முகநூல் பயணம்

#முகநூல் பயணம்

பேருந்து ரயில் என்று விமானம் என்றும்
முன்பதிவு செய்ததிலே மகிழ்ந்த பயணம்
ஊர் ஊராய் சென்றதெல்லாம் அந்தக்காலம் - இன்று
ஊர்தியின்றி வலம்வரலாம் முகநூல் பயணம்..!

மின்சக்தி ஓட்டத்திலே முகநூல் ஓடும்
கணினியோடு கைபேசி அழைத்துச் செல்லும்
இணையதள கட்டணங்கள் அதுவே போதும்
பயணசீட்டு ஏதுமில்லா மகிழ்ச்சிப் பயணம்..!

உலகெங்கும் வலம் வரலாம் காலநேரமின்றி
ஊர்முழுக்க பேசிடலாம் ஒலிகளேதுமின்றி
உலக செய்தி அத்தனையும் முகநூல் சுமக்கும்
செய்தித்தாளை புறந்தள்ளி முதன்மை வகிக்கும்..!

விதவிதமாய் பயணி ஏற்றி முகநூல் ஓடும்
வேகத்தடை ஏதுமில்லை விரல்கள் இயக்கும்
ஒவ்வொரு பயணியும் ஓட்டுநர் இதிலே
இறங்கிடுவார் அவரவரும் தம்விருப்பம் போலே..!

வரி ஏய்ப்பு சுங்கக்காரன் வழிதனில் இல்லை
வழி மடக்கும் வசூல்காரன் தொல்லையுமில்லை
எண்ணம்போல் சென்றிடலாம் எத்தனை இடமும்
வண்ணமிகு பாதையன்றோ முகநூல் பயணம்.!

அலிபாபா குகையினுள்ளே நுழைவது போலே
சங்கேத சொல் வேண்டும் முகநூல் ஏற
மறந்துவிட்டால் ஏற்றாது வாயிலில் தள்ளும்
மாற்றான் கை சிக்குமென்றால் சிக்கல் ஆக்கும்..!

ஏறுமிடம் இறங்குமிடம் இரண்டும் ஒன்றே
பயணத்தில் பயணமென்றால் இடமும் இரண்டே
நல்ல நல்ல நட்பு பயணம் நன்மை அளிக்கும்
கூடாத நட்பு பயணம் இன்னல் கொடுக்கும்..!

அன்பானோர் அறிவார்ந்தோர் அனைவரும் உண்டு
அழைப்போடு வாழ்த்தென்று பரிமாறல் உண்டு
நெடுநேர பயணம் இதில் உசிதம் அன்று
அளவோடு கொள்வோர்க்கு பயணம் நன்று..!
---------------------------------------------------------------------------------------------------------
(கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-01-2017) கொடுங்கையூரில்
நடைபெற்ற நண்பர்கள் குடும்ப நற்பணிமன்றத்தின் 20 ஆம்
ஆண்டுவிழாவில் பலவிதமான "பயண" தலைப்புகளில் பல
கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். எனக்கு அளிக்கப்பட
தலைப்பு "முகநூல் பயணம்". இத்தலைப்பினை அளித்து விழாவில்
வாசிக்கப் பணித்த மன்ற நிறுவனர் திரு கன்னையா அவர்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்)
--------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : சொ.சாந்தி (26-Jan-17, 9:24 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : muganool payanam
பார்வை : 333

மேலே