கவிதையடி நீ எனக்கு
அன்று ...
உனது பிறந்த நாள்
என்னை
அழவும் சிரிக்கவும் செய்த
முதல் நாள்
கருவைச்சுமந்த வயிற்றிலே
அறுவைச் சிகிச்சையாம்
உன் அன்னைக்கு
அதிர்ந்து போனேன்
மனம் மரித்தது
பக்கத்தில் இருந்த மாமி
ஆறுதல் சொல்லி என்னைத் தேற்றிட
அந்த நிமிடத்தில்
மருத்துவர் மட்டுமல்ல
மாமிகூட சாமியாகத் தெரிந்தாள்
நிமிடங்களின்
ஒவ்வொரு நகர்வும்
நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சில் தைத்தது
கழிந்தன சில மணித்துளிகள்
வீர் என்ற சத்தம்
எனக்கு மட்டும் கேட்டதைப்போல் பிரம்மை
சற்று நேரத்தில் செவிலிப்பெண்
இரு கரங்களில்
உன்னை ஏந்திவந்து
பெண் குழந்தை பிறந்திருக்கு என்றாள்
மெய்ச்சிலிர்த்து நான்
உன்னை வாங்குவதற்குள்
மாமி இரு கைகளில்
ஏந்திக்கொண்டாள்
பிறகு பிஞ்சு மலரை
பஞ்சுபோல் வாங்கினேன்
ஈர ரத்தம்
உன் உடம்பிலும்
என் இதயத்திலும் !
அடுத்த நிமிடம்
உன் அன்னையின் நினைவெனக்கு
மயக்கத்தில் இருப்பதாக செவிலி சொல்ல
சற்று ஆறுதல் பெரு மூச்சு எனக்குள்
அடையாள எண்ணுடன்
வில்லை ஒன்று உன் வலது கையில்
உற்றுப்பார்த்தேன்
அடடா..என்ன அதிசயம்!!
என் அம்மாவைப்போல்
உனக்கும் இரட்டை விரல்
இது நடந்து கொண்டிருக்கும்போதே
மீண்டும்
உன்னை வாங்கிக்கொண்டு செவிலி
அறைக்குள் சென்றுவிட
இரண்டு மணி நேரம்
இரு யுகமாய் கழிந்தது
பின் பாலூட்ட சொல்லி
பாங்கு சொன்ன செவிலியிடமிருந்து
இரு கைகளில் ஏந்தினேன் உன்னை
கண்மலராக் கமலப்பூ
கைகளிலேப் பூத்தது
உச்சி முகர்ந்து
உன் பட்டு முகத்தில்
முகத்தில் படாமல் முத்தமிட்டேன்
என் அன்னை வயிற்றில்
நான் பிறந்த அதே வாசம் !
தன் கையில்
உன்னை வாங்கியவாறு
பால் வாங்கிவாடா என்று மாமி சொல்ல
நானும் படி இறங்க அடி எடுத்தேன்
அப்போது கீழே கிடந்தது
யாரோ தொலைத்த
ஐந்து ரூபாய் நாணயம்
குனிந்து எடுத்து நிமிர்ந்தேன்
என்னைப் பார்த்து மாமி சொன்னாள்
உன் மகள் அதிர்ஷ்ட்டக் காரியென்று
மறுத்து நான் சொன்னேன்
அதிர்ஷ்ட்டக் காரன் நானென்று
ஆம்
உன்னை மகளாகப்பெற்றதனால்
காலங்களின் நகர்வில்
காயங்களைச்சுமந்தே
பயணித்த எனக்கு
காயத்திற்கு மருந்தாக
கடவுள் தந்த வரமாக வந்துதித்தாய்
ஆம் உன் சிரிப்பு வரம் எனக்கு
சிட்டுக்குருவி வாய்த்திறந்தாற்போல்
நீ பேசும் புரியாத வார்த்தையிலும்
எத்தனைப்புரிதல்கள் !
இப்படித்தான் இறைவன்
மொழியைப் படைத்திருப்பானோ
என்று எண்ணத்தோன்றும் எனக்கு
எட்டுவைத்து நீ நடந்து
பள்ளி செல்ல ஆரம்பித்தாய்
வேலை காரணமாய்
நான் வெளியூர் பிரிந்து வர
நீ விம்மி அழும்போது
வெடிப்பதுபோல் இதயம்
இளகி கனத்துவிடும்
சனி ஞாயிறில்
உனைப்பார்க்க வருவேனென்பதால்
அந்த சனி ஞாயிறு
எப்பவரும் என்பதை அறியவேண்டியே
வார நாட்களை விரைவாய் கற்றுக்கொண்டாய்!
காலத்தின் பலநாட்கள்
உன்னைக்காணாமலே
உதிர்ந்து போயின
சிங்காரச்சிறு நடையும்
செவ்விதழில் குறு நகையும்
கொஞ்சு தமிழ் நறு மொழியும்
அஞ்சுகத்தை விஞ்சிடுமே !
முற்றிவிட்ட அறிவொழியாய்
மாசு
தட்டிவிட்ட பொற்கொடியாய்
நான் படைத்த தேன் மழலை
என் வாழ்வில் ஓளி ஏற்றிவிட்டாய்
கான் படைத்த தேன் கூடு
நீ கால் பதித்த என் வீடு
அறிவுச்சுடர் விளக்கு
ஆய்ந்தெடுத்த அகல்விளக்கு
தெரிவு செய்த்தெடுத்த
தீதில்லாத நல்ல முத்து
நெருஞ்சிப் படர்ந்திருந்த
நெடும்பாதை கால் பதித்து
குறிஞ்சி மலர் உன்னை
கொண்டு வந்தேன் பூசையறை ..!
ஆம் நீ என் குறிஞ்சியாழினி!!