உணர்வு

ஒரு விதை
ஓராயிரம் விதைகளுக்கு
விதையாகிறது...

*****

நீ யாருக்கும் அடிமை இல்லை...
நீ யாருக்கும் முதலாளியும் இல்லை...
நீ மனிதன்.....

*****

ஆர்வமாக படித்து கொண்டிருந்த நாவலின் கடைசி பக்கம்
கிழிக்கப்பட்டிருக்கும் பொழுது
கிழிக்கப்பட்ட பக்கம்
எங்கேயேனும் கிடைக்காதா (கிடக்காதா) என்ற தேடலின் உணர்வு...

பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது
இந்த எண்ணுதல் நிற்காமல்
சென்று கொண்டே இருக்கக் கூடாதா என்ற உணர்வு...

மண்ணை கிழித்து
வெளிப்பட்ட கன்றை
பார்த்த உழவனின் உணர்வு...

தன் சேயை
முதல் முறையாக
கையில் வாங்கி
முத்தமிடும் தாயின் உணர்வு....

ஒரு ரொட்டி துண்டுக்காக
தவிக்கும் ஏழைச் சிறுவன் கையில்
ஒரு கை சோறு கிடைத்த உணர்வு...

வாழ்க்கை ஓட்டத்தில்
பல நாட்கள் பார்க்கா
தோழியை பார்த்து ஆரத்தழுவிக் கொள்ளும் பொழுது வரும் உணர்வு...

தொலைந்த செல்வம்
மீண்டும் கையில் கிடைக்கும் பொழுது தோன்றும் உணர்வு...

தேடித் தேடி தவித்து துடிக்கும் பொழுது
தேடலின் தேடலாய்
உயிரான உயிரே
உயிரான பொருளே
கிடைத்த நொடியின் உணர்வு...

பச்சையாய் வளர்ந்திருந்த நெல்மணி
காய்ந்து கிடக்கும் பொழுது தோன்றும் உணர்வு...

வழி தெரியா ஊரில்
வழியாக வந்த பெரியவர்
வழி காட்டி விட்டு போகும் பொழுது தோன்றும் உணர்வு...

பசிக்கிறது
என்பதை சொல்லாமலேயே
உணர்ந்து
தனக்கான சோறை
தாமாக கொண்டு வந்து நீட்டிய தாயின் செயலை பார்க்கும் பொழுது தோன்றும் உணர்வு...

அழுது கொண்டிருக்கும் நொடி
தலையை தோளில் சாய்த்து
கண்ணீரை துடைத்து விட்டு
மடியில் தூங்க வைக்கும் தோழியின் செயலில் தோன்றும் உணர்வு...

இன்னும் சற்று நேரத்தில்
பேருந்து சென்று விடும்
தேர்வுக்கு நேரமாகி விட்டது
எனும் நொடியில்
தேர்வு அறைக்கே கொண்டு சென்று விட்ட
தந்தையை பார்க்கும் பொழுது தோன்றும் உணர்வு....

உனக்கு தரவே மாட்டேன்
என்று சொல்லிவிட்டு
தூக்கி வைத்து
காக்கா கடி கடித்து
ஊட்டி விட்ட
அண்ணன் பாசத்தில்
தோன்றிய உணர்வு...

தன் சோற்றில் கை வைக்க
இன்னொரு உயிர் பட்டினியால் தவிக்க
அந்த உயிருக்கு சோறு தந்த
அந்த நல்ல உள்ளத்தை பார்க்கும் பொழுது தோன்றும் உணர்வு...

தன்னால் தூக்கி விட முடியவில்லை...
தவறி விழுந்த நண்பனை...
காரணம் தனக்கு கைகள் கிடையாது
இருந்தும் உட்கார்ந்து
தன் தோளை பற்றி எழுந்திரு நண்பா
என்று சொல்லும்
அந்த நண்பனின் செயலை எண்ணி
பூரித்து போகும் இன்னொரு நண்பனின் உணர்வு...

உணர்வுகளுக்கு மொழி இல்லை...
உணர்வுகள் கண்ணீராய்
புன்னகையாய்
கோபமாய் விளையாட்டாய் வெளிப்படுகிறது

உணர்வுகள் அதற்கு மொழியே தேவை இல்லை...
ஒற்றை வார்த்தையில் உணர்வு
மனிதம்...
உணர்வுகள் முடிவுறுவதே இல்லை...
இது கொஞ்சம் தான்...

உணர்வுகள் என்பது இசை...
இசையை போலவே மனிதத்தோடு...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Dec-16, 10:03 pm)
Tanglish : unarvu
பார்வை : 91

மேலே