யாவும் கவிதை எனக்கு இங்கே

யாவும் கவிதை எனக்கு இங்கே
***
காற்று மரங்கள் பூக்கள் எல்லாம் கவிதைதானே
கலைந்து செல்லும் மேகமெல்லாம் கவிதைதானே
இரவில் எரியும் விண்மீன்கள் எல்லாம் கவிதைதானே
இரவைத் துவைக்கும் விடியல் கூட கவிதைதானே
*
பள்ளி செல்லும் மழலை இங்கே கவிதைதானே
பருவம் கொண்ட மங்கை கூட கவிதைதானே
பாடித் திரியும் இளமை இங்கே கவிதைதானே
பற்கள் தொலைத்த முதுமை கூட கவிதைதானே
*
ஆற்றிலாடும் கயலின் கூட்டம் கவிதைதானே
சேற்றிலாடும் வயல்கள் இங்கே கவிதைதானே
நனைத்து போகும் வான மழையும் கவிதைதானே
நானத்தாலே கவிழும் கதிரும் கவிதைதானே
*
காடு கொண்ட பச்சையெல்லாம் கவிதைதானே
காமம் கொண்ட இச்சைக் கூட கவிதைதானே
கடலும் அலையும் கரையும் கூட கவிதைதானே
கரைகள் கொண்ட நுரையும் கூட கவிதைதானே
*
பால்நிலவு வந்து பொழியும் பனியும் கவிதைதானே
பனியில் குளிக்கும் புல்லும் கூட கவிதைதானே
கடந்து போகும் பறவைக் கூட்டம் கவிதைதானே
கண்கள் காணும் காட்சியெல்லாம் கவிதைதானே
*
யாவும் யாவும் எனக்கு இங்கே கவிதைதானே
யாசிக்கும் வரங்கள் கூட கவிதைதானே
மனக்கதவை திறந்து வைத்து மலராய் சிரித்தால்
மனிதா நீயும் கூட கவிதைதானே...

எழுதியவர் : மணி அமரன் (31-Jan-17, 12:01 pm)
சேர்த்தது : மணி அமரன்
பார்வை : 189

மேலே