எழுத்துதள தோழமைகளுக்கு நட்புடன்★★
அன்பு எழுத்துதள தோழமைகளே வணக்கங்கள் பல.!
எனது நகைச்சுவை பதிவுகளை தொடர்ந்து படித்து ரசித்து கருத்திட்டு என்னை ஊக்விப்பதில் மிக்க மகிழ்ச்சி.!
தற்போது மத்திய அரசின் ஆணையை வைத்து நகைச்சுவைகள் பல எழுதபட்டாலும் இப்போது நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நேரம்.!
நாம் செய்ய வேண்டியவை:
1)இன்று முதல் , 500 & Rs.1000 ரூபாய் நோட்டுக்கள் வழக்கில் தான் இருக்காது.! ஆனா செல்லாக் காசாகாது.!
அவை செல்லும்.! அஞ்சலகங்களிலும் , வங்கிகளிலும் இந்த ஆண்டு இறுதி வரை மாற்ற முடியும். இது தெரியாத பாமர மக்களுக்கும் , கிராம மக்களுக்கும் உதவ முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு பீதி உண்டாக்காதீர்.
2)தெளிவான பிரச்சாரத்தை அரசு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களை பலர் ஏமாற்றகூடும்..
அவர்களுக்கு நாமும் விளக்க முயற்சி செய்யலாம்.
வதந்திகளை உரிய முறையில் மறுக்க வேண்டும்.
3)வங்கிக் கணக்கில்லாத ,படிப்பறிவில்லாத மனிதரின் நிலை அந்தோ பரிதாபம். அவர்கள் தங்களிடம் உள்ள காசுகளை மாற்ற என்னவெல்லாம் சிரமப் படுவார்களோ.? தண்ணீர் பஞ்ச காலத்தில் தண்ணீர் கொடுத்து சேவை செய்வது போல, மக்களிடம் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு, அதற்கு இணையான மதிப்புள்ள நூறு ரூபாய் நோட்டுக்களை தர தன்னார்வ குழுக்கள் மற்றும் நூறு ரூபாய்களை நிறைய வைத்துள்ளோர் முயற்சி செய்யலாம்.
பின்னர் தங்களிடம் உள்ள ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
4)அடுத்த ஒரு வார காலத்துக்கு நாடு முழுதும் கடும் நெருக்கடி நிலவக் கூடும். மக்கள் குழப்பம் மற்றும் சிக்கலை சந்திக்கக் கூடும். அதை முழு வீச்சில் சரி செய்ய மாநில அரசுகள் முயல வேண்டும்.
நம்முடைய விமர்சனத்துக்காக அரசு காத்து இருப்பதில்லை. ஆனால் நம் ஆலோசனைக்கும், உதவிக்கும் உரிய ஏராளமான சாமானிய மக்கள் நமக்காக காத்து நிற்கிறார்கள்.!
5)ரூ.500, ரூ.1000 மேட்டரில் மோடி அரசை கலாய்ப்பது, விமர்சிப்பது, பாராட்டுவது எல்லாம் ஒரு பக்கம் நடக்கட்டும் தப்பில்லை. இது எல்லா மேட்டரையும் போல இயல்புதான். ஆனால், நம்மிடம் இப்போது உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு இனி வேல்யூவே இல்லை என்கிற ரேஞ்சில் மீம்ஸ், ஜோக்ஸ், போட்டோஸ் கட்டவிழ்க்கப்படுகின்றன. அவைகளை ரசித்துவிட்டு குறைந்தபட்சம், சாதாரண மக்கள் பதற்றம் அடையாத அளவுக்கு என்ன மேட்டர் என்பதை இணையவாசிகள் மற்றவர்களுக்கு பகிரலாம். அதை இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.
6) எல்லாவற்றுக்கும் மேலாக, கையில் அத்தியாவசிய செலவுக்கு 100 ரூபாய் நோட்டுகள் நண்பர்கள், உறவுகள் மூலம் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு தற்காலிகமாக கைமாற்றாக உதவிக்கொள்ளலாம். நிலைமை சீரடையும்போது திருப்பித் தரலாம் - பெற்றுக்கொள்ளலாம்.
7)நம்மில் பலரும் சற்றே மேல்நிலை அன்றாடங்காய்ச்சிகளே என்பதால் பெரிதளவில் பதற்றம் தேவையில்லை. பேங்க் சலான் ஃபில் பண்ணக் கூட இயலாத சாமானியர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் நிறைய. அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி, அவர்களின் பதற்றத்தைத் தணிப்பதுதான் இந்த தற்காலிக நெருக்கடி நிலைக்கு நம்மால் ஆகக் கூடிய பேருதவியாக இருக்கும்.
அதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை..
8. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு மதிப்பில் இருந்தாலும் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் அவற்றைக் கொடுத்து அதே மதிப்புள்ள வேறு ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். ஆனால் 4 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை மாற்ற முயன்றால், 4 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ளவை வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும். 4 ஆயிரம் ரூபாய் என்பது போதாது என்றால், அதற்கு மேற்பட்ட தொகையை காசோலை, இணைய தள வங்கிச் சேவை, டெபிட் கார்டு ஆகிய வழிகளில் செலவிடலாம்
9. 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட்டும் செய்யலாம். பணத்தை மாற்றும்போதோ, டெபாசிட் செய்யும்போதோ அடையாள அட்டைகளில் ஒன்று அவசியம்.
இதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10. வங்கிக் கணக்கு இல்லாதவர்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால், புதிய வங்கிக் கணக்கு தொடங்கி மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.
11.ரிசர்வ் வங்கிக் கிளைகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.
12. 4000 ரூபாய்க்கு மேல் தொகையை மாற்ற, கணக்கு வைத்துள்ள வங்கியை மட்டுமே அணுக வேண்டும்.
13. வங்கிக்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள் பிரதிநிதியை அனுப்பி அத்தாட்சிக் கடிதம் தர வேண்டும்.பணத்தை செலுத்துபவர் தனது அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்
18ம் தேதி வரை நாளொன்றுக்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாயும்,
19ம் தேதி முதல் 4 ஆயிரம் ரூபாயும் எடுக்க அனுமதிக்கப்படும்.
அதன் பிறகு இந்த உச்ச வரம்பு 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
அதேபோல, வரும் 24ம் தேதி வரை வங்கிகளில் பணமெடுக்கும் விண்ணப்பத்தில் 10 ஆயிரம் ரூபாய் வரையும்,
காசோலையில் 20 ஆயிரம் ரூபாய் வரையும் மட்டுமே பணம் பெற முடியும்.
14. அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரை வழக்கம்போல ஏடிஎம்களில் பணம் டெபாசிட் செய்யலாம். ரொக்கம் தவிர்த்து, மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.
15. டிசம்பர் 30ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமான டிக்கெட் ஆகியவை 11ம் தேதி வரை 500, 1000 ரூபாய் ஏற்கப்படும்.
வாழ்த்துக்களுடன்..
உங்கள் குமரிபையன்