பசி என்னும் காரணகர்த்தா
வசந்தங்களை கண்டிராத கண்கள்
ஓட்டை குடிசைக்குள்
ஒய்யாரமாக வாழும் வறுமை
செய்தித்தாள் உதிர்க்கும்
வயிற்று வலி மரணங்களில்
மறைக்கபட்ட பசி என்னும்
காரணகர்த்தாவோடு வாழ்க்கை
அவலமான முகம்
பெற்ற போதே கொன்றிக்க கூடாதா
எனும் என் கேள்விக்கு
பதிலாய் கண்ணீரை மட்டும்
உதிர்க்கும் தாய்
குடியோடு
போய் சேர்ந்து விட்ட தகப்பன்
மரணத்தருணத்தில்
இழுத்து கொண்டிருப்பது போல்
ஒரு வாழ்க்கை
பர்ஸ் நிறைந்து இருப்போர் மத்தியில்
அரசு கோட்டாவில் வந்த நான்
நூடுல்ஸ் உண்ணுவோர் மத்தியில்
புழு மீதம் வைத்த உணவுடன் நான்
குளிரூட்டியில் இருந்தவர் மத்தியில்
புழுதி காற்றின் சுவாசத்தில் நான்
குடுவையில் பளபளப்பாக குடிப்பவர் மத்தியில்
செம்மண் கலந்த குடிநீருடன் நான்
வித விதமாய் உடையணிபவர் மத்தியில்
விசித்திரமாய் தெரியும் நான்
அசிங்கத்தின் உச்சத்தில்
அவசரமாய் நான் தேடிய
தூக்கு கயிறு நினைவூட்டியது
என் தாயும் அதே கயிறிடம்
எனக்காக தோற்றது
அவளின் வலிகளுக்கு மத்தியில்
அடிக்கடி வந்து போகும்
இன்பமான
என் வருங்கால கனவை
கெடுக்கவும் மனமில்லை
ஏளனங்களை மட்டும் சுமக்கும்
என் வாழ்க்கை புத்தகத்தில்
சாதனைகளையும் ஏற்ற வேண்டும்
அம்மா வருந்தாதே
கண் இல்லாத கடவுளை பற்றி
எனக்கு கவலையில்லை
நீ
கண் கலங்கி விடாதே
நான் இருக்க
- கி.கவியரசன்