காதல் வீழ
முகில் மிஞ்சி நீர் சொரிந்தன
அவன் விழிகள் இன்று ஏனோ?
மகிழ் மறந்து வலி நிறைந்தன
அவன் வழிகள் இன்று ஏனோ?
மணம் முடித்து அவள் அகல
மனம் வெறுத்து இவன் உழல
தினம் நினைத்தே தீ அணைத்தான்
மடமை நினைத்தே தான் சினத்தான்
சொல்லாக் காதல் சுகம் கூட்டியது
அவளில்லா போது துன்பம் வாட்டியது
புவி நிறுத்தும் விசை போல
அவள் நினைவு இவன் ஆள
கவிதை வடித்தான் கவலை மாயவில்லை
கண்ணீரைத் துடைத்தான் அதுவும் ஓயவில்லை
மறக்க எண்ணினான் மனதைப் பகைத்தான்
சிரிக்க எண்ணினான் இதழைப் பகைத்தான்
மதியை எழுப்பினான் மங்கையை மறக்க
விதியை நினைத்தான் வினையைத் தொடுத்தான்
நாட்கள் நகர்வில் புத்தி அலசினான்
வாழ்க்கை ஒன்றைப் புதிதாய் தொடங்கினான்.