ஊஞ்சல்
உன் மடிமீது நானமர்ந்து
காலாட்டியபடி
முன்னும் பின்னுமாக போக வர
அ-ஹா..! அந்தநேர ஆனந்தமானது
ஆயிரம் இலக்கிய படைப்புகளை
ஒன்றாக படித்த திருப்தியை தருகின்றது!
கவிதைகள் வடிக்க
வார்த்தைகள் வசப்படாதபோது
உன்மீதமர்ந்து உலாப்போனால்
சில நிமிடங்களிலேயே
சிந்தனை கடலில் எம்பி குதித்தப்படி
ஆக்ரோஷ வரிகள் வந்து விழுகின்றன..!
சம்பிரதாய சடங்குகளில் சிக்குண்ட சமூகம் - அந்த
சிக்கலிலிருந்து தப்பிக்க முடியாமல் மூச்சடைத்தபடி
தெய்வ குத்தத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களாய்
சித்தரிக்கப்பட்டு பயமுறுத்தப்படுகிறார்கள்..!
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம்…!
அப்படியானால் முகப்பொலிவு உடையவர்களெல்லாம்
இச்ஜெகத்தில் அகத்தூய்மையாளர்களா..?
முகப்பொலிவு இல்லாதவர்களெல்லாம்
அகம் முழுக்க அழுக்கு நிறைந்தவர்களா..?
பிறகெதற்கு முகப்பொலிவாளர்களுக்கு
அளவுக்கு மீறிய ஒப்பனை…!
ஊனமான மாரியப்பனை இன்று
உலகமே திரும்பி பார்ப்பது
அவரது முகப்பொலிவைப் பார்த்தா..?
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறப்பவர்கள்
கருப்பர்களாக இருப்பதால் அவர்களை
அகத்தூய்மை அற்றவர்கள் என்று
முத்திரை குத்தும் ஆதிக்க சக்திகளின்
மாற்றான் தாய் மனப்பாண்மையை
எத்தனை அம்பேத்கார்கள் பிறந்தாலும்
ஒழித்துவிட முடியாதென்பதே சத்திய உண்மை.