உழவன் ---விவசாயம்
உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள்
உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள்
வெயில் என்றும் மழை எனறும் பாராது
வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர்
மனிதர்களின் உயிர் வளர்க்கும் அட்சயப்பாத்திரங்கள்
மண்ணில் உயிர் வெறுத்து மாய்த்து மடிகின்றனர்
விவசாய நிலங்களை வெளிநாட்டவருக்கு விற்கின்றனர்
வாழ வழியின்றி விவசாயிகள் சாகின்றனர்
மண்ணின் மைந்தர்களுக்கு மண் சொந்தமில்லை
மேல் நாட்டவரின் பணத்தால் வந்தது தொல்லை
நிலத்தடி நீரை உறிஞ்சி கோடிகளை குவிக்கின்றனர்
நிலத்திற்கு நீர் பாய்ச்சிட இன்றி விவசாயிகள் துடிக்கின்றனர்
கடலில் வீணாக கலக்கும் நீரை தர மறுக்கின்றனர்
கண் கலங்கி பயிர்வாட விவசாயிகள் வாடிகின்றனர்
மரபணு விதைகள் என்று மலட்டு விதைகள் தருகின்றனர்
மறு விவசாயத்திற்கு பயன்படாத குப்பையை விற்கின்றனர்
பூச்சி மருந்து பூச்சியை விட விவசாயிகளையே கொல்கின்றது
உரத்தின் விலையோ விவசாயிகளின் சக்தியை குறைக்கின்றது
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றனர் அன்று
விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கின்றனர் இன்று
விளை நிலங்களில் எல்லாம் வீடுகள் கட்டுகின்றர்
விரைவில் உணவுத்தட்டுப்பாடு உலகிற்கு வரும்
விவசாயி தழைத்தால் விவசாயம் தழைக்கும்
விவசாயம் தழைத்தால் உலகம் தழைக்கும்
.........................................................................................
நன்றி
கவிஞர் இரா. இரவி, மதுரை