர்வு. சத்தம்போட்டு வீட்டுக்குள் இருந்த கமலாவையும் வைதேகியையும் கூப்பிட்டார். சிறாப்பருக்கு ஏதோ நடக்கக் கூடாது நடந்து விட்டது என்று நினைத்து ஓடி வந்த இருவருக்கும் சின்னம்மாவின் பக்கத்து வீட்டுககாரி தங்கம் நடந்ததைச் சொன்னாள். கமலா பேயறைந்தவள் போலானாள்.

“ அம்மா யோசிக்காதையங்கோ வாருங்கோ இரண்டு பேரும்; போய் என்ன நடந்தது எண்டு போய் பார்ப்N;பாம்” என்று ஆறுதல் சொல்லி தாயையும் கூட்டிக் கொண்டு சின்னம்மாள் வீட்டுக்கு புறப்பட்டாள் வைதேகி;.

சின்னம்மாள் வீட்டுக்கு முன்னால் ஒரு கூட்டம் அதில் கமலாவுக்கு அறிமுகமான முகங்கள் பல கவலை தோய்ந்த முகத்தோடை நிற்பதைக் கண்டதும் அவர்கள் எல்லோரும் சீட்டு பணத்திற்காகத்; தான் வந்திருக்;கிறார்கள் என்று அவளுக்கு தெரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. சிலர் “எல்லாம் போச்சுது” என்பதைக் காட்ட இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினார்கள். வீட்டுக்குள் நுளைந்த கமலாவும் வைதேகியும் பொலிசார் விசாரணை முடித்துக்கொண்டு வெளியேறுவதைக் கண்டார்கள். மூலையில் முடங்கிக்கிடந்த சின்னம்மா கமலாவைக் கண்டதும் ஓ வென்று ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினாள்.

“ஐயோ கமலா கடவுள் என்னை சரியாக சோதிச்சுப் போட்டார். நான் என்ன பாவம் செய்தனோ தெரியாது! வீட்டை முழுவதும் அப்படியே படுபாவியள் வழித்தெடுத்துக்கொண்டு போயிட்டாங்கள்;. எனக்கு எப்;படி சீட்டுக்காரார் முகத்திலை முழிக்கிறது எண்டு தெரியவில்லை. உங்கள் இரண்டு பேரிண்டை சீட்டுக்;காசு இருபத்தையாயிரத்தையும் சேர்த்து வைச்சிருந்தனான். அதையும் அள்ளிக்கொண்டு போட்டாங்கள். இனி தரமுடியுமோ தெரியாது. இன்னும் பலருக்கும் காசு கொடுக்கவேண்டும். நான் என்ன செய்யிறது எண்டு தெரியாமல் முழிக்கிறன்”, அழுதவாறு சின்னம்மாள் சொன்னாள்.

“என்ன மாமி இப்படி தலையிலை குண்டைப் போட்ட மாதிரி பேசிறியள். அவரும் வைதேகியும் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு. இன்னும் இரண்டு கிழமையிலை வைதேகிக்கு எழுத்து. சீதனத்துக்கு உந்த சீட்டை தான் நம்பியிருந்தனாங்கள். பாவம் வைதேகி கேட்டதும் அழுதிட்டாள” கமலா கோபத்துதோடு பேசினாள். வைதேகி தாயைப் பேசவிட்டுவிட்டு ஒதுங்கி நின்றாள்.

“ இப்ப இவளை என்ன செய்யச் சொல்லுறாய?. காசு இருந்தால் தராமல் பொய் சொல்லுறாளே? நடந்த விஷயம் தெரியுந்; தானே? உனக்கு மட்டுமே பிரச்சனை?. அங்கை பார் எத்தனை பேர் நிக்கினம் எண்டு” சின்னம்மாளுக்கு வக்காலத்து வாங்கினாள் ஏற்கனவே சீட்டு பணத்தை எடுத்து முடித்த இராசம்மா.
கமலாவுக்கு இராசம்மா மேல் சரியான கோபம் வந்தது. “ நான் உம்மோடை கதைக்கயில்லை. எனக்கும் சின்னம்மாவுக்கும் உள்ள பிரச்சனை. மற்றைவையள் தலையிடத் தேவையில்லை.” சற்று காரமான குரலில்கமலா பதில் அளித்தாள்.

வைதேகி தாயைச் சமாதானப்படுத்தினாள்.

“ இங்கை பார் சின்னம்மா இன்னும் ஒரு கிழமை நேரம் தாறன். நீ எப்படிகாசைப் பிரட்டுவியோ எனக்குத் தெரியாது எங்கடை சீட்டுக்காசு இருப்பத்தையாயிரம் அடுத்த முறை நான் வரக்கை எனக்கு வேண்டும். இல்லாட்டால் நடக்கிற சங்கதி வேறு. உனக்கு மானம் ரோஷம் இருந்தால் இவ்வளவு காலம் நாணயமாக நடந்த மாதிரி நடப்பாய் என எதிர்பார்க்கிறன்”, என்று சின்னம்மாளுக்கு எச்சரிக்கை செய்து போட்டு விடுக்கென்று பதிலை எதிர்பாராது மகளையும் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் கமலா.

*******

அன்று பின்னேரம் சின்னம்மாளுக்கு நடந்ததை அறிந்து ஓவர்சியர் கந்தையர், சிறாப்பர் வீட்டுக்கு வந்தார்.

“ என்ன கமலா சின்னம்மாள் என்னவாம். பாவம் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு தவித்து நிற்கிறாள். நாணயமான இவளுக்கு இப்படி நடக்கும் என்று யார் எதிர்பார்த்தது?. இது அவளிடம் சீட்டுக் காசு நகை இருக்குது எண்டு தெரிந்த ஒரு ஆள் தான் இதை செய்திருக்கவேண்டும்.”

“ இங்கை பாருங்கோ ஓவர்சியர்,. அதுவும் இந்த நேரத்தில் இப்படி நடந்திருக்கு. நாங்கள் வைதேகி கலியாணத்துக்கு என்ன செய்ய எண்ட நிலை. சின்னம்மாளுக்கு ஆத்திரத்திலை பேசி போட்டு வந்திட்டன். மூன்று நாள் தவணை கொடுத்திருக்கிறன் காசை தரச்சொல்லி “அழுதபடி கமலா கந்தையரிடம் முறையிட்டாள்..

“உது தெரிந்துதான் நான் உங்களைப் பார்த்துப் பேச வந்தனான். சிறாப்பரோடை நான் எல்லாம் விளக்கமாய் கதைச்சுப் போட்டன். வைதேகி என்றை மகள் மாதிரி. எனக்கோ பிள்ளையள் இல்லை எண்டு உங்களுக்குத் தெரியும். வைதேகியின் கலியாணத்துக்கு வேண்டிய இருபத்தையாயிரத்தை நான் தாறன். உங்களுக்கு வசதி பட்ட நேரம் திருப்பித் தாருங்கள். தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நல்ல காரியத்துக்கு உதவியதாக இருக்கட்டும” கந்தையர் தான் வந்த காரணத்தைச் சொன்னார். சிறாப்பரும் கமலாவும் அதை கந்தையரிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. சிறாப்பர் சிற்றம்பலம் கந்தையரின் கையை பிடித்து உணர்ச்சி பொங்க அழத் தொடஙகினார். கமலாவினதும் வைதேகியினதும் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

“இனி நடக்கப்போற காரியங்களைக் கவனியுங்கள். சீட்டுக்காசைப் பற்றி யோசியாதையுஙகள். அவள் சி;ன்னம்மாள் வீட்டையம் நிலத்தை விற்றாவது கடனைத்தீர்ப்பாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. காசு கிடைக்கிற நேரம் சந்தோஷப்படுங்கள். கமலா நாளைக்கு நீர் சி;ன்னம்மாளிடம் போய் கோபத்தில் பேசினதை மறந்து விடும்படி சொல்லும். நான் காசு தருகிறதை பற்றி மூச்சு விட வேண்டாம். என்ன?

“ஓம் ஓவசியர். நான் அவளோடை கன காலம் சினேகிதம். உந்த சீட்டுக்காசு போன கவலைதான் என்னை இப்படி கீழ்தரமாக நடக்க வைத்தது “என்றாள் தன்தவறை உணர்ந்து கமலா.

மறு நாள் கமலா சி;ன்னம்மாளைப் போய் காணமுன் காலையில் வந்த செய்தி அவளை அதிர்ச்சியடைய செய்தது. ஏன் ஊர் சனங்கள் இந்த நேரம் ஓடுதுகள் என்று ஒருத்தரை நிறுத்தி கேட்ட போது “சின்னம்மாள் அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டு நேற்றிரவு செத்துப்போனாலாம். அதைக் கேட்டு சனங்கள் ஓடுதுகள் “ என்ற பதில் அவரிடம் இருந்து வந்தது.

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (14-Oct-16, 6:55 pm)
Tanglish : seettu
பார்வை : 293

மேலே