எசப்பாட்டு - 05 வேனல் கால வெப்பத்திலே

எசப்பாட்டு - 05

வேனல் கால வெப்பத்திலே
வேப்பமரம் கீழமர்ந்து
வெள்ளைத் தாளும் பென்சிலுமா
ஏதேதோ எழுதுறேளே
கண்ணய்யா - நீங்க
ஏதேதோ எழுதுறேளே
கண்ணய்யா

எழுதறத சொல்லனும்ன்னா
அருகில்வந்து அமர்ந்துக்கோ நீ
கேள்விஒன்னக் கேக்கப்போறேன்
கேள்விக்கு நீபதில சொல்லு
கண்ணம்மா - என்
கேள்விக்கு நீபதில சொல்லு
கண்ணம்மா

கேள்வி நீங்க கேக்காம
பதுலுஎன்ன சொல்லப்போறேன்
கேள்வி மொதல்ல கேளுமய்யா
பதிலா பொறகு தாறேனே
கண்ணய்யா – நான்
பதுலு பொறகு தாறேனே
கண்ணய்யா

நம்ம ரெண்டு பேரு மிந்த
உலகவிட்டு போனபின்னே
நாலு பேரு நினைக்கணுன்னா
என்னசெய்ய வேணும் சொல்லு
கண்ணம்மா - நாம
என்ன செய்ய வேண்டும் சொல்லு
கண்ணம்மா

பத்து வருசம் ஆனபின்னும்
நம்மபேரு சொல்லவொரு
புள்ளை பெத்து தரலேன்னு
கேலிசெய்ய போறேளா
கண்ணய்யா - என்னைக்
கேலிசெய்ய போறேளா
கண்ணய்யா

நம்ம போல உலகத்துல
எத்தையோ பேரிருக்கா
புள்ள பெத்து தரலேன்னு
ஒன்ன குத்தம் சொல்ல மாட்டேன்
கண்ணம்மா - நான்
ஒன்ன குத்தம் சொல்ல மாட்டேன்
கண்ணம்மா

கண்ணு நீயும் கலங்காதே
என்னுயிரே நீ தானே
கேட்டதொரு கேள்விக்கு
வேறு ஏதேன் பதிலிருக்கா
கண்ணம்மா - சொல்லு
வேறு ஏதேன் பதிலிருக்கா
கண்ணம்மா

வீடு நெலம் வாங்கி வெச்சா
ஆவணத்தில் பேரிருக்கும்
தோப்புத் தொரவு வாங்கி வெச்சா
ஆவணத்தில் பேரிருக்கும்
கண்ணய்யா - அந்த
ஆவணத்தில் பேரிருக்கும்
கண்ணய்யா

ஊரொலகம் கெட்டுருக்கு
சொத்து சுகம் சேத்துவெச்சா
வேறொருத்தன் தந்திரமாய்
ஆவணத்தை மாத்திப்புட்டா
கண்ணம்மா - நம்ம
ஆவணத்தை மாத்திப்புட்டா
கண்ணம்மா

படிப்பறிவும் இல்லாம
பணமில்லா வாழ்க்கையிலே
பாமரனின் மகளாக
பொறந்ததுதான் தப்பாச்சு
கண்ணய்யா - நான்
பொறந்ததுதான் தப்பாச்சு
கண்ணய்யா

ஏட்டுப்படிப்பு இல்லாத
பாமரனின் பொஞ்சாதி
நாளும் டீவீ பாத்துக்கிட்டு
நாட்டுநடப்ப தெரிஞ்சுக்கடி
கண்ணம்மா - நீ
நாட்டுநடப்ப தெரிஞ்சுக்கடி
கண்ணம்மா

எதையெதையோ எழுதறயே
எழுதிவெச்ச கவியெல்லாம்
ரெண்டுபேரு படம்போட்டு
அச்சடிச்சா புத்தகமா
கண்ணய்யா - எத்தனை
பேர் படிப்பாக
கண்ணய்யா

எசப்பாட்டு பாடுறயே - உன்
குயிலோசை பாட்டெல்லாம்
இளையராசா இசையமைச்சு
இசைத்தட்டாய் போட்டுப்புட்ட
கண்ணம்மா - உன்
குயிலோசை ஊர்கேக்கும்
கண்ணம்மா

சொல்வதெல்லாம் செவிகளுக்கு
இன்பமாக இருக்குதைய்யா
ஆசையெல்லாம் நிறைவேற
ஆண்டவனும் நினனைக்கனுமே
கண்ணய்யா - அந்த
ஆண்டவனும் நினனைக்கனுமே
கண்ணய்யா

- தர்மராஜன் வெங்கடாச்சலம்

21-12-2016

எழுதியவர் : (22-Dec-16, 12:27 pm)
பார்வை : 66

மேலே