அறுவடைத் திருநாள் அடையாளம் மறந்தோம்
பொங்கலோ பொங்கல் !
நெற்கதிரும், மாவிலையும்
நிலம் விளையும் ஆவாரை
செங்கழனிச் செங்கரும்பு
சிறுபீளைப் பூ சேர
மஞ்சளொடு பனங்கிழங்கு
மண்பானை, மாக்கோலம்
மருக்கொழுந்து, செவ்வரளி
சாமந்தி, சம்பங்கி
என
பூவாசம் மணமணக்கும்
புதுப்பொங்கல் தேனினிக்கும்
நமக்கென்ன?
பயிர்கொண்ட உழவனின்
உயிர்கொன்றோம்
பசிப்பிணி மருத்துவன்
பசி கண்டோம்
பயிர் விதைத்த விவசாயி
பதை பதைத்துப் பதை பதைத்து
உயிர் தொலைத்த துயர்மறந்து
ஊரெங்கும் உரக்கச் சொல்வோம்
பொங்கலோ பொங்கல் !
வித்தெல்லாம் முத்தாக்கி
விளைவித்தான் காய்கனிகள்
நெல்லும், சோளமும்
நிலமெல்லாம் வனப்பாக்க
சாமையும், வரகும்
சமைத்துண்ட விவசாயி
வெடிக்கும் விளை நிலத்தை
வேடிக்கை பார்த்திருந்தான்
நம்பிக்கை கைபிடித்து
நாளெல்லாம் இருள் தின்றான்
காற்றில் ஈரமில்லை
காவிரி
ஆற்றில் நீருமில்லை
தீர்ப்புக்கு காத்திருந்தும்
தீரலயே அவன் துன்பம்
வாங்கிய கடனெல்லாம்
வட்டியோடு பல்லிளிக்க
பாவம் வழியின்றிப்
படுத்தானே நம் உழவன்
விழித்தேதான் கிடந்தது
ஈரமொடு விழிகள்
ஆவி
துடித்தேதான் கிடந்தது
அடங்காத நெஞ்சு
ஒருநாள்
பயத்திலே தங்கினான்
மறுநாள்
மரத்திலே தொங்கினான்
நமக்கென்ன?
உழுபவன் எவனோ
அழுபவன் எவனோ
பூ விதைத்த அவன் வாழ்வில்
தீ விதைத்த நிலை மறப்போம்
தமிழனுக்கு தை பிறக்கும்
தரணியிலே பொங்கலிட
“போகி”யிலே ஏர்கலப்பை
போடுவானோ அவன் பிள்ளை
பொய்யது உழவென்பான்
பொய்யாது மழையென்பான்
பிஞ்சை நஞ்சாக்கும்
பெருமைக்கா என் தேசம்
காவிரி நீரால் இறந்தவனுக்கு
கங்கை நீரால் புண்ணியமோ?
பண்பாட்டை தமிழ்மரபை
பதுக்கி ஒதுக்கிக் கொல்லும்
பகைவன் யாரெனத் தெரிந்தோம்
அவன்
பலமென்ன என்பதும் புரிந்தோம்
விழித்திரை விரிய விரிய
வீரம் ததும்பத் ததும்ப
நரம்பெல்லாம் முறுக்கேற்றி
நாளெல்லாம் காத்திருந்த
திமிர் கொண்ட காளையின்
திமிழ் கொள்ளும்
தமிழ் மண்ணின்
வீரனுக்கோ
விளையாட்டுத்தடை
பேசிப் பேசி
பெருஞ்செலவில் ஊர்முழுக்க
கூசும் பொய்களால்
குரைக்கும், பணம் இறைக்கும்
சில
நரிகளின் தாலாட்டில்
வாலாட்டும் மனிதருக்கு
உரைக்கும் என்றால்தான்
இவ்வரி சிறக்கும்
நாமும்…
அறுவடைத் திருநாள்
என்ற
அடையாளம் தொலைத்துவிட்டு
குக்கரிலே விசிலடிக்க
கொக்கரிப்போம் தமிழரென
பொங்கலோ பொங்கல் !
சங்கரன் பொங்கல் !
பட்டி பழுகப்பழுக !
பால்ப்பானை பொங்கப்பொங்க… !
- அன்புச்செழியன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
