மீட்டாத வீணை ​

********************************************************

​மீட்டாத வீணையானேன்
தீண்டாத உயிரானேன்
வேண்டாத பொருளானேன்
தவறென்ன நான் செய்தேன் ...
நிறத்தில் கறுப்பானேன் நான்
தரத்தால் குறையிலா தங்கமே ...

சிந்திப்பீர் உலகோரே ஒருநொடி
நிந்தித்துப் பயனென்ன என்னை !
கருமேகமே பொழிகிறது தருகிறது
உயிர்வாழ பயிர்வாழ மழைநீராய் !
கருமையும் சேர்வதால் விழிகளில்
அழகினை கூட்டுகிறது அதனாலே !

கருங்கூந்தல் அறிவிக்கும் இளமையும்
வெண்கூந்தல் வந்தாலே முதுமையென
உணர்ந்திடும் உள்ளங்களே யோசிப்பீர் !
இரவெனும் கருப்பு வானமென்பதால்
அழகாய் மிளிர்கிறது முழுநிலவும்
அழகான பெண்களுக்கு ஈடாகிறது
கவிவடிக்க கவிஞர்களுக்கு உதவுகிறது !

புறக்கணிக்கும் நிலையில் நாங்கள்
புழுவாகத் துடிக்கிறோம் உள்ளத்தில் !
மீட்டாத வீணையால் தெரிந்திடுமா
திகட்டாத தேனிசையும் வந்திடுமா !
கூவிடும் குயிலும் குரலால்தான்
காணும் நிறத்தாலன்று புரிந்திடுவீர் !

தோற்றமே அழகென்று நினையாதீர்
மீட்டாத வீணையாய் வீணாவோம் !

**************************************************************
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Nov-16, 7:46 am)
பார்வை : 304

மேலே