அணைத்துக்கொள்
உன் குழலின் அழகில்
மயங்கி நிற்கும்
நாணல் குழலின்
ஒலியின்அலையும்..
குறிஞ்சி மலரும்
குவிந்து நிற்கும்
முல்லையும் நானும்
நாணும் மருதமும்..
பொதிகைத் தவழ்ந்த
இனிமைத் தென்றலும்
போதி மரமாய்
உன்னை தொட்டதும்..
கவியாய் குவிந்து
காதில் நுழைந்தேன்
உன்இதய ஒலியை
இதமாய் கேட்க..
மல்லிகை மணமாய்
உள்ளே புகுந்தேன்
உன் மனமாய் மாறி
மலராய் மலர..
நிழலாய் மாறி
நித்தம் பிடித்தேன்
காலந்தொட்டும்
தொடர்ந்தே வர..
என் உயிரும் மெய்யும்
உனக்கே உரிமை
உன் செவியை சாய்த்து
சேதியை கேளாய்
இனிமை என்கிற
கம்பளம் விரித்து
என் இளமைக் காலம்
சுருட்டிவிட்டாய்
இதயம் என்று
ஒன்றிருந்தால் - எனை
அணைத்துக்கொள்
இன்பத்தமிழே...