அம்முக் குட்டிச் செல்லம்

அம்முக் குட்டிச் செல்லம்
****அழகில் அச்சு வெல்லம் !
தும்பைப் பூவைப் போல
****தூய சிரிப்பில் வெல்லும் !
பொம்மை அணைத்துக் கொண்டு
****புன்ன கைத்துத் தூங்கும் !
கும்மி குதித்துக் கொட்டும்
****குறும்புத் தனமும் செய்யும் !
பட்டுக் கன்னம் விரிய
****பற்கள் வெளுத்துப் பூக்கும் !
கட்டிக் கரும்பு பேச்சால்
****கவர்ந்தே இழுக்கு முள்ளம் !
கொட்டு மருவி போல
****குளிர்ந்து சிலிர்க்க வைக்கும் !
சுட்டிக் குழந்தை வாழ்வில்
****சொர்க்கம் தன்னைக் காட்டும் !
கையைத் தட்டிக் கொள்ளும்
****கண்கள் விரித்துப் பார்க்கும் !
தையா தக்கா ஆடத்
****தண்டை கொலுசும் கெஞ்சும் !
பைய அசைந்து செல்ல
****பிஞ்சுப் பாதம் கொஞ்சும் !
மையில் வைத்தப் பொட்டும்
****மழலைக் கழகு சேர்க்கும் !
அப்பா முதுகி லேறி
****ஆனை சவாரி செய்யும் !
உப்பு மூட்டை தூக்க
****உவகை யோடு சுற்றும் !
சிப்பி தோற்றுப் போக
****சிரிப்பில் சொக்க வைக்கும் !
ஒப்பு குழந்தைக் கில்லை
****உலகி லிதுவே உண்மை !!!
சியாமளா ராஜசேகர்