அன்பெனும் - ஒரு விகற்ப இன்னிசைஅந்தாதி வெண்பாக்கள்
அன்பெனும் ஆயுதம் ஆண்டிடும் நாட்டினை
வன்முறை நீங்கிடும் வாழ்வினில் நல்லெண்ணம்
தன்னகத்தே வந்திடும் தாராள நெஞ்சத்தில்
உன்கைகள் தந்திட உண்.
உண்பாயே வெண்புறாவே உள்ளன்பால் தந்திடும்
மண்ணுலகின் நாயகனாம் மக்களின நண்பனாம்
கண்பார்வை மங்காதக் கண்ணியத்தின் செம்மலாம்
எண்ணற்ற ஊனங்கள் ஏற்று .
ஏற்றிடுவாய் நல்லமனம் எத்திக்கும் நல்வாழ்வு
மாற்றமில்லை ஈங்கின்றே மண்ணில் மனிதநேயம்
சாற்றுகின்ற மாமனிதன் சந்ததிக்குச் சான்றாவான்
போற்றிடுவோம் நாளும் பொதிந்து .
பொதிந்து கொடைகுணத்தைப் போற்றும் மனிதன்
கதியாக ஊனமான கால்களுமே . ஆனால்
மதியாய் மனிதநேயம் மாற்ற இவனின்
விதியாக அன்பே வியப்பு .
வியப்புடன் நோக்கினால் விந்தையாம் அன்பைத்
தயக்கமின்றித் தந்தால் தழைக்கும் உலகம்
மயக்கமும் வேண்டாமே மங்கிடுமே அன்பும்
உயர்வென நேசத்தை ஊன்று .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

