வாழ்த்து
பதினாறாம் பிறந்தநாள் வாழ்த்து!
==========================================
அதிகாலை உனைஎழுப்பும் சூரியன் தன்னை
=அவசரமாய் நீஎழுப்பி காரிருள் போக்கி
பதினாறு வயதின்று பூக்க வைத்தப்
=பரவசத்தில் திளைத்திருக்கும் பாச மகனே!
புதிதாகி மகிழ்ந்திருக்கும் பிறந்த நாளின்
=புத்துணர்ச்சி என்றென்றும் தொடர்ந்தி ருக்க
நதிபோல விரைவாக நாளும் ஓடு
=நலமென்னும் பாட்டொன்று நீயும் பாடு.
வளமாக நீவாழும் வாழ்க்கை என்னும்
=வசந்தத்தைக் கைப்பற்ற வேண்டி நித்தம்
உளமார படித்துயரும் எண்ணம் வளர்த்து
=உலகத்தில் நடைபோடும் துணிவை எடுத்து
இளம்பருவ காலமிதில் எழுந்து நின்றே
=எப்போதும் முன்னேற்றம் நோக்கிச் செல்ல
விளக்கெனவே உனைஎடுத்து வெளிச்சம் போடு
=வெற்றிவரும் உனைத்தொடர்ந்து என்றே பாடு.
எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெற்று நீடு வாழ உனது பிறந்தநாளில்
வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு .,
உன் அப்பா
மெய்யன் நடராஜ்
07 ௦- 01 – 2017