தமிழ்ப் புனைவுகள் ஏன் இப்படிச் சுருங்கிவிட்டன

நவீனத் தமிழ் இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, நாவல் ஆகிய தளங்களில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளோடு ஒப்பிடும்போது வெவ்வேறு வகையிலான எழுத்துகள் தமிழில் மிக மிகச் சொற்பமாகவே காணப்படுவது இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமான விஷயம் இல்லை. வரலாறு, குற்றம், அறிவியல், அரசியல், மருத்துவம், விளையாட்டு, காதல் என்று பல்வேறு தளங்களில் பொது வாசகர்களுக்கான பல்வேறு நாவல்கள் ஆங்கிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கில் வெளியாகின்றன. தமிழிலோ அதற்கு நேரெதிரான நிலையே தென்படுகிறது.

தமிழில் 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற வரலாற்றுப் புனைவுகளுக்குப் பின் தரமான வரலாற்றுப் புனைவுகள் எத்தனை வந்திருக்கின்றன? தமிழில் புதிய வரலாற்று நாவல்களைப் படிக்க முயலும் இளம் வாசகர்களுக்குப் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வரலாற்றுப் புனைவுகளுக்கு மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. சுஜாதாவுக்குப் பின் அறிவியல் புனைவுகளின் கதி என்ன? இளைஞர்களை ஈர்க்கும் தரமான பொழுதுபோக்குக் காதல் கதைகளுக்கும் தமிழில் இன்றைக்கு அவ்வளவு பஞ்சம்! ஒருகாலத்தில் பாலகுமாரனின் நாவல்கள் எவ்வளவு கலங்கடித்தன! இந்திய ஆங்கில எழுத்துகளைப் பொறுத்தவரை சேத்தன் பகத், ரவீந்தர் சிங் போன்றோர் எழுதும் ரொமான்ஸ் நாவல்களுக்கான இடம் தமிழில் பெரிதாகக் காலியாக இருக்கிறது.

நாட்டார் தெய்வ வழிபாடு முதல் ஒவ்வொரு கோயில் கோபுரத்துக்கும் ஒரு கதை உண்டு என்று சொல்லப்படும் அளவுக்குத் தமிழ்க் கலாச்சாரத்தில் இறைநம்பிக்கை குறித்த வளமான பாரம்பரியம் இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து 'தி டாவின்ஸி கோட்' போன்று ஒரு மதம் சார்ந்த ‘த்ரில்லர்’ ஏன் இங்கு வருவதில்லை? தன்னம்பிக்கை, ஆன்மிகம், மாயாஜாலக் கூறுகள் ஆகியவற்றைக் கலந்து வெகுஜன வாசகர்களை ஈர்க்கும் வகையில் பௌலோ கொயலோவின் நாவல்கள் போன்ற முயற்சிகள் தமிழில் ஏன் இல்லை? புனைவுகளைப் போன்றே பயண இலக்கியங்களும் அதிக அளவிலான வாசகர்களால் உலகெங்கும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. தமிழில் ஏ.கே. செட்டியார், சாவி போன்றோருக்குப் பிறகு இந்த வகைமையிலும் பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

நவீன உலகம் நம் வாழ்க்கை அனுபவங்களைப் பல மடங்கு விஸ்தரித்திருக்கிறது. தற்காலத் தமிழ் இலக்கியத்துக்குள் அதன் வெவ்வேறு திசையிலிருந்தும் காற்று வீசட்டும்; அப்போதுதான் புழுக்கம் தணியும்!

Keywords: தமிழ்ப் புனைவுகள், ஏன் இப்படிச் சுருங்கிவிட்டன?

எழுதியவர் : (27-Nov-16, 12:07 pm)
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே