நானும் எனது ஆட்டுக்குட்டியும்

நானும் எனது ஆட்டுக்குட்டியும்
* * * * *~~~~~*~~~~~* * * * *
அந்தொரு நாளில் அதிசயம் தான்
அழகாய் உருவில் என் வீட்டில்
ஆடும் மயிலின் அழகினை போல்
அழகாய் துள்ளும் ஆட்டுக்குட்டி

வீட்டில் இருக்கும் வெள்ளாடு
வேதனையுடனே ஈன்றதுவாம்
வெகுமதியான பரிசெனக்காய்
வெள்ளை பஞ்சு ஆட்டுக்குட்டி

பள்ளி முடித்து வீடுவரும் –என்
பார்வை முழுக்க அதன்மேலே
பார்த்து ரசிப்பேன் பரவசமாய்
பள்ளியில் இருப்பேன் அதன்நினைவாய்

கழுத்து மணியின் ஓசையுடன்
காலடிக் குளம்பின் சத்தத்துடன்
துள்ளி குதித்தே ஓடிவரும்-என்
துருதுருவான ஆட்டுக்குட்டி

புட்டியில் பாலை நிறைத்ததற்க்கு-நான்
புகட்டி மகிழ்வேன் அனுதினமும்
முட்டி மோதி குடித்துவிடும்-என்
முகத்தில் முட்டி விளையாடும்

அடுத்த வீதிக்கு ஓடிடுவேன்
அதுவும் பின்னால் ஓடிவரும்
அன்பாய் தடவி அணைத்துக்கொள்வேன்
அன்னையைபோல் முத்தம் கொடுத்துகொள்வேன்

அந்தொரு நாளில் இடியாக
அந்த செய்தி காதில் விழ
அதிர்ந்து போனேன் நிலமாக -நான்
அடங்கி போனேன் அணுவாக

அறுபது ரூபாய் பணத்திற்கு
அடுத்தவர் வீட்டிற்கு கொடுப்பதற்கு
அப்பா விலையை பேசிவிட்டார் –என்
அழகு குட்டி ஆட்டிற்கு

பள்ளி முடித்து வீடுவந்தேன் –கண்
பார்வையை சுழற்றி நோட்டமிட்டேன்
பட்டி முழுக்க தேடிவிட்டேன்-என்
பட்டுக் குட்டியை காணவில்லை
____________~*~_____________
கே.செந்தில்குமார்

எழுதியவர் : கே.செந்தில்குமார் (31-Oct-16, 4:35 am)
பார்வை : 97

மேலே