கால் முளைத்த வண்ணத்துப் பூச்சிகள்
கால் முளைத்த
வண்ணத்துப் பூச்சிகள்
மனதுக்குள் தேன் குடிக்குது.
சின்னஞ்சிறிய
இதயத்திற்குள்ளே
சிறகடித்துப் பறக்குது.
இறகு இல்லா
வான்பறவைகள்
மழலைகளாய் இங்கு வந்ததோ?
இதயம் கவரும்
மனம் கொத்திப்பறவைகள்
நம்மையும் கவர வந்ததோ?
குட்டி குட்டி
சேட்டைகளில் தான்
எத்தனையோ அழகு இருக்கு.
குழந்தைகள் செய்யும்
குறும்பிலே தான்
எல்லையில்லா அன்பும் இருக்கு.
மானிடப் பிறவியில்
மகிழ்ச்சியை மட்டுமே
தந்திடும் பருவம் இதுதானே!
மகிழ்ச்சி தேனை
அள்ளிப் பருகிட
மனமும் ஏங்குது தானே!
ஆதவனும்
இவர்களோடு போட்டியிட்டு
ஓய்ந்தே போகிறான் மாலையில்.
இவர்கள் உறங்கிய பின்னே
சந்திரனும்
மெதுவாய் வந்து போகிறான்.
இழந்த நம் பருவமும்
மீண்டும் வருமோ
என்றே ஏங்குது மனமும்.
இதுவே வாழ்க்கை என்று
புத்தியில் அடிக்குது
ஆறாவது அறிவும்.
குழந்தை முகத்தில்
காணும் சிரிப்பில்
கடவுளும் அடிமை தான்.
சொல்வதை செய்ய
நம்மையும் மாற்றிடும்
மழலையும் கடவுள் தான்.
பிஞ்சு இதயத்திற்குள்
நஞ்சு சேராது
நாமும் காத்திடுவோம்.
மழலையோடு சேர்ந்து
மகிழ்ச்சியை
நாளும் பகிர்ந்திடுவோம்.............