ஆதலால்தான் விட்டுப்போகிறேன்

ஆதலால்தான் விட்டுப்போகிறேன்
===============================
நீ உடனிருப்பதைப்போல் உணர்வு
எங்கோ
காற்றின் சாலையில்
நம் மௌனம் விலகி இருந்தது
என் மூடியிருந்த கண்களைச்சுற்றி
தூபம் ஏற்றியிருந்தார்கள்
என் நாசி உணராத அந்த வாசனை
அந்த இடமெல்லாம் பரவியிருந்தது
சூரியன் மறைந்த அடிவான விளிம்பில்
நிலா ஒளிர்கிறது
என்னால் உணரமுடியவில்லை
நட்சத்திரங்கள் எங்கோ காணாமல் போயிருந்தன
நிறைய உடுப்புகளை
என்மேல்
ஒருவர் ஒருவராய் உடுத்திப்போனார்கள்
வெளியிடையில்
பலத்த காற்று எழுப்பிய தூசுகள்
என் இறுதிச் சடங்கை
உறுதி செய்துக்கொண்டிருக்கின்றன
எப்பொழுதாவது
உன்னுடைய வருகைக்காய்
நான் காத்திருந்த அழகிய பாதை
என் பார்வையிலிருந்து
விடுபட்டு
இருட்டாகிக் கொண்டிருக்கிறது
இம்முறை மருத்துவன் வரவில்லை
அதிகம் நேசித்த தோழி
அவள் கைகளில் கிண்ணம் ஏந்தியிருக்கிறாள்
அவள் அழுகிறாள்
நான் உன்னுடன் இருந்து
வாழ்ந்து முடிக்காத
எத்தனை எத்தனை அழகான தருணங்களை
நிராசையாய்
விட்டுப்போகிறேன் ம்ம்
இப்போது நான் உடைந்த கண்ணாடியாகிவிட்டேன்
சரீரம் அழுகிக் கொண்டிருக்கிறேன்
என் அறையின்
இரவு பகல்களுடைய வெளிச்சம்
இதுவரை
உன் நினைவுகளால்தான்
ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது
அதோ
அங்கு யாரோ சிலர்
எனக்கான
சிதை தயார் செய்துக்கொண்டிருந்தார்கள்
உன் மௌனம்
தோற்கடித்த தீயைவிட
இன்னும்
அற்ப நேரத்தில்
என் சடலம் எரிக்கின்ற தீ
அத்தனை எரிச்சல் தரப்போவது இல்லை
இதற்குப் பின்னால்
நமக்குத் தெரிந்தவர்கள் யாரேனும்
என்னைப்பற்றி
உன்னிடத்தில் விசாரித்து வரக்கூடும்
அவர்களிடம் சொல்லிவிடு
அந்த கிண்ணத்திலிருந்த
தண்ணீர் தெளித்த
ஆறாத கங்குகளுடைய
சவக்காடு போதையில்
அவள் மயங்கிக்கிடக்கிறாள் என்று
உன்னுடைய
ஏதும் சொல்லாதவைகள்
என் உயிரை
இரண்டாக வெட்டி
இயற்கையோடு சங்கமம் செய்துவிட்டன
காற்றில் கலந்த
என் கண்ணீரின் சிணுங்கல் சப்தமும்
உப்பு சுவையும்
உன் சுவாசித்தலின்போது உணர்ந்துகொள்வாய்
உன்னிலிருந்து
என் மூச்சு
இன்னும் விடுபடவில்லை என்பதை
இனி இதுபோலொரு
கொடுங்காற்று வீசி தூசி எழும்பும் வேளையில்
இனி இதுபோலொரு
உன் இறுதி சடங்கின் யாத்திரையுடைய சாலையில்
உன் கண்களுடைய
கடைசி ஒளி
என் வாசனையைத் துழாவக்கூடும் ஆதலால்தான்
"பூக்காரன் கவிதைகள்"