உண்மைத் தமிழனின் வாழ்க்கை நெறி
24/01/2014
உண்மைத் தமிழனின் வாழ்க்கை நெறி
-
ஒரு தேசாபிமானியாக , என் தாய் தமிழகத்தின் குடிமகனாக, ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தவறான வகையில் திசை திருப்பப்படுமோ என அச்சப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், எது நடக்கக்கூடாது என என் உள்மனம் எண்ணியதோ அது இன்று நடந்தேறியுள்ளது.
ஆம், தமிழகம் கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம், நியாயமான, நேர்மையான, அமைதியான முறையில், நடைபெற்றுவந்த நிலையில், சமூக, தேச, மாநில விரோதப்போக்கு கொண்ட சக்திகள் ஊடுருவல் செய்த காரணத்தால், இத்தகைய கலவரம் ஏற்பட்டுள்ளது.
இதில் பல அப்பாவிகளும் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார்கள், போலீஸ் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை சிலர் கண்டிக்கிறார்கள். இது குறித்து நீதிமன்றம் கேள்விகூட எழுப்பியுள்ளது.
போராட்டத்தின் உணர்ச்சிப்பூர்வமான கோரிக்கையை, ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலித்து, பாதுகாப்பு அம்சங்களுடன் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் நகலைப் படித்துக் காட்டியுள்ளனர். இம்முயற்சியைப் புரிந்துகொண்டு, நன்றி தெரிவித்து, போராட்டக் களத்திலிருந்து, விடை பெற்றுள்ளனர்.
ஆனால், இதுநாள்வரை தக்க சந்தர்ப்பம் எதிர்பார்த்து ஊடுருவிக் காத்துக்கொண்டிருந்த கீழ்த்தரமான அசிங்கம், அரங்கேறியது. அந்த தேசவிரோத கும்பல்களின் சூழ்ச்சியால் சமூகவிரோதம் தொடங்கியது.
அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஊர்கமிட்டி பங்களிப்பு முக்கியத்துவமாக கருதப்பட்டது. அவர்களும் 2017 பிப்ரவரி 1-ல் நடத்த ஒப்புக்கொண்டபின், அங்கேயிருந்த ஊடுருவல்கள் அதை ஏற்க மறுத்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை. கல்வீச்சுத் தொடங்கியுள்ளது. போலீஸ் தாக்குதல் நடத்தத்துவங்கியுள்ளது. அப்போதும் போலீஸ் பொட்டலச்சோறு, பொரிகடலை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருப்பார்களா?
இதேபோல், சென்னை ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன், தீவைத்து கொளுத்தப்பட்ட நிலையில், அங்கே பெண் போலீஸாரை உள்ளே வைத்து பூட்டிவைத்து, இதை செய்ததாகவும், அவர்கள் ஜன்னலை உடைத்து காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கேயும் போலீஸார் என்ன செய்திருக்க வேண்டுமென சமூக விரோதிகள் எதிர்பார்க்கின்றனர்?
இத்தனைநாள் கண்ணியமுடன் காவல்காத்த காவல்துறை, அவசரச்சட்டத்தைப் பற்றி விளக்கி, கலைந்து போகச்சொன்ன பிறகும், அதை ஏற்கமறுத்து, கல்வீசினால், காவல்நிலையத்தைக் கொளுத்தினால், திருப்பி அடிக்காமல், இருக்க போலீஸ்காரன் என்ன பொட்டையா?
அப்பழுக்க மாணவர்கள், அறிவார்ந்த சமூகம் கலைந்துபோக முயற்சித்தபோது, அவர்களை கலையவிடாமல், திசைதிருப்பி, உடனே ஏற்க இயலாத கோரிக்கைகளை முன்வைத்து, மேலும் நீட்டித்து, அதுபோக, தங்களை ஒன்றும் செய்ய முடியாதவகையில், தேசியகீதம் பாடுகின்றனர்.
இத்தனை நாளாக, பாரத்மாதாகீஜே… வந்தேமாதரம், தேசியகீதம் ஆகிய அனைத்தும் கெட்டவார்த்தையாக, துவேசம் செய்த பலரும்கூட, தேசியகீதத்தை பாதுகாப்புக்கவசமாக பயன்படுத்துகின்றனர். வார்த்தைகளில் வன்மம் தொனிக்கிறது. சமூகவிரோதமான நடவடிக்கை தலைதூக்கும்போது, கைகட்டி நின்றேதான் வேடிக்கைபார்க்க வேண்டுமா என்ன?
இது மாணவர்கள் போராட்டம் என்றில்லாமல், எந்த ஒரு அரசியல் கட்சிப்போராட்டம், பிற அமைப்புகள், இயக்கங்கள் என்றாலும், இது போன்ற நேரத்தில், கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும், உணர்ச்சியின் எல்லைமீறிய தன்மை என்றுமே தனக்கு, தன் குழுவிற்கு மட்டுமென்றில்லாமல், தன்னை சுற்றியிருக்கும் அனைவருக்குமே ஆபத்துதான். இது போன்ற சம்பவங்களின் போது காட்டிய மென்மை போக்குதான், இன்றைய காஷ்மீர் கலவரங்கள்.
“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு”,
“எப்பொருள் எத்தன்மை யாயினும் அப்பொருள் மெய்த்தன்மை காண்பதறிவு”
எனும் வள்ளுவப் பெருந்தகையின் வரிகள் … வெறுமனே மனப்பாடம் செய்து, பரிசுகளை வெல்லவும், மதிப்பெண்களை அள்ளவும் மட்டுமல்ல. இதுதான் வாழ்க்கை நெறி. இதையே,
“கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக” – என்றார் அதே வள்ளுவர்.
வள்ளுவன் கூட தமிழன் தானே !?