கண்ணே பாப்பா

கண்ணே பாப்பா ! கண்ணே பாப்பா
காதைக் கொஞ்சம் திறந்திடு பாப்பா
உண்மை நாளும் உரைத்திடு பாப்பா
ஊருக்கு நன்றாய் உழைத்திடு பாப்பா !

அன்னை தந்தை தெய்வம் பாப்பா
அன்னவர் சொல்லே வேதம் பாப்பா
குன்றாக் கல்வி கற்றிடு பாப்பா
குறைதனைக் கண்டால் களைந்திடு பாப்பா !

பெரியவர் தன்னை பேணிடு பாப்பா
பெருமை உண்டதில் உணர்ந்திடு பாப்பா
வறியவர் கண்டால் உதவிடு பாப்பா
வாழ்வும் உனக்கு இனித்திடும் பாப்பா !

சிரித்து வாழப் பழகிடு பாப்பா
உறுத்தும் நோயும் ஓடிடும் பாப்பா
உரிமை என்றால் குரல்கொடு பாப்பா
உறவுக் கென்றும் கைகொடு பாப்பா !

வீட்டுக் கென்றும் உழைத்திடு பாப்பா
நாட்டை நீயும் காத்திடு பாப்பா
கூட்டுக் குடும்பம் நல்லது பாப்பா
கோடி நன்மைக் கூடும் பாப்பா !

ஒற்றுமை உணர்வு ஓங்கணும் பாப்பா
ஒன்றெனும் எண்ணம் உயரணும் பாப்பா
குற்றம் கண்டால் கடிந்திடு பாப்பா
கோழை நீயல்ல உணர்ந்திடு பாப்பா !

வன்முறை வழிதனை அழித்திடு பாப்பா
வென்றிடும் குறள்வழி நடந்திடு பாப்பா
குன்றின் விளக்கென ஒளிவிடு பாப்பா
காலமும் உன்னைப் போற்றிடும் பாப்பா !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (17-Nov-16, 10:37 pm)
Tanglish : kanne PAPPA
பார்வை : 75

மேலே