சுத்தி நின்று சுத்தி இசைக்கும்
சுத்தி நின்று சுத்தி இசைக்கும்!
××××××××××××××××××××××××××××××××××
மண்ணில் தோன்றும் மானிடர்
முன்னை வினைகள் பற்றிவர
பின்னை உலகில் பிறப்பெடுப்பார்
தன்னில் நாவலன், பாவலன்
வல்லவன் என்றே பலவாய்
வல்லமை ஆக்கம் பெறுவார்
ஈட்டிய அறிவைப் புறந்தள்ளி
மீளா நரகத்தினை நசைத்து
மது அரக்கன் வசம்
மதியை அடிமை ஆக்குவார்
தறி கெட்டு நெறி விட்டு
வெறி கொண்டு ஓடுவார்.
பித்துப் பிடித்து
புத்தி கெட்டுப் போகும்
பாடுபட்ட கூலியும்
வழிப்பறி ஆகும்
பெற்றவள் கூழுக்கு அழுவாள்
உற்றவள் உதவிக்கு அழுவாள்
பிள்ளைகள் சோற்றுக்கு அழும்
கிள்ளைகள் பாலுக்கு அழும்
உடல் நடுங்க விழி பிதுங்க
உதவா வார்த்தை பல பேசி
நெருடும் பார்வை வீசுவார்
உருகும் உறவுகள் இழப்பார்
உண்ணும் உணவின் தரமோ
உதவா கழிவும் குப்பையும்
உருவமோ தொப்பையும் சப்பையும்
அருவும் மூளையோ சப்பாணியே!!
மெய் தளர்ந்து
மெருகு இழந்தது
மேனி கெட்டது
மேன்மை இழந்தது !
நாடிகள் நலிய
குன்றும் இளமை
நரம்பு தளர்வால்
குளறும் ஆண்மை !
நாளங்கள் அடைப்பால்
குறையும் ஆயுள்
நாட்கள் சுருக்கம்
மரணத்தின் நெருக்கம்.!
கண் இரண்டில் கும்மிருட்டு
கன மனதில் மையிருட்டு
கை கால் நடுக்கம் கண்டு
காலனுக்கு எழுதுவார் கடிதம்!
நற்றமிழ் குலம்
நாளும் நலிந்து
நற்குடி பிறப்பின்
நலம் மறந்து
நாற்றம் இழந்து
நாற் கால் பிராணியாய்
நடுவீதி தன்னில் வீழ்ந்துகிடக்கும்!
சுத்தி அற்று சுத்தி இழந்து
சத்தி எடுத்து சத்தி இழந்து
சந்தி சிரிக்க சாலையில் கிடந்து
சத்து இல்லா நட்பும்
பத்து உள்ள உறவும்
சுத்தி நின்று சுத்தி இசைக்கும்!