ஜல்லிக்கட்டு – பொங்கடா தமிழா
பொங்கடா தமிழா சீறிப் பொங்கடா எமது முன்னோர்
எங்கணும் புகழைச் சேர்த்த இனிய பண்பாடுதன்னைச்
சிங்களர் வடக்கரெல்லாம் சேர்ந்தழித்திடவோ இல்லை
மங்கிடாதெம் பண்பாடு, மயங்கிடார் இளைஞர் என்றும்
தங்கிடார் மாற்றார் சொல்லில், தமக்கென மாண்பு கண்டு
வங்கமா கடலைச் சூழ்ந்து வாழ்ந்த எம் முன்னோர் தந்த
தங்கமார் வாழ்வேயிந்தத் தரணியில் மேலாமென்று
பொங்கடா தமிழா சீறிப் பொங்கடா பொங்கு பொங்கு.
தாயெனப் பசுவைப் போற்று தலை குனிந்ததனையேற்று
வாயுறையாகப் பொங்கல் வழங்கி நற் பட்டுச் சாத்து
தூய நல்லன் பினோடும் துணிவொடும் வீரத்தோடும்
பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச்
சாயடா அதனையுந்தன் சமர்த்தினை உலகு காண.
வாயிலா நண்பன் மஞ்சு வதையுறாததனைப் பற்றி
தாயென அன்பு செய்நீ தரணியுன் பண்பைக் காணும்.
ஆய வெம் கலைகளுள்ளே அதுவுமொன்றிது வேறில்லை.
நேயமும் தயையுமெங்கள் நிலத்தினில் புதிதோ இல்லை.
ஆரடா எமக்கு வந்து அன்பினைப் போதிக்கின்றார்?
ஆரமுதூட்டி நாங்கள் அணைத்திடும் பசுக்கூட்டத்தை
வேரோடு பிடுங்கிவிட்டு வேற்றின மாட்டையெல்லாம்
ஊரெலாம் விற்கப் பார்க்கும் உலுத்தர்களன்றோ அன்னார்!
போரினால் வீழ்த்திவிட்டு பொய்யுரை பலதும் செய்து
பாரினில் எம் பண்பாட்டைப் பழித்திடுகின்றோர் கூற்றை
தூரென வாரிக்கட்டித் தூரமாய் ஒதுக்கி விட்டு
நேரில் நின்றெதிர்த்து எங்கும் நிகழ்த்தடா ஜல்லிக்கட்டு.