ஆகாவுன் காட்சி அழகு
கருணை விழிகளால் காத்திடும் தாயே
மருவூ ரரசியே வாராய் ! - விருப்புடன்
பூமாலை சூட்டிட பூரித்தாய், நான்சூட்டும்
பாமாலை யும்கேட்டுப் பார் . 1.
பார்போற்றும் அன்னையே! பாவத்தைப் போக்கிடுவாய்
கூர்விழியால் நோக்கிக் குறைகளைவாய் - தேர்மீதில்
வாகாய்ப் பவனி வரும்பரா சக்தியே !
ஆகாவுன் காட்சி அழகு . 2.
அழகே யுருவான அன்னையின் கோலக்
கழலின் தரிசனம் கண்டால் - உழலும்
மனக்கவலை தீரும், மகிழ்ச்சிப் பெருகும்
கனவும்கைக் கூடிடும் காண் . 3.
காண்பேனோ வுன்றன் கமலமலர்த் தாளினை
வீண்பொழுது போக்காமல் வேண்டுவனோ - நீண்டொலிக்கும்
கோவில் மணியாய்க் குளிர்ந்திடச் செய்வேனோ
பாவியெனைக் காப்பாய் பரிந்து . 4 .
பரிந்துநீ காவாக்கால் பார்தூற்று மம்மா
சரியென்றால் விட்டுவிடு தாயே! - உரிமையுடன்
கேட்கிறேன் அன்பினால் கெஞ்சிக் கதறுகிறேன்
ஆட்கொள்வா யென்னை அணைத்து. 5.
அணைக்குமுன் கைகளை ஆசையுடன் தொட்டுப்
பிணைத்துக்கொள் வேன்நானும் பேறாய் ! - துணையாய்
வருமுன்னை நெஞ்சத்தில் வைத்துச் சுமப்பேன்
திருமுகம் கண்டே திளைத்து . 6.
திளைக்குமென் னுள்ளமும் தேவியுனைக் கண்டு
சளைக்காமல் சந்ததமும் தாவும் !- விளையாட்டும்
ஏனம்மா? பிள்ளையெனை ஏற்பாய் பரிவுடன்
தேனமு தூட்டியெனைத் தேற்று . 7.
தேற்றும் பரிவுகண்டு தேம்பி யழுவேனே
போற்றி யடிபணிவேன் பூரிப்பில் ! - கூற்றுவன்
வந்தால் கலங்கவே மாட்டேன், முழுமனதாய்
அந்தகனு டன்செல்வேன் ஆம். 8.
ஆமம்மா! உன்னருளே ஆயுளுக்கும் போதுமுன்
நாமமே சொல்லி நலம்பெறுவேன்! - கோமதியே !
கொண்டைப்பூ வாசம் குளிர்விக்கக், கால்களிலே
தண்டையுங் கொஞ்சவந்து தாங்கு . 9.
தாங்கினாய் மேல்மருவூர் தாயே! தயாபரியே!
ஓங்கார ரூபிணியே! உத்தமியே! - பாங்குடன்
ஆடிப்பூ ரத்தில் அழகாய்ப் பவனிவரப்
பாடிடுவேன் வெண்பா படைத்து . 10.