தத்தளிக்கும் அன்றிலென​​

​தத்தளிக்கும் அன்றிலென
தவிக்கின்றேன் அறிவாயா !
தகித்திடும் தணலென
கொதிக்கிறது என்னெஞ்சும் !
மாறிடும் இரவுபகலாய்
மாறிமாறிப் பேசுவதேனோ !

பூவிதழ் விரித்துப் புன்னகைத்தாய்
கண்சிமிட்டி சாடையும் செய்தாய் !
கடல்நீரில் பாய்ந்திடும் நங்கூரமாய்
உடல்முழுதும் பாய்ந்த மின்சாரமாய்
இதயமும் சிலிர்த்தது மகிழ்ச்சியால்
உள்ளமும் குளிர்ந்தது சம்மதமென !

மறுக்கிறாய் மறுநாளே காதலையும்
சுருக்கெனத் தைக்கிறாய் நெஞ்சிலே
நயமாக உரைக்கிறாய் பொய்யையும்
நடைப்பிணம் ஆகிட்டேன் கேட்டதும் !

ஆடையை மாற்றிடும் நடிகராய்
ஆசையுடன் காத்திட்ட என்னிடம்
முடிவாக கூறுகிறாய் முடிவென !
துளிவிஷம் கலந்த குடம்பாலாய்
நஞ்சாக மாறியதேன் உன்னுள்ளம் !

பசியாற்றத் துடித்திடும்
வறியோனாய் கேட்கிறேன்
வெறிகொண்ட காதலனாய்
காரிகையே யாசிக்கிறேன்
காலத்தைக் கடத்தாமல் காட்டிடு
காதலுக்கு நீயும் பச்சைக்கொடி !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Nov-16, 10:17 pm)
பார்வை : 91

மேலே