நல்வழி எதுவென எடைபோடு
ஆற்று நீரென ஓடிவிடு –உன்
ஆற்றலை எங்கும் விதைத்துவிடு
கூற்றுவன் வரினும் மிதித்துவிடு-உன்
கொள்கையை மண்ணில் பதித்துவிடு....
தொல்லை தருவார் ஒதுக்கிவிடு- நீ
தொடர்ந்து உன்வழி நடந்துவிடு
உள்ளத்தில் உண்மை வளரவிடு –இது
உறங்கா திருக்க உசுப்பிவிடு....
ஏழையை வாழ்வில் உயரவிடு –அவர்
எழுச்சி கொள்ள உழைத்துவிடு
கோழை நீயில்லை உணர்ந்துவிடு –வரும்
கொடுமைகள் எதையும் எதிர்த்துவிடு....
வீட்டுக்கு ஒருமரம் வளர்த்துவிடு –உயர்
வெப்பத்தை தடுக்க முயன்றுவிடு
நாட்டில் நேர்மை விதைத்துவிடு –உன்
நெஞ்சில் பகைமையை புதைத்துவிடு...
வஞ்சகப் பேயினை அழித்துவிடு-புது
வரலாறு ஒன்றை படைத்துவிடு
நெஞ்சை நிமிர்த்தி நடைபோடு –ஒரு
நல்வழி எதுவென எடைபோடு....