தமிழில் படைப்பாளிகளை உருவாக்குவோம் - கொஞ்சம் இதையும் படிங்க

"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"

- கணியன் பூங்குன்றனார்

வாழ்வின் பொருளை ஒரே பாடலில் உணர்த்தும் வல்லமை உள்ள என் தமிழ் மொழிக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ் வளர்ப்பு, தமிழில் வளர்ந்த நாம் இன்று தமிழை வளர்க்க போராடுகிறோம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பூமியில் சங்கம் வைத்து அதை அழிவில் இருந்து காக்க முயன்று கொண்டிருக்கிறோம். அந்நிய மொழியும் அந்நிய மோகமும் நமது தமிழ் தாயின் ஆடை மீது சகதி அடித்து கொண்டிருக்கிறது சலவை செய்ய வேண்டிய நாமும் வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்து செல்கிறோம்.

பாக்கள் ஆயிரம் இருந்தும் நுனி நாக்கில் ஆங்கிலம் வைத்து திரிகிறோம். நமது பழம்பெருமைகளில் மட்டுமே இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது நமது தமிழ். செம்மொழி என பெருமைப்பட நாம் பேசும் இந்த நேரத்தில் நம்மொழி அழிந்து வரும் மொழிகள் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பும் உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மொழி அழிவது என்பது மொழியைப் புழங்காவிட்டால், மொழியைப் பேசாவிட்டால், மொழியைக் கருத்துத் தொடர்புக்குப் பயன்படுத்தாவிட்டால் நடைபெறும் ஒன்று. அந்த விதத்தில் பார்த்தால் நாம் நகர்ந்து கொண்டிருக்கும் திசையும் நமது மொழியை மெல்ல அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாகவே இருக்கிறது.

நெல்சன் மண்டேலா அவர்கள் குறிப்பிடுவார்கள், உங்களுக்குத் தெரிந்த மொழியிலே ஒருவன் பேசினால் அது உங்கள் அறிவைச் சென்று சேரும்; ஆனால், உங்கள் தாய்மொழியிலே பேசினால் அது உங்கள் உள்ளத்தையும் ஊடுருவிச் செல்லும் என்று. அந்த வகையில் தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய அழுகையோடு, சிரிப்போடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி. அந்தத் தாய்மொழிக்கு முதன்மை வழங்குகின்றீர்களா? தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமை. ஆனால், அந்தக் கடமையைச் செய்கின்றோமா?

அதே போல் ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விஷயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது. எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது.

ஒரு தமிழ் கவிதை நினைவிற்கு வருகிறது,

வரும் காலத்தில்
தமிழ்நாட்டில் தமிழர்கள் இருப்பார்கள்
தமிழ்
தமிழ்நாடு என்ற பலகையில் மட்டும் இருக்கும் !

எத்தனை வலிமிகுந்த வரிகள் இவை, ஆனால் உண்மை இல்லாமல் இல்லை. நமது பிள்ளைகள் உண்மையில் தமிழ் கற்க தமிழில் பேச விரும்புகிறீர்களா? அல்லது நமது பிள்ளைகள் தமிழ் கற்று தமிழில் பேச வருவதை நாம் விரும்புகிறோம்? நமது மனசாட்சி இதற்கு விடை சொல்லட்டும்.

இன்று தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் ஏழரை கோடி விரைவில் அது எட்டு கோடியாக வாழ்த்துக்கள், இந்த ஏழரை கோடியில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமிழுக்காக போராடுபவர்கள் மீதமுள்ள ஆறு கோடி பேருடனும் தமிழ் போராடுகிறது.

நாம் தமிழை வளர்க்க களத்தை தேடுகின்றோம் ஆனால் உண்மையான களம் நமது வீட்டில் நம்மை சுற்றியே இருக்கிறது. ஒன்றும் வேண்டாம் நமது பிள்ளைகளை அமர்த்தி ஒரு பத்து நிமிடம் அவர்களோடு பேசுவோம் அதிலேயே தெரிந்து விடும் நமது தமிழ் செல்லும் திசை. அந்த பத்து நிமிடத்தில் குறைந்தபட்சம் ஒரு இருபது ஆங்கில சொல்லோ அல்லது வேறு மொழி சொல்லோ நிச்சயம் வரும். இவ்வளவு ஏன் இன்றைய பிள்ளைகள் தனது பெயரை ஆங்கிலத்தில் பிழையின்றி எழுதுகிறார்கள் ஆனால் தமிழில்? நான் சொல்ல விரும்பவில்லை. சரி விடுங்கள் அதுவும் கடினமாக இருந்தால் சில ஆங்கில வார்த்தைகளை சொல்லி அதற்கு தமிழில் சொல்ல சொல்லுங்கள் உதாரணமாக T.V , கம்ப்யூட்டர் , கால்குலேட்டர் ..... எத்தனை பிள்ளைகள் சொல்கிறார்கள் என பாருங்கள் ஆனால் கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள் திருப்பி அவர்கள் ஏதேனும் கேட்டுவிட போகிறார்கள் பிறகு நாம் விழிபிதுங்க நேரிடலாம்.

ஆக நம்மால் நமது வீட்டிலேயே தமிழை கொண்டு சேர்க்க இயலாத போது நம்மால் இந்த உலகிற்கு சரி விடுங்கள் குறைந்த பட்சம் நமது தமிழ்நாட்டிற்கு எப்படி கொண்டு சேர்க்க போகிறோம்? நாம் தமிழ் பணி செய்கிறோம் என்றால் முதலில் நமது வீட்டில் இருந்து தொடங்குவோம், நம்மிலிருந்து தொடங்குவோம்.

மேலும் இது எனது ஒரு வகையான பார்வை நாம் பொதுவாக கவிதை புத்தகமோ அல்லது நாவல், கதை என எந்த வகையான புத்தகமாக இருந்தாலும் சரி நாம் முதலில் தேடுவது பிரபலமானவர்களின் புத்தகத்தை தான்,

இந்த கவிதையை இங்கே சொல்ல விரும்புகிறேன் ,

கவிதைக்கு வேண்டுமானால்
வாயும் வயிறும்
இல்லாதிருக்கலாம்
ஆனால்
கவிஞனுக்கு உண்டு

படைப்பாளிகளை உருவாக்குங்கள்
பிரபலங்களுக்கு தன் கவிதையை
விற்க தெரியும்
ஒரு ஏழைக் கவிஞனுக்கு
அது விற்றால்தான்
விறகு எரியும்

கவிதை என்றாலே
வைரமுத்துவையோ
கண்ணதாசனையோ தேடாதீர்கள்
ஏதோ ஒரு ஏழை படைப்பாளியின்
ஏக்கம் நிறைந்திருக்கும்
புத்தகமும் அங்கே இருக்கும் தேடுங்கள்

வயிறு நிரம்பாதவன் மூளையில்
வரிகள் நிரம்பாது
பிரபலமாக தேடாமல்
ஒருவனை பிரபலமாக்க தேடுங்கள்

தமிழ் வளர்க்க
தமிழ் தமிழ் என பாடுவதை விட
ஒரு தமிழ் படைப்பாளியை
வளர்க்க கூடுவது மேல்

- கி.கவியரசன்

உண்மையில் நாம் தற்போது செய்ய வேண்டியது தமிழ் படைப்பாளிகளை ஊக்க படுத்துவதும் உருவாக்குவதும் தான். தமிழ் படித்தால் வேலை இல்லை தமிழ் எழுதினால் மதிப்பில்லை என திசை மாறும் எத்தனையோ நல்ல படைப்பாளிகளுக்கு நாம் நம்பிக்கையும் அங்கீகாரத்தையும் தரவேண்டும்.

இருந்ததை விற்று
கவிதை எழுதினேன்
எழுதிய புத்தகங்கள் எல்லாம்
என்னிடமே பத்திரமாய் உள்ளது
என் மனைவியையும் பிள்ளையையும் தவிர

- ஏழை கவிஞன்

எத்தகு கொடுமை இது , இதுபோன்ற நிலை இனியும் வரக்கூடாது...... நல்ல படைப்புகள் பிரபலங்களிடம் மட்டுமே வருவதில்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.

இதுவே எனது இறுதி வேண்டுகோள்,

படைப்புகளை உருவாக்குவோம் அதற்கு
படைப்பாளிகளை உருவாக்குவோம்
படைப்பாளிகளை உருவாக்குவோம் அதற்கு
படிப்பவர்களை உருவாக்குவோம்

நன்றி
கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (3-Feb-17, 11:30 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 653

மேலே