முந்தல் மலை

தங்கத்தினாலான தேரில்லை..
அரசனென்னும் செங்கோலுமில்லை...
இருப்பினும், நானுமொரு அரசனாய் மலைவளம் காணச் சென்றேன் நண்பர்கள் கண்ணன் மற்றும் பாரத்துடன்..

நான் வாழும் பகுதிக்கு மிக அருகில் உள்ளது தான் இந்த முந்தல் மலை...
மேற்குத் தொடர்ச்சி மலைகளுள் ஒன்று...
இங்கு சென்றாலே மனம் அமைதியாகிவிடும்...
சிறுவயதில் சென்றிருக்கிறேன்.

நண்பர்கள் கண்ணன் மற்றும் பாரத் முந்தல் மலையை காண வேண்டுமென்று கேட்டார்கள்..
உடனே எனக்கும் காண வேண்டுமென்ற ஆர்வம் உண்டாயிற்று.

முந்தல் மலையின் அடிவாரத்தில் கற்பக நாச்சியம்மன் என்ற கோவில் உள்ளது.
அங்கு எக்காலத்திலும் வறண்டு போகாத ஊற்றொன்று உள்ளது.

சரியென்று கல்லூரியிருந்து புறப்பட்ட நாங்கள் இரண்டு நாட்களுக்கு முன் மலை பெய்தால் அங்கு மலையில் இருந்து கீழே தண்ணீர் விழும் என நினைத்திருந்தோம்..

ஆதலால், புளியங்குடியில் இறங்கிய நாங்கள் எனக்கு உணவுப் பொட்டலமொன்றை வாங்கிக் கொண்டு நடந்தே முந்தல் மலையை அடைய முடிவெடுத்து நடந்தோம்...

ஏறக்குறைய 8 கீலோமீட்டர்கள் இருக்கும்..
இளங்கன்று எதற்கும் சளைக்காதென்று சொல்வதற்கெற்ப நாங்கள் நடந்தே முந்தல் மலையடைந்தோம்..
மலைவளப்பகுதி என்பதால் சுற்றி வனத்துறையினர் வேலி அமைத்திருந்தார்கள்..
கோவிலுக்குச் செல்லும் பாதையில் ஒரு நூழைவு வாயில் கேட் அமைத்திருந்தார்கள்...

அதைக் கடந்து வந்தோம்..
ஒரு பெரிய ஆலமரம் இருந்தது.
அதை அருகில் படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தன..
அதில் ஏறி இரண்டு படிகளைக் கடந்த போது ஒரு அரசமரம் இருந்தது.
அதனருகில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது..

" மது, மாமிசம், காலணிகளுடன் கோவில்களுக்குள் செல்லக் கூடாது ", என்ற அறிவிப்புப் பலகையைக் கண்டதால்,
காலணிகளை அகற்றிவிட்டு மேலே சென்றோம்..
அங்கு கம்பீரமாக ஒரு சிலை வீற்றிருந்தது.
அதைக் கண்ட பாரத், " அடேங்கப்பா. இந்த சிலையை பார்த்தாலே பயமாக இருக்கிறதே. ", என்று கூறினான்..
சிரித்துக் கொண்டே மேலே சென்றோம்.
மேலே வடக்கு நோக்கிய ஆலயத்தில் கற்பக நாச்சியம்மன் சிலையாக வீற்றிருந்தார்...
அதற்கு இரண்டு இழுப்பு கதவுகளிட்டு பூட்டி வைத்திருந்தார்கள்...

நாங்கள் வந்தது சிலைகளைக் கடவுளெனக் கும்பிட அல்ல..
எனக்கு மட்டுமல்ல.
என் நண்பர்களும் இவ்விடயத்தில் அவ்வெண்ணமே கொண்டவர்கள்...
சிறிது நேரம் படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தோம்...

கோவில் பூசாரி பூஜைப் பொருட்களுடன் வந்து,
அவர் கோவிலைத் திறந்தார்...

முந்தல் மலையில் எப்போதும் குரங்குகளிருக்கும்..
ஆனால், நாங்கள் சென்ற நேரம் குரங்குகளைக் காணவில்லை...

சரி மேலே செல்லலாமென்று எண்ணிய நான், காலணிகளை அணிந்து கொண்டு, மலை மீது ஏறுவதற்கான பாதையில் நண்பர்களை அழைத்துச் சென்றேன்..

கரடு முரடான மலைப்பாதை..
ஒவ்வொரு இடமாக காண்பித்துக் கொண்டே சென்றேன்..
செல்லும் இடமெல்லாம் செல்பி எடுத்துக் கொண்ட வந்தார்கள் நண்பர்கள்..
இருபாறைகளுகளுக்கு இடையில் நுழைந்து சென்றோம்...
நண்பர்கள் நன்றாக உள்ளதென்றார்கள்...
மேலும் மேலே பயணமானோம்...
தண்ணீர் விழும் இடமெல்லாம் வற்றி, காய்ந்து கிடந்தது...

ஏற்கனவே நான் பழகிய பாதைகளென்றாலும்,
நண்பர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைய வேண்டுமென்பதால்,
புதிதாக வந்தவனைப் போல் பாதைகளை அலைந்து திரிந்து தேடி அழைத்துச் சென்றேன்...

பாதையானது மலையில் இருந்து கீழே நீர் வழிந்தோடிய தடமாக இருக்கிறதென்றாலும்,
மிகவும் கரடுமுரடாக இருந்தது...

நண்பர்களிருவரும் சற்றும் அசராமல் என்னை தொடர்ந்தார்கள்..
அப்போது வெயிலில் கொடுமையால் தண்ணீர் தாகமெடுத்தது..
அப்போது தான் உரைத்தது தண்ணீர் பாட்டில் எடுத்து வரவில்லை என்று..

சரியென்று தாகத்தை அடக்கிக் கொண்டு மலை உச்சியில் உள்ள அருமையான இடம் காண நடந்தோம்..

ஒரு இலையைப் பார்த்தது ஞாபகம் வந்தது, " சிறுவயதில் அம்மா அவ்விலையைப் பிடுங்கி வெற்றிலை உண்ண என்று தருவார்.. ", என்பது..

அதிலொரு இலையைப் பறித்து மென்றுவிட்டு,
மற்றொரு இலையை கையில் பறித்து வைத்துக் கொண்டு,
அம்மா சிறுவயதில் என்னிடம் சொன்னதை நண்பர்களிடம் சொன்னேன்...

அவர்கள் அவ்விலை பிடுங்கி மூக்கால் நுகர்ந்துவிட்ட இது வெற்றிலை இல்லை.
ஓம இலை என்றார்கள்..
நானும் நுகர்ந்தேன் ஓமத்தின் வாசனை வந்தது.
இருப்பினும் அதை உண்டேன் தாகம் தணிப்பதால்...

நண்பர்கள் உண்ணவில்லை..
சரி அது அவர்கள் விருப்பமென்று வர அப்பாதை நகர முடியாத முட்கள், செடி கொடிகளால் குறுக்கிட்டது..
" நண்பா, நாம் வந்த பாதை தவறு. இப்போது தான் ஞாபகம் வருகிறது.
நாம் வந்த பாதையில் சிறிது தூரத்திற்கு முன்பே இடது பக்கம் செல்ல வேண்டும். ", என்றேன்.
நண்பர்களும் வேறு வழியின்றி திரும்பி நடந்தார்கள்..
கரடுமுரடான பாறைகளில் ஏறி, சிலநேரங்களில்
தாவித்தாவிச் சென்றும், சில இடங்களில் குனிந்து சென்றும், உச்சியை அடைத்தோம்..
அங்கு மலையுச்சி விளிம்பில் நின்று கண்ணனும் பாரத்தும் செல்பி எடுத்துக் கொண்டார்கள்...

சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு,
வந்தவழி வேண்டாமென மாற்றுப்பாதையில் சென்றோம்.
அப்பாதையும் தவறானதால் திரும்பி வந்தபாதை வழியாகவே கீழே வந்தோம்.
கொண்டு வந்த உணவை உண்டோம்..
அப்போது, கண்ணன் என்னை, " சாமியார் மாதிரி இருக்கிறாய்.
நீ இந்தப் பாறையின் மீது அமர்ந்துவிடு.
நாங்கள் சென்று பக்தர்களை அனுப்பி வைக்கிறோம். ", என்றார்கள்...

அமைதியான அம்மலையில் அமர்ந்து வாழ்நாள் முழுவதையும் செடி, கொடி மரங்கள் மற்றும் பறவைகள், விலங்கினங்களோடு கழித்துவிடலாம்.
பசித்தால் இலை, தழைகளைப் புசித்தே உயிர் வாழலாமென்றே தோன்றினாலும்,
அவ்வாழ்வே சுயநலமாகி விடுமென்று தொன்றியது..
சாப்பிட்டு முடித்துவிட்டு,
கோவிலுக்கருகில் இருந்த ஊற்றில் கை கழுவி விட்டு, வேண்டுமளவு நீர் அருந்திவிட்டு,
மெயின் ரோடு நோக்கி நடக்கலானோம்..
மனம் பேரானந்த நிலையில் இருந்தது..
மலையைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து மெயின் ரோடு வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றோம்..
அங்கிருந்து அடுத்த கால் மணிநேரத்தில் வந்த பேருந்திலேறி கல்லூரியை அடைந்தோம்..
அங்கு சற்று நேர ஓய்விற்குப் பிறகு,
அவரவர் கல்லூரி பேருந்தில் ஏறி வீட்டை அடைந்தோம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Dec-16, 11:47 am)
பார்வை : 485

மேலே