சிறுகதை அலைகள் ஓய்வதில்லை

அலைகள் ஓய்வதில்லை!

“வாங்க சார் ! “ என்ற பழக்கப்பட்ட குரல் தன்னை வரவேற்கவே நிமிர்ந்து பார்த்தான் கணேஷ்குமார்.

“ லதா நீயா.. நீ எங்கே …. ..?”

“ என்னோட அக்கா வைதேகியைத்தான், பெண் பார்க்க நீங்க வந்திருக்கீங்க “ என மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்பதுபோல் லதா கூறினாள்.

ஒரே கம்பெனியில்தான் கணேஷ்குமாரும் லதாவும் வேலை பார்க்கிறார்கள். கணேஷ்குமார் உதவி மானேஜராகவும், லதா அங்கு டைபிஸ்ட்டாகவும் பணிபுரிகிறார்கள். இருவருமே கம்பெனியில் சொந்த வேலை இருப்பதாகவே ஒரே நாளில் விடுப்பு மனு கொடுத்திருந்தனர். ஆனால் லதா விடுப்பு மனு கொடுத்தது கணேஷ்குமார்க்குத் தெரியாது. அதேபோல் கணேஷ்குமார் விடுப்பு மனு கொடுத்தது லதாவுக்குத் தெரியாது.
லதாவினுடைய அக்காவைத்தான் பெண் பார்ப்பதற்கு அவள் வீட்டிற்கு அப்பா அம்மாவுடன் போகிறோம் என்ற விபரம் கணேஷ்குமார்க்குத் தெரியாது. அதேபோல் லதாவுக்கும் தன்னோடு பணியாற்றும் உதவி மானேஜர் கணேஷ்குமார்தான், தன்னுடைய அக்கா வைதேகியைப் பெண் பார்க்க தன் வீட்டிற்கு வரப்போகிறான் என்பதும் அவளுக்கும் தெரியாது.

லதா வீட்டில் இருவருக்கும் இது ஒரு எதிர்பாராத சந்திப்பு. லதாவும் கணேஷ்குமார் இருவரும் திகைத்து நின்றாலும் அப்போது ஒருவருக்கொருவர் தெரிந்தவர்போல் அங்கு காட்டிக் கொள்ளவில்லை . கணேஷ்குமார் வைதேகியைப் பார்த்தவுடன் அவனுக்குப் பிடித்து விட்டது. மேலும், தன்னோடு பணியாற்றும் லதாவின் அக்கா வைதேகி என்று தெரிந்தவுடன் அவனுக்கு வைதேகியை மிகவும் பிடித்து விட்டது என்றுதான் கூறவேண்டும்
.
வைதேகியின் அம்மாவும் அப்பாவும் தன் மகள் வைதேகியை அவர்களுக்கு பிடித்திருக்கிறதா’ என்று கேட்பதுபோல் மாப்பிள்ளையையும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களையும் பார்த்தார்கள். வைதேகியின் அம்மா ருக்குமணி ‘என்னோட மகள் வைதேகியை பிடித்திருக்கிறது என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சொல்லி விட்டால் தெருகோடியில் இருக்கும் கல்யாணவிநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை பண்ணுவதாகவும் மனதிற்குள்ளேயே வேண்டிக்கொண்டாள்.
.
கணேஷ்குமாரின் அம்மா ராஜாத்தியம்மாள்தான் முதலில் பேச ஆரம்பித்தார்.
“ எங்களுக்கு உங்க பெண் வைதேகியை பிடிச்சிடுத்து.. என் மகன் கணேஷ்குமார்க்கும் பிடிச்சிடுத்து. “ என்று கூறவும் லதாவின் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் மிதந்தார்கள். அந்த மகிழ்ச்சி சில விநாடிகள்தான் நீடித்தது.

கணேஷ்குமார் அம்மா ராஜாத்தியம்மாள் கேட்ட கல்யாணச் சீர்வரிசைகள்தான் காரணம். முப்பது சவரன் நகைகள் போடவேண்டும். இருபாதாயிரம் ரொக்கம், கல்யாணத்தை சிறப்பாக செய்து, மற்ற சீர்வரிசைகளும் சிறப்பாகச் செய்யவேண்டுமாம்
.
மேலும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் செலவில், பெண்ணுக்கு எடுத்து தரவேண்டிய பட்டுப்புடவைகள் எல்லாம் ,பெண் வீட்டுக்காரரே எடுத்துத் தரவேண்டும் எனக் கூறி அந்தச் செலவையும் ராஜாத்தியம்மாள் பெண் வீட்டுக்காரர் தலையில் கட்டினார்.

“இதுவே எங்க தகுதிக்கு மிகவும் கொறைச்சல்தான். இருந்தாலும் இதை நாங்க திருப்தியாக ஏற்றுக்கொள்றோம். நல்லா யோசிச்சு தகவல் சொல்லுங்கள் நாங்க வர்றோம் “ என்று கூறிச் சென்றுவிட்டார்கள்.

லதா அம்மா ருக்குமணிக்கு மனசு கிடந்து அடித்துக் கொண்டது. மாப்பிள்ளை பையன் சாதுவாக இருக்கிறான். . வைதேகியின் அழகுக்கு ஏற்றவனாகவும் இருக்கிறான். எப்படியும் கடன் வாங்கியாவது வைதேகி கல்யாணத்தை நடத்திவிடவேண்டும் என்று மனசுக்குள்ளே எண்ணித் தவித்தாள்

லதா அப்பாவுக்கு மிகவும் மலைப்பாக இருந்தது என்றுதான் கூறவேண்டும். அவர் தன மனைவி ருக்மணியைப் பார்த்து “ ருக்கு இவ்வளவு நகை பணம் சீர்வரிசைஎல்லாம் நம்மளாலே செய்யமுடியுமான்னுதான் ? நான் யோசிக்கிறேன்“ என்று கவலையுடன் அவர் கேட்கும்போது, அப்பாவின் இயலாமையை நினைத்து லதாவுக்கே மிகவும் கவலையாகவும் கஷ்டமாகவும் இருந்தது. பெண்ணைப் பெற்ற நடுத்தரக் குடும்பத்து அப்பாக்கள் எல்லாம் இப்படித்தான் அப்பாவைப் போல தவிப்பார்கள் கஷ்டப்படுவார்கள் போல் தெரிகிறது.

ருக்குமணி “ ஏங்க லதாவுக்கு வேணுமுன்னு பத்து சவரன் நகை சேத்துவெச்சிருக்கோம்முலே அதையும் சேர்த்து போட்டு , என்னோட நகை ஓர் அஞ்சு சவரன் தேறும் எல்லாம் சேர்த்தால் முப்பது சவரன் அவர்கள் கேட்ட நகை போட்டுடலாம் “ என்று நகைக்கு வழி கூறினாள்.

“எப்படி ருக்கு ! லதாவுக்குன்னு சேர்த்துவெச்ச அவள் நகையை வைதேகிக்கு போட்டு விட்டால் , லதாவுக்கு நகை போட வேண்டாமா ? “ என்று கவலையுடன் லதா அப்பா கூறினார்.

“ அவளுக்குப் பின்னால் எப்படியாவது பகவான் வழி காட்டுவான் “ என்று ருக்குமணி அவரைச் சமாதானப்படுத்தினாள்.

“ சரி வரதட்சணை ரூபாய் இருபாதாயிரம் எங்கே கடன் வாங்க முடியும் நம்ம இருக்கும் நெலமையில் “ என்று தம்பி சிவா நினைவுபடுத்தினான் அம்மாவுக்கு.
‘அம்மாவும் அப்பாவும் என்னோட கல்யாணத்துக்காக இவ்வளவு கஷ்டப்படும்போது எனக்கு இந்தக் கல்யாணம் அவசியமா? ‘ என்று வைதேகியும் நினைக்க ஆரம்பித்தாள்..

லதா “அப்பா நீங்க கவலைப்படாதீங்க என்னோட சேவிங் அக்கௌண்டிலே இருபாதாயிரம் இருக்கு. இன்னும் ஒரு பத்தாயிரம் எப்படியாவது சமாளிச்சிக்கலாம்” என்று அப்பாவிற்கு தைரியம் கூறினாள் லதா.

மறுநாள் அலுவலகத்திற்கு லதா புறப்படும்போது “ அக்கா நீ ஒண்ணும் கவலைப்படாதே கணேஷ்குமார் நான் ஒர்க்பன்னரே கம்பெனியில்தான் உதவி மானேஜராக இருக்கார். நான் அவரிடம் நம்ம குடும்ப நெலமையை சொன்னால், அவர் புரிந்து கொள்வார். நான் அவரிடம் நல்லவிதமாக பேசிக்கொள்றேன் “ என்று வைதேகிக்கு லதா நம்பிக்கையூட்டினாள்

வைதேகி, லதாவின் கைகளைப் பற்றிக்கொண்டு “ லதா எனக்குச் சின்னவளான உனக்கு, என்னோட கல்யாணத்தின் மீதுதான் எவ்வளவு அக்கறை என்பதைத்தான் நீ அப்பாவிடம் பொறுப்பாக பேசுவதைக் கேட்டபோதே நான் தெரிந்து கொண்டேனே !. “ என்று கண்ணீர் மல்க கூறினாள்

அன்று மாலை அலுவலகம் முடிந்தபின், அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் காந்தி பூங்காவிற்கு கணேஷ்குமாரும் லதாவும் சென்று அங்குள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள்
.
முதலில் கணேஷ்குமார்தான் பேச்சைத் தொடங்கினான், “ லதா என்னோட கல்யாணத்தைப் பற்றி உங்க வீட்டுலே என்ன முடிவு செய்திருக்காங்க” என்று ஆர்வமுடன் கேட்டான்.

“சார் ! எங்க வீட்டிலே எல்லாருக்கும் உங்களை ரெம்ப பிடிச்சிருச்சு. உங்களுக்கு என் அக்காவை மாரேஜ்பண்ணனும்னு விரும்புறாங்க சார் “ என்று கூறிவிட்டு “அதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கு “ என்று லதா தயங்கி தயங்கி ஏதோ கூற முயன்றாள்.

கணேஷ்குமார் “ லதா , நீ நம்ம ஆபீஸ்லதான் டைபிஸ்ட் நான் அசிஸ்டன்ட்மானேஜர்,.இப்ப நாம் நண்பர்கள். இன்னும் கொஞ்சநாளுலே நாமே சொந்த்க்காரர்கள் ஆகப் போறோம். எனவே நீ எதுவானாலும் மனம் திறந்து பேசு ! லதா “ என்றான்.

“ நீங்க சொல்றதை நான் அப்படியே ஏத்துக்கிறேன். நான் சொல்வதை நீங்க புரிஞ்சுக்கொள்வீங்கன்னு நினைக்கிறேன். நீங்க மிகவும் நேர்மையானவர் உங்களிடம் என்னோட கருத்துக்களை டிஸ்கஸ் பண்ணலாமுன்னு நினைக்கிறேன், இருந்தாலும்... “என்று லதா தயங்கினாள்.

“ லதா எது என்றாலும் தயங்காமல் என்னிடம் சொல் ! ‘ என்று கூறியவன் லதா தன்னிடம் என்ன கூறப் போகிறாள் என அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான் கணேஷ்குமார்.

“ இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் ஒரு பெண் பட்டதாரியாக இருந்தாலும் சரி, அவள் வேலைக்குப் போய் பணம் சம்பாதித்தாலும் சரி , அவள் மாரேஜ்பண்ணனும்னு , அவள் ஒரு மணமகனை விலைக்கு வாங்க வேண்டிய நிலையில்தான் அவள் இருக்கிறாள். இந்தக் கொடுமையானவைகள் எல்லாம் உங்களைப் போன்ற நன்கு படித்த ஆண்களை விட ,என்னைப் போன்ற ஸாரி எங்கள் குடும்ப பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்

இக்கால இளைஞர்கள் எல்லாம் ஏன் ? இப்படிப்பட்ட இழிவான வாழ்க்கையை பின்பற்ற விரும்புராங்கன்னுதான், எனக்குப் புரியவே மாட்டேங்கது.. நிச்சயம் இதற்கு ஒரே ஒருகாரணம்தான் இருக்க முடியும். அவர்களோட சுயநலம்தான். அதாவது சொகுசான வாழ்க்கை . உங்களை நான் பேசியே ‘போரடி’க்கிறேனா சார் ? “ என சம்பந்தேமில்லாமல் லதா பேசி நிறுத்தினாள்.

“ இல்லே இல்லே ! லதா, நீ என்ன சொல்ல வர்றியோ அதையெல்லாம் என்னிடம் சொல்லி முடித்து விடு “ என்றான்

“ காலம் எதில் மாறினாலும் ,மாறாவிட்டாலும் கல்யாணச் சந்தையில் மணமகன்களை வெலை பேசுதல், அதாவது வரதட்சினை விவகாரத்தில் அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலையில்தான் இருக்கு. மாறவே இல்லை. கல்யாணமும் செய்து வைத்து, வரதட்சிணையும் கொடுத்துவிட்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகளைக்கெல்லாம் சீர்வரிசை என்ற பேரில் பெண் வீட்டுக்காரர்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்பப்படுத்துவது......இது தொடர்கதையாகவே இருக்கு. “ என்று உணர்ச்சி மிகுதியில் லதா கணேஷ்குமாரிடம் கொட்டித் தீர்த்தாள்.

“ லதா ! நீ சொல்வதெல்லாம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கு. நம் சமூக அமைப்பு எப்படியோ அப்படித்தான் அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டதிட்டங்கள் ஒரு விதமாகவும், வாழும் ,மனிதர்களின் குணங்கள் அவர்களின் சமுதாய சட்ட திட்டங்கள் வேறு விதமாகவும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமைத்துள்ளது. இதை நீயும் நானும் உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும்......”

“உங்களைப் போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது அப்படித்தானே ..! “ லதா உரக்கவே சப்தமிட்டுக் கேட்டாள்.

இதுவரை லதா பேசியதிலிருந்து, அவள் அக்கா வைதேகியின் திருமணத்திற்காக, அவனுடைய அம்மா ராஜாத்தியம்மாள் அவள் அப்பா, அம்மாவிடம் நகை மற்றும் வரதட்சணையை கண்டிப்புடன் கேட்டதை மனதில் வைத்துகொண்டுதான், லதா சுற்றி வளைத்து தன்னிடம் கூற வருகிறாள் என்பதை கணேஷ்குமார் நன்கு புரிந்து கொண்டான்.
“ இல்லை லதா ! என் திருமணத்தைப் பொறுத்தவரை என்னால் ஒண்ணும் செய்ய முடியாத நிலையில், நான் இப்போது இருக்கேன். என்னோட அம்மா விருப்பம்தான். என் விருப்பம் “

“ ஏன் ? அம்மா விருப்பம்தான் என்விருப்பம் என்று அம்மாவைக் காரணம் கூறி உங்களை நல்லவங்களா காட்டிக் கொள்றீங்க. நீங்களும் உங்க மனதிற்குள்ளேயே, உங்களுடைய அம்மா கேட்டதையெல்லாம் நீங்களும் உண்மையிலே விரும்புறீங்க ...”

“இல்ல லதா. என் மனதில் நீ நெனக்கிற மாதிரியெல்லாம் இல்லை புரிஞ்சுக்கோ. வரதட்சிணை இல்லைன்னா இந்த கல்யாணமே கூடாது என்பது என் தாயின் விருப்பம்.. இதுதான் உண்மை. என்னை நீ தவறாக நெனக்கைதே லதா ! உங்க அக்கா வைதேகி கல்யாணத்துக்கு அதாவது எங்களோட கல்யாணத்துக்கு. உங்களுக்கு இன்னும் தேவையான பணத்தை, நானே என் அம்மாவுக்குத் தெரியாமல் கொடுக்கறேன். போதுமா ?”

“ இப்படி நீங்க செய்வதை , சொல்வதை விட இதைப்பற்றி உங்க அம்மாவிடம் எங்கள் குடும்ப நிலைமையை எல்லாம் கூறி வாதாடி, வரதட்சணை வேண்டாம் என்று கூறினால் எவ்வளவோ கவுரமாக இருக்குமே ! “

“ பரவாயில்லை நாங்களே எப்படியும் சமாளித்துக் கொள்கிறோம். நீங்க பணம் கொடுத்து எங்களுக்கு உதவி செய்றேன்னு சொன்னதே போதும். கல்யாண மாப்பிள்ளையாக எங்க வீட்டுக்கு சீக்கிரம் வாங்க “என்று சிரித்துக்கொண்டே லதா விடை பெற்றாள்

திருமண்க்களை கட்டிய திருமண மண்டபத்தில் லதா குறுக்கும் நெடுக்குமாக போய்க் கொண்டிருந்தாள். விடிந்தால் முகூர்த்தம் அதாவது கணேஷ்குமார் வைதேகிக்கும் திருமணம். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கல்யாண மண்டபத்தில் வந்து இறங்கியிருந்தார்கள்

இரவில் திருமண நிச்சயார்த்தம் நிகழ்ச்சிக்கு, இன்னும் ஒரு மணிநேரம் இருந்தது. ராஜாத்தியம்மாள் திடீரென்று வேகமாக அங்கு வந்து , பெண் வைதேகிக்கு எடுத்திருந்த நிச்சயார்த்தப் பட்டுப் புடவையை இதுவரை நான் பார்க்கவயில்லே, இப்ப நான் பார்க்கணும்னு என்று கூறினாள் ருக்குமணியும், சரி தன் வருங்கால மருமகள் பட்டுப்புடவையைப் பார்ப்பதற்கு மாமியார் விரும்புகிறார் என்றுதான் நினைத்தார். ஆனால் அங்கு ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது.

திடீரென்று ராஜாத்தியம்மாள், ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். நிச்சயார்த்தப் பட்டுப்புடவையில் ஜரிகை பார்டர் அளவு குறைவாக் இருக்கு. இதை மாத்திவிட்டு, ஜரிகை பார்டர் அகலமாக் உள்ள பட்டுப்புடவையை எடுத்துட்டு வாங்க இல்லைன்னா இந்தக் கல்யாணம் நடக்காது. நான் நடக்கவும் விட மாட்டேன் “ இப்படி அந்த அம்மா இப்படிச் சட்டம் கொண்டுவந்தது இரவு பத்து மணி.
.
அன்று நாடு முழுவதும் பந்த். கடையெல்லாம் அடைப்பு ‘கடை திறந்திறந்தாவது ராஜாத்தியம்மாள் கேட்டவாறு பட்டுப்புடவையை வாங்கி வந்து விடலாமே என்ன செய்வது’ என்று ருக்மணி கையைப் பிசைந்துகொண்டு இருந்தாள். லதா அம்மாவுக்கு இதனால் வைதேகி கல்யாணம் நின்று விடுமோ என்ற அச்சம்.

லதாவின் அப்பா என்ன செய்வது என்று தெரியாமல் மகள் லதாவிடம் தஞ்சம் அடைந்தார்
.
திருமண நிச்சயார்த்த பட்டுப்புடவை விவரத்தைக் கேட்ட லதா எரிமலையானாள். அவளால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘ என்ன மனித ஜன்மங்கள்டா ! அப்படி இந்த பட்டுப்புடவை ஜரிகை அளவு குறைவு காரணத்தால், இந்த திருமணமே வேண்டாம்ன்னு கூறி நின்று போனால் நிற்கட்டுமே. அது அவங்களுக்குத்தானே கேவலம் அம்மா “ என்று அம்மாவிடம் லதா குமுறினாள்.

வைதேகி தங்கையின் கைகளைப் பிடித்துக கொண்டு “ லதா பொறுமையாக இரு. நாம பெண் வீட்டுக்காரங்க. பொறுமையாகத்தான் இருக்கணும். லதா பொறுமையில்லாமல் நீயும் வார்த்தைகளை கொட்டாதே “ என்று நயமுடன் கூறினாள்.
அப்போது லதாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. நேரே கணேஷ்குமாரிடம் நிலைமையை எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார் என்று நினைத்து கணேஷ்குமார் இருந்த இடத்திற்கு லதா விரைந்தாள்.
லதா செல்வதைக் கண்ட ராஜாத்தியம்மாள் மகனிடம் சென்று அருகில் நின்று கொண்டாள்.

“ இதோ பார் லதா. நான் சொன்னது சொன்னததுதான். நான் கூறியபடி அகல ஜரிகை பட்டுப்புடவை வந்தால் இந்தக் கல்யாணம் நடக்கும். இல்லேன்னு இந்த திருமணநிச்சயார்த்தமும் நடக்காது. உன்னோட அக்கா கல்யாணமும் நடக்காது. இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் கேட்டபடி பட்டுப்புடவை வரணும்.. இல்லேன்னா நாங்கள் கிளம்பி விடுவோம். “

இதுக்குப்போய் நீ என் மகன்கிட்ட என்ன சொல்லப் போறே. எங்க குடும்ப கவுரவம் பாழகாக்க்கூடாதுன்னு நினைத்துதான் இப்படிச் சொல்றேன். “ என்றாள் பிடிவாதமாக.

“ அத்தை தயவுபண்ணி நல்லா யோசிச்சு பேசுங்க . இன்னிக்கி பந்த் கடையெல்லாம் அடைப்பு. அப்பா எப்படி எங்கே போய் புடவையை வாங்கி வரமுடியும். அடுத்து எத்தனையோ புடவைகள் பெண்ணுக்கு எடுக்கவேண்டியிருக்கு. நீங்க விரும்பியபடியே பட்டுப் புடவைகள் எடுத்து தருகிறோம். எங்க அக்கா கல்யாணத்தை மட்டும் நிறுத்திடாதீங்க : என்று பணிவாகக் லதா கூறினாள்..

“ இல்லை லதா நீ என்ன சொன்னாலும் நான் கேக்கமாட்டேன். வேறு யார் சொன்னாலும் கேக்கமாட்டேன். நான் கேட்டபடி பட்டுப்புடவைக்கு ஏற்பாடு பண்ணுங்க “ என்றாள்.

இதையெல்லாம் கண்டும் காணாதவன்போல் கணேஷ்குமார் பேசாமல் அமைதியாக இருந்தான்.

ராஜாத்தியம்மாள் தான் சொல்வதை எல்லாம் புரிந்தும் புரியாதவள்போல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதுபோல் அகல ஜரிகைப் பட்டுப்புடவையில் பிடிவாதமாக இருப்பதை பார்த்து , லதா செய்வதறியாது திகைத்து நின்றாள்.
.
ஆனால் அடுத்க்கணமே லதாவுக்கு ஓர் எண்ணம் பளிச்சிட்டது ‘வைதேகி திருமணத்திற்காக லதாவுக்கென்று லதாவே விரும்பி எடுத்த பட்டுப்புடவை அகல ஜரிகை கொண்டது.. லதா அப்போது விலை அதிகம் வேண்டாம் என்று அவள் எவ்வளவு தடுத்தும் , வைதேகி வற்புறுத்திதான் லதாவை அந்த பட்டுப்புடவையை எடுக்க வைத்தாள்.
அந்தப் பட்டுப்புடவையை எடுத்து இப்போது திருமண நிச்சாயர்த்துக்கு வைக்க வேண்டியதுதான். ஏன் ? இந்த யோசனை இது வரைக்கும் எனக்கு வரவில்லை என்று லதா தன்னையே நொந்துகொண்டு, லதா அந்தப் பட்டுப்புடவையுடன் வெளியே வந்தாள்

பட்டுப்புடவையுடன் வெளியே லதா வருவதைப் பார்த்த வைதேகி “உனக்குன்னு நானும் அம்மாவும் ஆசையாய் எடுத்த உனக்குப் பிடித்தப் புடவையாச்சேடி ? லதா இப்போ என்ன செய்யப்போறே எனக் கண் கலங்கிக் கேட்டாள்.

“ அக்கா உனக்கு நடக்க இருக்கும் கல்யாண்த்துக்குத்தானே , எனக்குன்னு நீயும் அம்மாவும் சேர்ந்து இந்தப் புடவையை எடுத்தே. நிலைமை தெரியாமல் எதுவும் பேசாதே. உன் கல்யாணம் இந்தப் பட்டுப்புடவையாலே நின்னுடுச்சின்னா நான் எப்படிக் இந்தப் பட்டுப்புடவையை கட்டிப்பேன். இப்போ வேற வழியில்லை அமைதியாக இரு “ என்றாள்

லதா கொண்டுவந்த பட்டுபுடவை ராஜாத்தியம்மாள் பார்த்தவுடன் சமாதானம் அடைந்தாள்’, கணேஷ்குமார் வைதேகி திருமண்ம் நடந்து முடிந்தது. ராஜாத்தியம்மாள் தான் நினைத்ததை முடித்து விட்டோம் என்ற வெற்றி மிதப்பில் இருந்தாள்.

கல்யாணம் முடிந்த மறுநாள் வைதேகியைப் பார்த்த லதா அவள் எதிர்பார்த்தைப்போல் வைதேகியின் முகம் வாடி இருக்கவில்லை. மாறாக அவள் முகம் பூரிப்பில் கனவு உலகில் மிதந்து கொண்டிருந்தது நன்கு தெரிந்தது.
மாப்பிள்ளையுடன் வைதேகி புகுந்த வீட்டுக்கு கிளம்பும்போது
“லதா நீ இல்லாவிட்டால் என் திருமணமே நடந்திருக்காது. உனக்கு எடுத்த பட்டுப்புடவையைக் கொடுத்து ,எனக்கு வாழ்வு தந்துருக்கே லதா .ஆனால் அவர் ரொம்ப நல்லவருடி “ என்றாள் வைதேகி
லதாவுக்கு கோபம் வந்தது “ அவரை நல்லவர் என்று மட்டும் என்னிடம் கூறாதே. சுயநலவாதின்னு வேணும்னா கூறு “ என்றாள்

வைதேகி உடனே லதாவின் வாயைப்போத்தி விட்டு “ தயவுசெய்து லதா ஏதாவது ஏடாகூடமாக பேசி என்வாழ்க்கையை கெடுத்து விடாதே ! “

“ எல்லாருமே என்னைப் பொறுத்தவரை சுயநலவாதிகள்தான் நீயும்தான். சாமர்த்தியமாக பேசுகிறீங்க. உனக்கு உன் புருஷன் தயவு வேணும். அவன் எப்படிப்பட்டவனாலும் அவனை நல்லவன்னு நீ கூற வேண்டும்.
“ உன் புடவையைக் கொடுத்து எனக்கு வாழ்வு தந்தாயே தந்தாயே ! என்று வீணாக எங்கிட்ட ஏன் பேசுகிறாய் உன் புடவையை கொடுக்காதே இந்தக் கல்யாணம் இதற்காக என் கல்யாணம் நின்னால் நிற்கட்டுமே என்று அப்போது தைரியமாகக் கூற உன்க்கு துப்பு ,இல்லை. நீ படித்துப் பட்டம் பெற்று என்ன பயன் ? உன்னை எங்கே மறுத்து விடுவானோ என்று நீ பயந்து , உன் புருஷனுக்கு இல்லாத தகுதியெல்லாம், உன்னோட கணவனிடம் இருக்குதுன்னு கணவனை இப்போது சந்தோஷப் படுத்துகிறாய்..

கடலில் அலைகள் எப்படி ஓய்வதில்லையோ அதேபோல்தான் உன்னைப் போன்ற படித்த, சுயநலமுள்ள பெண்களுக்கும் இந்த அடிமைப்புத்தியும் ஓய்வதில்லை. அப்படி ஓயும் வரை , உன் புருஷன் கணேஷ்குமார் போன்ற ஆண் மகன்களைப் பெற்ற ராஜாத்தியம்மாள் போன்ற அம்மாக்களின் அதிகாரமும் வறட்டுப்பிடிவாதமும் வீண் கவுரவமும் கொடிக் கட்டிப் பறக்கதான் செய்யும். எப்போதும். பறந்து கொண்டுதான் இருக்கும்.

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (15-Jan-17, 9:20 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 475

மேலே