வீர நங்கையே எங்கு சென்றாய்

ஏன் இந்த அவசரம்
வீர நங்கையே!
ஏன் இந்த அவசரம்?

துணிச்சலுக்கே
சவால் விட்ட
துணிச்சல் நீ!
தைரியத்திற்கு
உரு கொடுத்த
பிரம்மா நீ!

ஒற்றை விரல் நீட்டி
உரக்க பேசிய
பெண் சிங்கம் நீ!
இரட்டை விரல் காட்டி
வாகை சூடிய
வெற்றியாளன் நீ!

படிப்பிலே
உச்சம் தொட்ட
படுசுட்டி நீ!
நடிப்பிலே
உயரம் தொட்ட
நவரச நாயகி நீ!

அரசியல் பேசும்
சாணக்கியர்களுக்கு
சிம்மசொப்பனம் நீ!
வாரிசு அரசியல்
வளர்ப்பவரிடையே
தனித்துவம் பெற்றாய் நீ!

ஏழைகள் வளம் பெற
நீ தீட்டிய
திட்டங்கள் ஏராளம்!
பாமரனும் நலம் பெற
நாளும் நினைத்திட்ட
உன் மனமோ தாராளம்!

வானம் காண
வென்னிலவொன்று
விண்ணை நோக்கி பயணித்தது!
கானம் பாடிய
விழிகள் இரண்டும்
விழியாமல் ஏனோ உறங்கிப் போனது!

நின்று போனதோ
உன் இதயத்தின்
சத்தம்?
இல்லை இனிதான் தொடங்குது
ஒவ்வொரு இதயத்திலும்
உன் சகாப்தம்!

எத்தனையோ மகுடங்கள்
நீ சூடிட
காத்திருக்கு!
சிம்மாசனங்கள் பலவும்
நீ அமர
தவமிருக்குது!

மகுடங்களை சூடாமல்
சிம்மாசனத்தில் அமராமல்
அவசரமாய் எங்கு சென்றாய்!
கோடான கோடி
இதயங்களை தவிக்க விட்டு
வீர நங்கையே எங்கு சென்றாய்!

த.மணிகண்டன்

எழுதியவர் : தங்கமணிகண்டன் (6-Dec-16, 9:41 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 85

மேலே