தாம்பத்திய உறவில் விரிசல்

தடாகமும் தாமரையும் இயற்கையின் இணைப்பு !
தாம்பத்திய உறவுகள் இதயங்களின் பிணைப்பு !
பிரித்திடும் சச்சரவுகள் முறித்திடும் உறவுகளை
குறையிலா உள்ளமும் குறைவன்றோ உலகிலே !
விடையறியா வினாவால் விரிசலும் விழும்
மடைதிறந்த வெள்ளமாய் விமர்சனம் எழும் !
அற்பக் காரணமும் குற்றமாகும் ஆகாயமளவு
அன்பான உள்ளமும் உடைந்திடும் பிரியுமளவு !
ஐக்கியம் அடைந்தும் ஐந்தறிவாய் மாறிடுவர்
ஐயமெனும் அரக்கன் இதயத்தில் நுழைந்தால் !
காதலித்து மணந்தவர் விவாகரத்து செய்வர்
காரணம் கேட்டால் கருத்து வேறுபாடென்பர் !
கலியுக காலத்தில் காலையில் திருமணம்
கணநேர முடிவால் மாலையில் விவாகரத்து !
தவறான பாதையில் இன்றைய தலைமுறை
தவித்திடும் மனங்களில் வருத்தமே வழியும் !
ஊரடங்கு உத்தரவல்ல உடனடியாய் விலக்கிட
ஊர்கூடி வாழ்த்துவது ஒன்றிணைந்து வாழவே !
உறவுகள் உருவாக வழிகாட்டும் தாம்பத்தியம்
வாழ்ந்துக் காட்டிடுக விரிசலின்றி ஆயுள்வரை !
பழனி குமார்