சிலையும் அலையும்

வள்ளுவனே !
எங்கோ
ஓர்
ஒற்றுமையுண்டு
தலைப்பிற்கும்
உனக்கும் .

ஓர் அடியில்
அளந்தவனே
வியந்தான் !
நீ ஈரடியில்
அளக்கையில்
உலகை !

அறிவுடைமை
விதைத்தவனே
அறிவாயா ?

வளர்ந்து நிற்கிறாய்
குமரிச் சங்கமத்தில்
வானுயரமாய் !

கோவில் கட்ட
நினைப்போரின்
அறியாமையாய் !

தாய்ப்பாலுக்கு
ஏங்கும்
கூட்டத்திற்கு
தமிழ்ப்பால்
ஊட்டியவனே !

‘அறத்துப்பாலில்’
மனசாட்சி
மரியாதை,
நன்னடத்தையை ,
விதைத்தவனே !
மரத்துத் திரிகிறான்
மனிதம் மரிக்கத்
துணிகின்றான்
ஆசையால் !

‘பொருட்பாலில்’
அரசியல்,
அமைச்சியல்மை,
அங்கவியல்,
ஒழிபியல்,
உரைத்தவனே !
உன்னை
புகைப்படமாக்கி
புதைத்துவிட்டான்
பொதுவுடைமையை !

'காமத்துப்பாலில்'
களவியல்,
கற்பியல்,
போதித்தவனே !
உன்னை
கடலில் நிறுத்தி
கரைகின்றான்
காமக்கடலில் !

தேசத்தில்
சிலைக்கு
பஞ்சமில்லை
இவையேதும்
உன்னை
மிஞ்சவில்லை
அடிகளில்
அளந்து
நெடுவென
வளர்ந்ததால் !

உலகப்
பொதுமறை
தந்தவனே !
உன்னை
சமுத்திரத்தில்
நிறுத்திச்
சாக்கடையில்
புதைத்துவிட்டோம்
போதனைகளை !

உன்
அறவுரைக்கு
தெளிவுரை
எழுதிய
கவிஞர்கள்
தெளியாமல்
தவிக்கின்றனர்
காமத்துப்பாலின்
மயக்கத்தில்.,,,

உன்னை
மொழிப்
பெயர்த்த
புனிதன்
பலருண்டு
உலகில் !

மொழியால்
பெயர்த்த
அரசியல்
தலைவனும்
உண்டு
இது
இந்தியா !!

வள்ளுவனே
உன்னை
திரையிட
ஆசையுண்டு
ஆயினும்
ஓர்
ஐய்யமுண்டு
U/A சான்றிதழ்
தந்து விடுமோ
சென்சார்குழுமம்
உன் ஆடை
கண்டு !

அந்நாளில்
நீ
சுதந்திரமாய்
வளர்த்தாய்
பின்னாளில்
நாங்கள்
சுதந்திரத்திற்காக
வளர்த்தோம்
தாடியை !

தலைவனின்
சிலையை
மறைக்கும்
ஆணையேற்று,
உன் அருகில்
நிற்கின்றான்
தேர்தல்ஆணைய,
ஊழியன்
அகரம்
அறியோன்
போலும் !

காலத்தை
கடந்தவனே !
நூற்று நாற்பத்து
நான்கும்(144)
இந்த
நூற்று முப்பத்து
மூன்றிடம்(133)
சரணடைந்தது
தேர்தலில் !

ஆளுமின்றி,
கோலுமின்றி,
ஆளுகின்றாய்,
உலகை !

காந்தியும்
உன்
ஈர்ப்பினால்
ஏற்றானோ ?
எளிமை !

ஏசுவும்
உன்
வரிகளில்
பயின்றானோ ?
அடக்கம் !

எளிமையின்
உருவமே !
வாசுகி
மணாளனே !
மானத்தமிழனின்
அடையாளமே !

பாஸ்போர்டின்றி
விசாவின்றி
கண்டம்
கடக்கிறாய்
எல்லோர்
மனதிலும்
தமிழை
விதைக்கின்றாய் !

சகிப்பு
போற்றியவனே !
உனக்கு
சாதி
சான்றிதழ்
கேட்கிறான்
நதிக்கரையின்
புனிதம்
காப்போன் !

உன்னை
நாடு கடந்தும்
வளர்த்தோம்
நகரும்
பேருந்திலும்
வடித்தோம்
பிறகென்னவென்று
கேட்கிறாயா ?

எம்
தேசத்தில்
ஆட்சி
மாறும்
போதெல்லாம்
காட்சியும்
மாறும்
அப்போது
ஆண்டவனில்லை
அந்த
ஆண்டவனும்
காணாமல்
போய்விடுவான்
இருந்தும்
எங்கும்
எப்போதும்
ஒலித்துக்கொண்டே
இருக்கிறது
உன்
குரல்
அது
தமிழனை
தலை நிமிர
செய்த
எம்
திருக்குறள்

எழுதியவர் : விஜயகுமார் துரை (10-Dec-16, 6:22 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 83

மேலே