இயற்கை முறையில் வடிவமைக்கப்பட்ட புதுமையான காய்கறி குளிர்பதனப் பெட்டி
பழம், காய்கறிகள் கெடாமல் பாதுகாக்க உதவும் மின்சாரம் தேவைப்படாத இயற்கை முறை யிலான குளிர்பதனப் பெட்டியை கோவையில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அதிகாரி கள் முதல்முறையாக வழங்கி உள்ளனர். இதன்மூலம் சிறு விவசாயிகளும், தாங்கள் விளை வித்த விளைபொருட்களைக் கெடாமல் பாதுகாத்து உரிய நேரத்தில் விற்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் மட்டுமல்லாமல், வேளாண்மையிலும் குளிர்பதன வசதி அத்தியாவசியமாக உள்ளது. விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களைக் கெடாமல் பாது காத்து உரிய நேரத்தில் சந்தைப் படுத்துவதற்கு பெரிய அளவிலான குளிர்பதனக் கிடங்குகள் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை சிறு விவசாயிகள் பயன்படுத்த முனையும்போது, தேவையற்ற செலவுகள் ஏற் படுகின்றன. இதனாலேயே பெரும் பாலான சிறு விவசாயிகள் விளைபொருட்களைச் சரியான நேரத்தில் விற்க முடியாமலும், அதிக லாபம் ஈட்ட முடியாமலும் தவிக்கின்றனர்.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக பழம், காய்கறி, கீரைகளைக் கெடாமல் பாதுகாக்கக்கூடிய புதிய குளிர்பதனப் பெட்டி ஒன்றை கோவை தொண்டா முத்தூர் வட்டத்தில் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மின்சாரத் தேவை இல்லாமல், இயற்கை மூலப் பொருட்களால் இயங்கக்கூடிய இந்த குளிர் பதனப் பெட்டியால், விவசாய விளைபொருட்களைக் குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் பாது காக்க முடியும் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.
முற்றிலும் இயற்கை
தொண்டாமுத்தூர் வட்ட தோட் டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஞா.வசந்தி கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் வட்டத்தில் 100 சதவீத சொட்டுநீர் பாசன கிராமம், இயற்கை விவசாயிகள் குழுக்கள் அமைப்பு உள்ளிட்ட பல முன்னோடித் திட்டங்களைத் தோட்டக்கலைத் துறை உருவாக்கி உள்ளது. அதன் அடுத்தகட்டமாக சிறு விவசாயிகள், மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் வைத்துள்ளவர்கள் விளைபொருட் களை நீண்ட நாட்கள் வைக்க என்ன செய்வது என ஆலோசித்தோம். அதில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ள மின்சாரத் தேவையற்ற இயற்கை முறையிலான குளிர்பதனப் பெட்டி சரியானதாக தெரிந்தது. அதன் செயல்பாடு சிறப்பாக இருந் ததால் முதல்முறையாக தொண்டா முத்தூர் வட்டத்தில் 5 விவசாயி களுக்கு வழங்கி இருக்கிறோம். புறநகர காய்கறி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானி யத்தில் ரூ.2 ஆயிரத்துக்கு அந்த கருவி வழங்கப்பட்டுள்ளது.
உருளை வடிவிலான இக்கருவியில் 2 பரப்புகள் உள்ளன. அதன் நடுவே வைக்கோல் பரப்பும், அதனுள் நீர் பரப்பும் உள்ளன. உள்ளே வைக்கப்படும் பொருட்களைக் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் வைக்கோலும், நீரும் வைக்கின்றன. தேவைப்படும்போது அவற்றை மாற்றிவிட முடியும். சாதாரணமாக 4 நாட்களில் கெட்டுப்போகும் தக்காளியை இதில் 12 நாட்கள் வைத்திருக்க முடியும். கத்தரி, கொடி காய்களை 9 நாட்களும், வெண்டைக்காய் 8 நாட்களும், மாங்காய் 10 நாட்களும், திராட்சை 8 நாட்களும், கொய்யாப்பழம் 10 நாட்களும், சீதாப்பழம் 8 நாட்களும் இந்த பெட்டிக்குள் நல்ல நிலையில் பாதுகாப்பாக இருக்கும். இயற்கையான முறை என்பதால் காய்கறிகளில் சத்துகள் இழப்போ, நோய்க்கிருமி தாக்குதலோ இருக்காது.
மேலும் மின்சாரத் தேவையே இல்லை என்பதால், சிறு விவசாயிகளுக்கு நல்ல பலனளிக்கும். அடுத்தகட்டமாக இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்’’ என்றார்.
செலவு குறைவு
இக்கருவியை பயன்படுத்தி வரும் செம்மேட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி அனிதா சிவ கணேசன் கூறும்போது, ‘‘இயற்கை விவசாயி சுபாஷ் பாலேக்கர் கருத்துகளைப் பின்பற்றி இயற்கை முறையில் கலப்புப் பயிர்களைப் பயிரிட்டுள்ளோம்.
அதில் மல்லி, மணத்தக்காளி போன்ற கீரை வகைகளின் இயற்கைத் தன்மை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அவற்றை, குளிர்பதனப் பெட்டியில் வைப் பதில்லை. மாறாக, ஈரத் துணியைப் பயன்படுத்தியே அவற்றைப் பாது காப்போம். இதினிடையே இயற்கை முறையில் வடிவமைக்கப்பட்ட புதுமையான காய்கறி குளிர்பதனப் பெட்டியை தோட்டக்கலைத் துறை மூலம் வாங்கி உள்ளோம். செலவும் குறைவு, அதோடு இயற் கையான பாதுகாப்பு முறையாக இருப்பதால் நல்ல பலனளிக்கிறது’’ என்றார்.