ஒரு பா ஒரு பஃது

ஒரு பா ஒரு பஃது ....!!
***********************************
காப்பு
*********
அன்னை யசோதையின் அன்பை வெளிக்காட்டும்
கன்னல் மொழியைக் கவியாக்க – முன்னவனே !
நின்தாள் பணிந்துனை நெஞ்சுருகி வேண்டுகின்றேன்
இன்னருள் தந்திடுவாய் ஈண்டு.
நூல்
*******
தேடும் விழிகளில் தென்பட மாட்டானோ?
பாடும் குயிலேநீ பார்த்தாயோ? – வாடுதே
என்னுள்ளம், கண்ணனை எண்ணியே சோர்ந்ததே
சென்றவனைக் கண்டிடில் செப்பு .1.

செப்புமொழி கேட்டாலும் சிங்காரக் கண்ணனவன்
தப்பேதும் செய்யான்போல் சாதிப்பான் – முப்போதும்
செய்யும் குறும்புகளைச் செல்லமாய்க் கண்டித்தால்
பொய்யுரைப்பான் புன்னகை பூத்து .2.

பூக்கும் மரங்களும் பூரிப்பில் பூச்சொரிய
தூக்கத்தில் கண்ணனும் சொக்கினனோ ?- சீக்கிரம்
வந்திடு வானென வாசலைப் பார்க்கிறேன்
சிந்தும் விழிகள் சிவந்து .3.

சிவந்த மலர்கள் சிலிர்த்திடக் கண்டேன்
புவனம் முழுதும் பொலிந்து ! – உவகை
பெருகும் படியாய்ப் பிரிய மகனும்
வருவான் விரைவில் மலர்ந்து .4.

மலர்ந்த சிரிப்பினில் மையல்கொண் டேகோ
குலப்பெண் களுடனவன் கூடிக் – குலவி
மகிழ்ந்திருப் பானோ? மழைபொழி யட்டும்
முகிலே கதிரவனை மூடு .5..

மூடிய வீட்டுக்குள் மோனமாய்ச் சென்றவன்
தேடியங்கு வெண்ணெய் திருடினனோ ? – ஓடி
ஒளிந்துவிளை யாடினனோ? ஒன்றுமறி யாமல்
துளிர்த்திடும் கண்ணீர் தொடர்ந்து .6.

தொடரும் குறும்பால் துடிக்கிறது நெஞ்சம்
நடக்கட்டும் சேட்டைகள் நாளும் ! – அடங்கா
விடிலவனைக் கட்டி விடுவேன் உரலில்
வடித்தால் நனையட்டும் மண் .7.

மண்ணையுண் டானோ ? மறுப்பேதும் சொல்வானோ ?
எண்ணித் தவிக்கிறதே என்னிதயம் – கண்ணன்
தயிர்க்குடத்தைப் போட்டுடைத் தானோ? அறியேன்
கயிற்றினால் கட்டிடுவேன் கண்டு .8.

கண்டதும் மாயனைக் கட்டி யணைத்திடுவேன்
எண்ணற்ற முத்தங்கள் ஈந்திடுவேன் ! – வெண்மதியாய்ப்
பூத்திடுவேன், அன்பால் புனிதனைக் கொஞ்சிடுவேன்
காத்திருப்பேன் நல்வரவுக் காய் .9.

காய்த்த மரக்கிளியே கண்ணனைக் கண்டாயோ ?
தாய்மனம் வேதனை தாங்குமோ ? – போய்ச்சொல்வாய்
கானுலவும் தென்றலைக் காதலிக்கும் பூக்களில்
தேனுண்ணும் வண்டேநீ தேடு .10.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Dec-16, 1:19 pm)
பார்வை : 47

மேலே