இல்லாளின் மனக்குமுறல்

"ஒரு இல்லாளின் மனக்குமுறல்"


தகர்ந்துப்போன வாழ்க்கையை நினைத்து, தனியொருவளாக புலம்பிக் கொண்டிருக்கின்றேன்.
தாரமாய் வாழ்வது தாங்கொணா வேதனையைக் கொடுக்குமென்று சற்றும் தெரியாமல் போய்விட்டதே..

தங்கைகளையும் தாயையும் தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுபவன்,
தாரத்தையும் போற்றிடுவான் என்று நினைத்தது என் மதியீனம் தானே....

மோகமும் தாபமும் முழுதாக முடிந்துவிட்டனவா மூன்று மாதங்களில்......

மனம்விட்டு பேசினால், மறக்கப்படும் மனஸ்தாபங்கள் என்பது மனைவிக்கு ஏற்புடையதல்லவோ....

சிக்கல்களைச் சொல்லி, சிந்தனைகளைப் பரிமாறி,
சீராக்கப்படவேண்டிய சிறுசிறு குறைகளை பெரிதாக வளர்த்தது புரிதல் இல்லாததே என்பதனை நீ உணர்வாயா ......

கேட்காமலேயே அணைத்து, சுகத்தைக் கொடுத்து...
எடுக்கத் தெரிந்த எனது மாங்கல்யத்தின் சொந்தக்காரனே...

கேட்காமலேயே உன் வாழ்வாதாரச் சிக்கல்களை, உன் தாரத்திடம் பகிர்ந்து கொள்வதில் தவறியது உன் ஆணவச் செயலல்லவா?

மனைவி என்பவள் தாரம் மட்டுமேயன்றி, தோழமைக் கூட்டுக்குள் வர இயலாது என ஒதுக்கி வைத்தே உன் வலிகளை மறைத்தவன் நீ...

நீயாக எனை நம்பி சிக்கல்களை விடுவிக்க உதவி கோரிடும் வரை,
காத்திருக்க முடிவெடுத்ததில், அக்கறையில்லாதவள் என்ற அசட்டுப் பெயர் எனக்கு.....

சிறு விரிசல் பசை போட்டு சேர்த்திட வழியின்றி...
பெரிய இடைவெளியை நம்மிருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தியது விதியா அல்லது இருவரின் ஆணவப்போக்கா...?

நீயும் உன் போக்கை மாற்றிட மாட்டாய்..
நானும் என் எண்ணத்தை மாற்றிட மாட்டேன்..
இருவரின் வாழ்வும் இலவு காத்த கிளியாய்..
இறுதி வரை இலக்கு இல்லாமலே முடிவடையட்டும்..

ஆக்கம்: பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (1-Jan-17, 7:14 pm)
பார்வை : 85

மேலே