உதட்டளவு உழவர் தின வாழ்த்துக்கள்

ஆனி வரை
விதைகள் சேகரித்து
விதைத்து மகிழ்ந்த
ஆடிப்பட்டமும்
அறுந்த பட்டமாய்
காணாமல் போயிற்று ....!

மழை வருமென
விதைத்த கொஞ்சமும்
குற்றுயிராய் தவித்து கிடக்கிறது ...!

ஐப்பசியும் கார்த்திகையும்
அடை மழைக்கு
விடுமுறை கொடுத்து
விடைபெற்று சென்று விட்டது ....!

மார்கழியிலாவது
பனியோடு மழையும்
வருமென காத்திருந்த
உழவனின் விழிகளுக்கு
கண்ணீரே பரிசாயிற்று .....!

பொங்குகிற
பொங்கல் பானையாய்
உழவனின் உள்ளம்
கொதித்து கிடக்கையில்
எப்படி சொல்லுவேன்
உழவனுக்கு வாழ்த்து,,,?

எழுதியவர் : முருக பூபதி (15-Jan-17, 8:59 am)
பார்வை : 513

மேலே