மூர்த்தியின் கனவு
தாமிரபரணி பாயும் மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவன் மூர்த்தி. சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தான், இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை. மூர்த்தி சிறு வயதாயிருக்கும் போதே அவனது தந்தை காணாமல் போய்விட்டார்.
மூர்த்தியின் தாய் ஒற்றை ஆளாக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை படிக்க வைத்தார்.
தன் சிறு வயதில் மூர்த்தி நிறைய கஷ்டங்களையே அனுபவித்தான். ஆயினும் அதை கண்டு துவண்டு போகவும் இல்லை, தடம் மாறி போயிடவும் இல்லை. மூர்த்தியும் அவனது அண்ணன்களான குமரன் மற்றும் கிருஷ்ணன் மூவரும் தங்கள் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து படிப்பிலேயே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினர். அவனது தங்கையும் அவர்களுக்கு சளைத்தவளில்லை அவளும் படிப்பில் படுசுட்டி.
பிள்ளைகள் மேல்படிப்பு படிக்க படிக்க குடும்ப கஷ்டமும் கூடிக் கொண்டே போனது. மூர்த்தியின் தாயார் சுந்தரியால் தனி ஆளாக குடும்ப சுமையை சமாளிப்பது மிகவும் சிரமமாயிருந்தது. பிள்ளைகளுக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு பல இடங்களில் கடன்களை வாங்கி பிள்ளைகளின் படிப்பிற்காக செலவு செய்தார். மூத்தவன் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ பயின்றான். இளையவன் கிருஷ்ணன் பத்தாவது முடித்தவுடனே ஐ.டி.ஐ சேர்ந்து படித்தான். மூர்த்தியும் அவனது தங்கை ரேவதியும் பள்ளிப் படிப்பை தொடங்கியிருந்த நேரம் அது.
மூர்த்தியின் அண்ணன்கள் இருவருமே தங்கள் தாயார் படும் கஷ்டத்தை உணர்ந்து படிப்பை மட்டும் முழு மூச்சாய் கொண்டு படித்தார்கள். இருவருமே நன்றாகப் படித்து தங்களின் படிப்பை முடித்து விட்டார்கள். படிப்பை முடித்ததும் இருவருமே சும்மா இருக்கவில்லை. தங்களால் இயன்ற சிறு வேலைகளை செய்து குடும்ப சுமையை ஓரளவு தாங்கி கொண்டனர்.
சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே பல கம்பெனிகளில் இன்டர்வியூகளில் பங்கேற்றனர். மேலும் அரசு வேலையில் சேருவதை இலட்சியமாக்கி தங்களை அதற்காக தயார்படுத்திக் கொண்டு இருவருமே அரசு வேலையிலும் சேர்ந்தனர். மூர்த்தியின் தாயார் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விடிவுகாலம் பிறந்தது. அன்றுமுதல் மூர்த்தியின் குடும்பத்தில் வசந்தகாலம் தொடங்கியது.
அடுத்தது மூர்த்தி தான். அவனும் தன் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நன்றாகவே படித்தான். நல்ல மதிப்பெண்களோடு தனது பள்ளிப் படிப்பை முடித்தான் மூர்த்தி. நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. தன் மகனுக்கு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார் மூர்த்தியின் தாயார். ஏனெனில் அவர் பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த மகுடமாயிற்றே. அதுமட்டுமில்லாமல் அவர்களது கிராமத்திலிருந்து அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் முதல் ஆள் மூர்த்தி தான்.
மூர்த்தியும் மகிழ்ச்சியோடு கல்லூரியில் சேர்ந்து படித்தான். கல்லூரியிலும் அவன் கவனம் முழுமையும் படிப்பிலேயே ஒன்றியிருந்தது. கல்லூரியில் அவனுக்கு பல நண்பர்களோடு நட்பு ஏற்பட்டது. மூர்த்தியின் மென்மையான அணுகுமுறை அவனோடு அனைவரையும் நெருங்கி பழக வைத்தது. மூர்த்தியும் தனது தாயின் கனவை நனவாக்க வேண்டி முழு மூச்சுடன் படித்தான்.
இதுவரை தனக்கென்று தனி கனவு, இலட்சியம் என இல்லாமல் இருந்த மூர்த்திக்குள் ஒரு இலட்சிய கனவு உருவானது. அவனது கல்லூரியில் படிக்கும் சீனியர் நண்பர்களோடு ஏற்பட்ட நட்பு அவனது கனவுக்கு உரு கொடுத்தது. தான் ஒரு டைரக்டர் ( இயக்குநர் ) ஆக வேண்டும் என்னும் வேட்கை அவனுக்குள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போனது. அதுதான் அவனது இலட்சிய கனவு.
மூர்த்தியின் சீனியர் நண்பர் ஒருவர் அவனுக்கு சில தொழில்நுட்ப நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். அதன் மூலம் அவன் தனது கலைத் திறமையை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டே போனான். தன்னுடைய தொழில்நுட்ப அறிவின் மூலம் "ஷார்ட் பிலிம் " என்றழைக்கப்படும் குறும்படம் எடுக்கும் அளவுக்கு முன்னேறினான்.
தன்னோடு பயிலும் நண்பர்களின் உதவியோடு ஒரு குறும்படம் ஒன்றை தயார் செய்தான். அந்த குறும்படம் எடுக்க அவனது நண்பர்கள் பல்வேறு உதவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தனர்.
அவன் எடுத்த முதல் குறும்படம் அவனது நண்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அவனைப் பாராட்டி அவனுக்கு உற்சாகம் ஊட்டினர்.
அவனது நண்பர்களும் உறவினர்களும் கொடுத்த ஊக்கம் அவனை இன்னும் முன்னெடுத்துச் சென்றது. ஏற்கனவே எடுத்த குறும்படத்தின் மூலம் ஏற்பட்ட அனுபவம் அவன் கனவுக்கு மேலும் தீனி போட்டது. அவன் கனவு அவனை தூங்க விடவில்லை. மேலும் மேலும் எதையாவது செய்ய வேண்டும் என்று அவனை தூண்டிக் கொண்டே இருந்தது.
"உறங்கும் போது வருவதல்ல கனவு, எது ஒன்று உன்னை உறங்க விடாமல் செய்கிறதோ அதுவே கனவு " என்னும் கலாம் அவர்களின் அமுத மொழிக்கேற்ப அவனது கனவு அவனை தூங்க விடவில்லை. மேலும் ஒரு குறும்படம் எடுத்தான். இதற்கும் அவன் நண்பர்களே அனைத்து உதவிகளையும் செய்தனர். தன் நண்பர்களின் உதவியோடு வெற்றிகரமாக அந்த குறும்படத்தை எடுத்து முடித்தான் மூர்த்தி.
தான் எடுத்த குறும்படத்தை விருதுக்காக அனுப்பி வைத்தான். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கிணங்க அவனது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அவனது குறும்படம் வெற்றி கண்டது. அவனது வெற்றி குறும்படத்தை கண்ட முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் அவனுக்கு உதவிட முன் வந்தார்.
தனது கனவு நனவாகும் உற்சாகத்தில் மூர்த்தி முழு முனைப்புடன் ஒரு சிறந்த கதையை படமாக்கி அதிலும் வெற்றி கண்டான். அவனது படம் வெற்றி கண்டதை தொடர்ந்து அவனுக்கு வாய்ப்புகள் குவிந்தது.
ஏழை குடும்பத்தில் பிறந்த மூர்த்தியின் கனவு விடாமுயற்சியின் உதவியால் இன்று நனவானது. நாடே போற்றும் நல்ல இயக்குநராக இன்று வலம் வருகிறான் மூர்த்தி.
உங்கள் நண்பன்
த.மணிகண்டன்.............

