தன்னலம் காணலாமோ

பரந்தாமன் தந்த வரம்
புவியின் தாவரம்
பூப்பூத்து, பிஞ்சாகி
காய், காய்த்து கனியாகி
கனி தந்து சுவை தரும்

மழை பொழிய
மா தவம் புரியும்
காற்றின் நஞ்சை தானுண்டு
பதிலுக்கு பிராணவாயு தந்து
புவிவாழ் உயிர்களைக் காக்கும்

வானிலிருந்து இறங்கி
வந்தடையும் மழை
மண்ணுக்கு நீர் ஆதாரம்
வாழும் உயிர்களுக்கோ
வாழ்வாதாரம்

வானுக்கும், மண்ணுக்கும்
உறவாகும் முகிழ்கூட்டம்
சூரியனை மறைத்து
புவியின் வெப்பம் தணித்து
உதவும் வாழும் உயிர்களுக்கு

விடியலில் பூக்கும்
விண்ணின் தாமரை
வட்டமுகத்துடையோன்
வெளிச்சம் தந்து—மக்கள்
வாழ்வை விடிய வைப்பான்

ஆதவன்
அனைத்துக்கும் ஆதிமூலம்
வெளிப்படையானவன்
வாழும் உயிர்களுக்கு
வெப்பம் தந்து காத்திடுவான்

அத்தனையும் மக்கள்
உருவாக்கியதல்ல
என்றாலும் அவைகள்
உயிர்களைக் காத்திட
என்றும் மறந்ததில்லை

ஏற்றிவிட்ட ஏணியை
எண்ணி பார்க்காமல்
ஏறி அமர்ந்த மாந்தர்
தவிக்கும் ஏழைகளுக்கு உதவாது
தன்னலம் காணலாமோ!

எழுதியவர் : கோ.கணபதி (19-Oct-16, 7:29 am)
பார்வை : 52

மேலே