மெல்ல விலகும் ஆயுள் - புதுக்கவிதை

தரையிலும் கண்ணீர் !
தண்ணீரிலும் கண்ணீர் !
கரையிலும் கண்ணீர் !
கனவிலும் கண்ணீர் !

கடலே எங்கள் வாழ்க்கை !
கரையிலே எங்கள் குடும்பம் !
படகிலே ஓட்டை விழுந்தால்
பரதவர் வயிறு நிரம்புமா ?

தண்ணீரில் நீந்தக் கற்றோம்!
தரைதனில் கண்ணீர் விட்டோம் !
பாரினில் வாழவழி இல்லை ;
பலநாள் மீன்களாய்த் துடித்தோம் !

மீனவர் சொத்து மீன்தான் !
மீனவர் சொந்தம் மழைதான் !
மீனவர் இல்லம் படகுதான் !
மீனவர் உலகம் கடல்தான் !

இலங்கை எல்லையிலே
இயல்பாய் செல்லும் மீனவன்
நடுக்கடலிலே சிக்கி
நல்வாழ்வாம் உயிரை இழக்கின்றான் ;சுழன்றடிக்கும் சுறாவளியோ!
போர்த்தொடுக்கும் புயலோ
சிதற அடிக்கும் சுனாமியோ
அங்கு ஏற்படவில்லை ;


இது எதுவுமே நடவாதபோது
நம்தமிழர் இனம் மட்டும்
மங்காத சிறப்புடை மானுடன் மட்டும்
எப்படி மரணத்தின் பிடியில் .......கோரகுண்டுகளால் !!
மெல்லவே விலகுகிறது எங்கள் ஆயுள் !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-17, 9:34 pm)
பார்வை : 94

மேலே