சிவகாமியின் செல்வன்

சிவகாமியின் செவ்வனே! - என்
சிரம் தாழ் வணக்கங்கள்.

தமிழன்னையின் தலைமகனாய்
தமிழகத்தை தழைக்கச் செய்தாய்!
தன்னலம் போற்றுவோர் மத்தியிலே
தனித்துவம் பெற்றாய் பொதுநலனால்.

கற்காமல் நீயிருந்தும் - நாட்டைப்
பொற்காலமாய் ஆட்சி செய்தாய்!
தற்காலம் வரை கண்டதில்லை - உன்போல்
பிற்காலமும் இனி வருவாரில்லை.

பள்ளி எனும் சோலையை - நாளும்
பாங்காய் வளர்த்த காவலனாய்!
கல்விக் கனியை அனைவரும் புசித்திட
கண்ணியமாய் வழி வகுத்தாய்!

காரிருள் நிறத்தோன் - எங்கள்
காமராசு எனும் கதிரவன்.
பார்போற்ற உயர்ந்தான் - கடைசிவரை
பாமரனாய் வாழ்ந்தான்.

பட்டி தொட்டியும் பாடம் படிக்க
பாடசாலை திறந்தாயே!
எட்டு திக்கும் ஏற்றம் காண
ஏட்டுக் கல்வியும் தந்தாயே!

விருதுநகர் தந்த செல்வமே! - எவரிடமும்
விலை போகாத மாணிக்கமே!
விண்ணும் மண்ணும் வியந்து போற்றிய
வித்தகன் என்றும் நீதானே!

சூலைத் திங்களில் உதித்த நீ
சூரியனாய் வலம் வந்தாய்!
சூட்சமம் இல்லா உத்தமனாய் - மகுடம்
சூடிக் கொண்டாய் மன்னவனாய்!

சீரிய சிந்தையில் திட்டங்கள் பல தீட்டி
சிறப்பாய் நாட்டை ஆண்ட
சிவகாமியின் செல்வனே! - உனக்கு
சிரம் தாழ் வணக்கங்கள்.

எழுதியவர் : தங்கமணிகண்டன் (23-Oct-16, 10:03 pm)
பார்வை : 61

மேலே