ஜல்லிக்கட்டு
இவ்வருட பொங்கல் உலையில்,
கொதித்தது அரிசியல்ல;
எம் உழவர்களின் உள்ளம்.
தாயிடம் விளையாடக்கூடாதென சேயிடம் சொன்னாற்போல்
எவனோ சொல்கிறான் ஜல்லிக்கட்டை நிறுத்து என்று
வீரத்தில் பிறந்து தன்மானத்தை சுவாசிக்கும் - தமிழனிடம்
பறிக்கப்பட்டவையோ ஏராளம்
சித்தவைத்தியத்தை முடக்கினான்
ஏன் சினம் கொள்ளவில்லை தமிழன்?
கலப்பினமாடுகளை இறக்குமதி செய்தான்
எங்கே போனது நம்தமிழ் கர்வம்?
குளிர்பானங்களைக் குடிக்கச் சொன்னான்
ஏன் குருதி கொதிக்கவில்லை தமிழனுக்கு?
வெந்தும் வேகாததை உண்ணச்சொன்னான்
ஏன் வெறிகொள்ளவில்லை தமிழினம்?
உடையில் புதிய நாகரீகங்களைத் திணித்தான்
உடலை மறைப்பதே நாகரீகம் என்பதை ஏன் தமிழன் மறந்துபோனான்?
விடுதலைபெற்றுத்தந்தவர்களையும், சிறிய திருப்புமுனையால் வாழ்வில் வென்றவர்களையும் பாடமாய் வரலாற்றில் வைத்தான்
ஏன் ஒரு உழவனின் வாழ்க்கையைக்கூட பாடமாக்கவில்லை?
மீத்தேன் வாயுவை உறிஞ்சி எடுத்தான்
தமிழனிடம் பறிக்காமல் என்ன மீதி வைத்தான்?
தமிழ்ஈழத்தை இழிவுபடுத்தினான்
அப்பொழுது தமிழக அரசின் இதயம் என்ன உறங்கிக்கொண்டிருந்ததா?
முதலமைச்சரின் மரண ஊர்வலத்தைக் காண்பித்தான்
தமிழன் ஏன் அதன் பின்னணி மர்மத்தை அறிய இயலவில்லை?
பன்னாட்டு நிறுவனங்களை நிறுவினான்
இயங்காமல் போனது என்நாட்டு நிறுவனமா? என்நாட்டு அரசின் மூளையா?
அசைவத்தை அத்தியாவசியமாக்கினான்
வெட்டும் வெறியில் சிந்தும் இரத்தத்துளியில் எங்ஙனம் சுவை கண்டான் தமிழன்?
கிரிக்கெட்டைக் கொண்டுவந்தான்
தேசியவிளையாட்டிற்காக இந்தியஇனம் ஏன் கதறவில்லை?
சாதிகள் பலவற்றைப் புகுத்தினான்
வள்ளலாரும், வள்ளுவனும் பிறந்த பூமியில் வஞ்சத்தை எவன் விதைத்தான்?
அழகுசாதனப் பொருட்களை அனுப்பினான்
அகத்தில் காணவேண்டிய அழகை ஏன் தமிழ்ப்பெண்கள் முகத்தில் விரும்பினார்கள்?
ஆங்கிலத்தை பயிற்றுமொழி ஆக்கினான்
அத்தியாவசிய மொழியாக அதை ஏன் தமிழன் ஏற்றுக்கொண்டான்?
எம் நூலகங்களை அழித்தான்
நூற்றாண்டு பலகண்ட தமிழன் எப்படி இதைப் பொறுத்தான்?
காளைகளுக்காக போராடும் காளையர்களுக்கு காவல்துறை ஏன் கைகொடுக்கவில்லை?
மாரி பொய்த்தும் காவிரி பொய்த்தும் எம் உழவர் உழுவதை நிறுத்தவில்லை
அவர்களை ஏன் எவரும் மதிக்கவில்லை?
ஓசோனில் ஓட்டை விழுந்ததைப்பற்றி பேசுவோர்,
எம்மக்கள் சோற்றில் மண் விழுந்ததைப்பற்றி ஏன் பேசவில்லை?
அறிவிலிகளை ஆட்சியில் அமர்த்தினோம்
அது தமிழனின் அறியாமையா? அல்லது அலட்சியமா?
செம்மொழிக்காக போராடிய முதுமை,
செந்தமிழனின் வீரவிளையாட்டிற்காக ஏன் போராடவில்லை?
ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கிய அரசு,
ஒருமுறை கூட இதைப்பற்றி ஏன் பேசவில்லை?
உண்ணும் காய்கறிகளில் இருந்து பழங்கள் வரை அனைத்திலும் கலப்பு செய்தான்
அதன் பின்விளைவுகளை ஏன் தமிழன் உணரவில்லை?
இன்னும் எத்தனை காலம் குனிந்திருப்பாய்?
நிமிர்ந்து பார்
உன்முன் இருப்பது சிங்கமோ சிறுத்தையோ அல்ல
ஓர் சிற்றெரும்பு தான்.
இன்று நீ இதை நசுக்காமல் போனால்,
உன் இனமே நசுக்கப்படும் எதிர்காலத்தில்.
மானம் காக்கும் கைகள்,
மரபுகளைக் காக்க இணையட்டும்.
அடையாளம் பறிக்கப்பட்டு அடிமைகளாய் வாழ்வதைவிட,
அறத்திற்காக தமிழனின் உயிர் அற்றுப்போனது என்று இருக்கட்டும்.
சுயத்தை இழந்து சுகிப்பதைவிட,
“சுட்டுக்கொல்லுங்கள் எங்களை” என எழுக தமிழினம்.
இறந்தாலும் என் இரத்தம் தண்ணீராகி எம் உழவப்பெருமக்களுக்கு உதவட்டும்.
தலைதூக்கி நடையிடு தமிழினமே,
தடைகள் உடைத்திடு நீதினமே.
அடுத்த பொங்கலன்று எம் உழவர்களின் மனதிலும், வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்
கண்ணீர்த்துளிகளுடன்,
மதுராதேவி.