வாடகை வீடு
வாடகைக்கு வீடென்பார்
------- வரிசையிலே மக்களினம்
காடெல்லாம் கட்டிடங்கள்
------- காணவில்லை விளைநிலங்கள்
ஏடெல்லாம் எடுத்துரைத்தும்
------- ஏற்பாரும் ஈங்கில்லை .
மாடெல்லாம் வாழ்ந்திடவும்
------- மகத்துவமும் இன்றில்லை !
மண்வீடும் இல்லையினி
------ மணற்கேணி இல்லையினி .
கண்ணெல்லாம் தேடுகின்ற
------ கழனிமேடு இல்லையினி .
உண்பதற்குச் சோறில்லை .
------- உறங்குதற்கு வீடில்லை .
எண்ணமெலாம் வாடகையில்
------- எத்திக்கும் வீடுகளே !
அன்னார்ந்து பார்க்கின்றது
------- அபார்ட்மென்ட் வீடுகளே !
முன்னாலே போனாலோ
------- முழுதாக வாசலுமே
தன்னாலே தெரியாதத்
------- தரமற்ற மாடிகளே !
நன்னாளாய் மாறிடுமா ?
------- நலமும்தான் சேர்ந்திடுமா?
மாடிவீட்டில் வாழ்பவனோ
------- மண்நோக்கிப் பார்ப்பதில்லை .
ஓடிஓடி அலைகின்றார்
------ ஒன்றாக வாழ்ந்திடவே
வாடியுமே தேடுகின்றார்
-------- வாடகைக்கு வீட்டினையும்
நாடினாலோ நரகவாழ்க்கை
-------- நாற்றிசையும் சாக்கடைகள் !
மனிதனினம் மாறிடுமா ?
------- மங்கிவாடி வீழ்ந்திடுமா ?
தனிமனித வாழ்க்கைக்குத்
------- தகுதியான வீடில்லை .
இனியேங்கே சுதந்திரமும்
------- இன்னலுமே வாடகைதான் !
கனிவானப் பேச்சிற்கே
------- காசினியில் இடமில்லை !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்