வண்ணப் பாடல்
அருணகிரி நாத னருளுமநு பூதி
****அனுதினமு மோத மகிழ்வோனே !
அரவுமதி சூடு மரனினிரு காதி
****லரியவுப தேச மருள்வோனே !
குருகுகொடி யோடு குறமகளி னோடு
****குலவிமயி லேறு மழகேசா !
குருவருளை நாட வுளமகிழு மாறு
****குறைகளைய வோடி வருவோனே !
மருவுமடி யாரி னிதயமுறை வேல
****வனைமதுர மான இசையாலே !
மனமுருகு மாறு விழிபெருகி யோட
****மறைமுதலு மோத மலர்வோனே !
திருவருளை நாடி வருமடிய ரோடு
****தினமுவிளை யாடு முருகேசா !
திகழுமெழி லோடு தவமுடைய ரோடு
****திருவருணை மேவு பெருமாளே !